வாழ்க்கையில் எல்லோரும் முனைப்போடு செயலாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்; ஆனால் அவையெல்லாவற்றிலும் வெற்றி கிட்டி விடுகிறதா?.
சிலவற்றில் தொடங்கியவுடன் தோல்வி!; சிலவற்றில் பாதிவரை வெற்றி! பாதிக்குப்பின் படுதோல்வி!; சிலவற்றில் இறுதிவரை வெற்றி;
ஆனால் எல்லைக் கோட்டை எட்டிப்பிடிக்கும்போது பேரிடியாகும் பெரும்தோல்வி!; இப்படித் தோல்விகள் தொடர்ந்து வரக் காரணங்கள் என்ன?.
எல்லாம் சரியாக இருந்தும் வாய்ப்பு வாய்க்காமல் போனதே தோல்விக்குக் காரணம் என்று சிலர் சொல்லலாம். அது என்ன வாய்ப்பு?.
வாய்ப்பது வாய்ப்பு!; அடடே! அவ்வளவுதானா?. ஆமாம் அவ்வளவுதான். ஆனால் எவை வாய்ப்பது வாய்ப்பு?.
ஒரு செயலை அல்லது ஒரு தொழிலைச் செய்யும்போது அதற்கான முதலீடு வேண்டும்/ உரிய திட்டமிடல் வேண்டும்; நேரமும் இடமும் பொருந்தி வர வேண்டும்.
நேரம் என்றால் ராசிபலன் கணிப்பதல்ல; ஒரு தேநீர்க்கடை தொடங்குவதற்குக் கூட அது குளிர்காலமாக இருக்க வேண்டும்.
ஏசி மிஷன் விற்கும் விளம்பரத்தைக் கோடைகாலத்தில் போட்டால் தான் விற்பனை நம்மைக் குளிர்விப்பதாக இருக்கும்.
ஆக, காலம், இடம், கருவி ஆகியவற்றின் துணை கொண்டு வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வாய்ப்பு இரு வகையில் வரும்; ஒன்று அதுவாக வருவது; வாய்ப்பது!. மற்றொன்று நாமே உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப வெற்றிகளையும் லாபங்களையும் குவிக்கத் திட்டமிடுவது.
எப்படியாயினும், அதுவாக வாய்க்கும் வாய்ப்பிற்கே வீரியம் அதிகம். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெற்றியை நிர்ணயிக்கும் வாய்ப்பு வருகிறது.
ஆண்டு முழுவதும் வகுப்பறைகளில் கற்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை தேர்வாக எழுதித் தமது அறிவின் திறத்தை வெளிப்படுத்திக் காட்டும் வாய்ப்பே தேர்வு.
நல்ல பணிவாய்ப்பைப் பெறுவதற்கான தருணங்களைப் போட்டித் தேர்வுகள் உருவாக்கித் தருகின்றன.
எது எப்படியாயினும், வெற்றியாளர்களாகச் சாதிக்க விரும்புபவர்கள், வாய்ப்பு வாய்க்கும் வரை காத்திருந்தே ஆகவேண்டும் .
அந்தக் காத்திருப்பும் எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு ஓர் அழகிய உதாரணத்தைக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார் திருவள்ளுவப் பெருந்தகை.
குளக்கரைகளில், ஆற்றுப் படுகைகளில் ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு.
அதுவும் ஒற்றைக்காலை ஊன்றி, மற்றொரு காலைத் தூக்கித், தனது நீண்ட கூரிய அலகைத் தண்ணீர்ப் பரப்பளவோடு சமமாக்கி வைத்து, எந்த நேரத்தில் வாய்த்தாலும் அந்த மீனை ஒரே குத்தில் குத்தித் தூக்கிவிடும் விழிப்புணர்வோடு காத்திருக்குமாம் கொக்கு.
கொக்கொக்கக் கூம்பும் பருவத்து
மற்று அதன்
குத்தொக்கச் சீர்த்த இடத்து.
வாய்ப்புக்காகக் காத்திருத்தல் என்பது தூங்கி வழிந்துகொண்டு சோம்பேறியாகச் செயலின்றி இருப்பதல்ல; தனக்குரிய வாய்ப்பு வரும்வரை, விழிப்புணர்வோடு கவனமாகக் காத்திருப்பது;
வாய்த்தவுடன் கொத்தித் தூக்கிவிடும் வீரியத்தோடும் சுறுசுறுப்போடும் காத்திருப்பது ஆகும்.
வாழ்க்கையில் சிலபேரைப் பார்த்திருப்போம்; ஐம்பது வயதுவரை எந்த வாய்ப்புமே வாய்க்கவில்லை; இன்னமும் காத்துக்கொண்டேதான் இருக்கிறோம் என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
நான் படித்த படிப்பிற்கான வேலை இன்னும் கிடைக்கவில்லை; அதனால் வேலைக்குப் போகாமல் காத்திருக்கிறேன்;
நான் எதிர்பார்த்த மாதிரி மணமகளோ, மணமகனோ கிடைக்கவில்லை; அதனால் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருக்கிறேன்;
வீடு வாசல் வாங்குவதற்கேற்ற வருமானத்தை இன்னும் எட்டிப் பிடிக்கவில்லை; அதனால் சொந்த வீடு வாங்காமல் காத்திருக்கிறேன்;
இப்படி எதற்கெடுத்தாலும் காத்திருப்பவர்களுக்குக் காத்திருப்பதே சுகமாகிப் போகுமேயொழிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது வாய்க்காமலேயே போய்விடும்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
*இந்த நாள் இனிய நாளாகட்டும்.*
0 கருத்துகள்