அறியப்படாத தமிழகம் என்ற தலைப்பில் இன்றைய மறைக்கப்பட்ட வரலாறு
சிறு தெய்வங்களின் உணவு :-
தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக்கு உரியவனாக இருப்பன சிறு தெய்வங்களே. சிறு தெய்வம் என்ற சொல்லாட்சி முதன் முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே இப்பெயர் வழக்கு மேலோர் மரபு சார்ந்ததாகும். வழிபடும் மக்களுக்கு இவை தெய்வங்களே. சிறு தெய்வங்கள் என சுட்டப்படுவனவற்றின் அவற்றின் அடிப்படையான அடையாளங்கள் அவற்றை பிராமணர் புசிப்பதில்லை என்பதும் அவை ரத்தப் பலி பெறுவன என்பதும் தான். பலி என்பது வடமொழிச் சொல். படைக்கப்படுதல் என்பது அதன் பொருள். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறு தெய்வங்கள் உள்ளன. சிறு தெய்வ கோயில் இல்லாத கிராமமே இல்லை எனலாம். இவற்றில் செம்பாதிக்கு மேல் தாய் தெய்வங்கள். சிறிதெய்வ கோயில்களில் பெண் தெய்வங்களின் அம்மன் கோயில்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.ஆண் தெய்வங்களின் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.
இத் தெய்வங்கள் பெரும்பாலும் சினங் கொண்ட உக்கிர நிலையில் தான் அமைந்திருக்கின்றன. எனவே இவற்றை அமைதிப்படுத்த ரத்த பலி தருவது மரபாக இருந்து வருகிறது. பிராமணர், சைவ வேளாளர் தவிர்த்த எல்லா தமிழ் சாதியார் குடும்பங்களும் ஏதேனும் ஒரு சிறு தெய்வ வழிபாட்டில் தொடர்பு உடையவையே. எனவே சிறு தெய்வ வழிபாட்டிற்குரிய மக்கள் அனைவரும் புலால் உண்ணும் சாதியினரே. எனவே ரத்தப் பலி கோயில்களில் தவறாது இடம்பெறுகிறது. மேற்கூறையுடைய சிறு தெய்வ கோயில்களில் மட்டும் கல்லினால் ஆன சிறிய பலிபீடங்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆட்டுக்கடா,சேவல், எருமைகடா,பன்றி ஆகியவை பலியிடப்படுகின்றன. விதிவிலக்காக ஒரு சில கோயில்களில் பெண் ஆடு பலியிடப்படுகிறது இதுவல்லாமல் ஆட்டுக்கடா, ஆண் பன்றி,எருமைக்கடா, சேவல், பன்றி ஆகியவை பலியிடப்படுகின்றன. விதிவிலக்காக ஒரு சில கோயில்களில் பெண் ஆடு பலியிடப்படுகிறது. இதுவல்லாமல் பறவைகளும் பலியிடப்படுகின்றன. பெரும்பாலான கோயில்களில் ஆட்டுக்கடா யின் தலை அறுக்கப்பட்டு பலிபீடத்தின் மீது வைக்கப்படுகிறது. சில இடங்களில் ஆட்டின் கால்களில் ஒன்று அறுக்கப்பட்டு ஆட்டின் வாயில் அதை கவ்வுமாறு கொடுத்து பலிபீடத்தில் வைப்பர். சேவலை பலியிடும்போது அவ்வாறு செய்யப்படுவதில்லை மாறாக சேவலின் தலையில்லா உடம்பில் ஒரு குச்சியில் செருகி தெய்வத்தின் முன் வைக்கின்றனர். பன்றி வளர்க்கும் சாதியாரே பெரும்பாலும் பன்றியை பலியிடுகின்றனர். தென் மாவட்டங்களில் உக்கிரம் மிகுந்த பெண் தெய்வங்களுக்கு ரத்த பலியிடும் முறை சற்று அச்சம் தருவதாகவே அமைகின்றது.
நிறை சினையாக உள்ள ஒரு ஆட்டை கொண்டு வந்து பெண் தெய்வத்தின் முன் நிறுத்துவர் வேல் போன்ற ஒரு கருவியினால் ஆற்றின் வயிற்றை குத்தி கிழித்து அதன் உள்ளே இருக்கும் குட்டியை எடுத்து பலிபீடத்தின் மீது வைக்கின்றனர். குத்தி கிளிப்பதனால் பெண்ணாடு இறந்துவிடும். குட்டியும் இறந்துவிடும். இவ்வாறு பலியுடுவதே சூலாடு குத்துதல் என்பர். குத்துயிராக பலிபீடத்தின் மீது இளம் குட்டியை வைத்தலை' துவளக் குட்டி கொடுத்தல் என்பர் துவளும் குட்டி என்பதே துவள குட்டி ஆயிருக்க வேண்டும். சூலாடு குத்துவதற்கு முன்னால் பெண்களையும் குழந்தைகளையும் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி விடுவர்.பன்றியை பலி கொடுக்கும் போது சில இடங்களில் தலையை வெட்டாமல் பன்றியை மல்லாக்க கிடத்தி அதன் மார்பை பிளந்து இதயத்தை எடுத்து பலிபீடத்தின் மீது வைக்கும் வழக்கம் உள்ளது. சில இடங்களில் சாமி அடிகள் பலியிடப்பெறும் விலங்குகளின் ரத்தத்தை குடிப்பதுண்டு. அவ்வாறு ரத்தம் குடிக்காத கோயில்களில் தெய்வத்தின் முன் படைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களின் மீது அந்த இரத்தம் தெளிக்கப்படும். சினம் மிகுந்த ஆண் தெய்வ கோயில்களில் கோயிலுக்கு சற்று தள்ளி இருட்டில் சென்று சாமி ஆடுபவர் சோற்றுத் திறளை ஆகாயத்தில் எரிகின்றனர். அவ்வாறு வீசி எரிய சாமி ஆடி கைகளை உயர்த்தும்போதே இருட்டில் மேலிருந்து வந்து தெய்வங்கள் அள்ளிக் கொண்டு போய் விடுகின்றன என்பது நம்பிக்கை. தெய்வங்களின் அருளாட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியிலேயே சாமியாடி ஊர்வலம் வருகிறார்.
அவ்வாறு வரும்போது சந்திகளில் ஆகாயத்தை நோக்கி முட்டைய எறிவதும் உண்டு. நிலத்தொழிலாளர்கள் வணங்கும் சிறு தெய்வங்களில் சில ஊறவைத்த அரிசியி னையும் முளைகட்டிய பயறு வகைகளையும் படையலாகப் பெறுகின்றன இவ்வகையான தெய்வங்கள் சமைத்த உணவினை படையலாகப் பெறுவதில்லை. இவை உணவு சேகரிப்பு சமூகத்தில் பிறந்த தெய்வங்களாக இருக்க வேண்டும்.ஊர் தெய்வங்களுக்கோ சாதி தெய்வங்களுக்கோ குலதெய்வங்களுக்கோ நடைபெறும் திருவிழாக்களில் பொங்கலிடும் மரபு உண்டு அனைவரும் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர். எரிபொருளாக பனை ஓலைகளை மட்டும் பயன்படுத்தும் வழக்கமே பரவலாக காணப்படுகிறது. பொங்கல் படையலும் ரத்தப் பலியும் சில கோயில்களில் சேர்ந்தே தரப்படுகின்றன. அவ்வகையான கோயில்களில் பலியிடப்படும் விலங்கின் ரத்தத்தை படைக்கப்படும் உணவின் மீது தெளிப்பது வழக்கமாக இருக்கின்றது. பொங்கலையும் ரத்தப் பலியையும் தனியாக நடத்தும் கோயில்களில் பொங்கல் படையலைச் சைவ படைப்பு,ஆசார படைப்பு, சுத்தப் படைப்பு என்று அழைக்கின்றனர் ரத்த பலியோடு கூடிய படைப்பு மாமிச படைப்பு என்று அழைக்கப்படுகிறது.
ஒரு கோயில் வளாகத்தில் பல சிறு தெய்வங்கள் இருக்கும்போது அய்யனார் போன்ற ஒன்று இரண்டு தெய்வங்கள் ரத்தப் பலி பெறாத சுத்த முகத் தெய்வங்களாக இருக்கும். ரத்த பலி தரும் போது தெய்வங்களின் சந்ததியை திரையிட்டு மறைத்து விடுவது வழக்கம் குமரி மாவட்டத்தில் சிறு தெய்வ கோயில் திருவிழாக்கள் சிலவற்றை ஊட்டுக் கொடுத்தல் அதாவது உணவு கொடுத்தல் என்று கூறுகின்றனர். பொதுவாக ரத்தப் பலி கொடுப்பது திருவிழாவின் முடிவு நிகழ்ச்சியாக அமைகின்றது. தாய் தெய்வங்கள் தம் மக்களைக் காக்க அரக்க வடிவிலான தீமையை ஆயுதம் தாங்கி போரிட்டு அழி க்கின்றன. விஜயதசமி எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பத்தாம் நாளில் எருமைத்தலை அரக்கனை தாய் தெய்வம் போரிட்டு அழிக்கின்றது. இச்சடங்கு ஒரு பாவனையாக பெரும்பாலும் கோயிலுக்கு சற்று தள்ளி அமைந்த ஒரு திடலில் நடக்கிறது. இந்தப் போர் நிகழ்ச்சி முடிந்தவுடன் போரிட்ட களைப்பை தீர தாய் தெய்வத்திற்கு உளுந்தஞ் சுண்டலும் பானக் கரமும் படைக்கப்படும். தென் மாவட்டங்களில் ஒன்று இரண்டு கோயில்களில் மட்டுமே இது காணப்படுகிறது. பானக்கரம் என்பது புளியும், கருப்பு கட்டியும் நீரில் கரை த்து ஆக்கப்பட்ட நீர் உணவு.அக்காலத்து போர்க்களத்தில் களைப்படைந்த வீரர்களுக்கு தரப்பட்ட உணவாக இது இருந்திருக்கலாம். சிறு தெய்வ வழிபாட்டில் பல கூறுகள் தமிழர்களின் போர் நெறிகளோடு தொடர்புடையவனாக தோன்றுகின்றன. உளுந்தும் பானக்கரமும் கூட அப்படி வந்த உணவுப் பழக்கம் என்று கொள்ள முடிகிறது.
தொகுப்பு. மூ. செல்வகுமார் பட்டதாரி ஆசிரியர் (வரலாறு ) அரசு உயர்நிலைப்பள்ளி புதுப்பாளையம் பண்ருட்டி ஒன்றியம் கடலூர் மாவட்டம்
0 கருத்துகள்