Ad Code

Ticker

6/recent/ticker-posts

" பழியாப் பத்து "என்றால் என்ன?

 



" பழியாப் பத்து " 


மதுரை கூடலூர் கிழார் இயற்றிய "முதுமொழிக்காஞ்சி " என்னும் நூலில் ' பழியாப் பத்து ' என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள பத்துப் பாடல்களை இங்குக் காண்போம்.  "இவற்றைப் பழிப்பதால் ஒரு  பயனும் இல்லை"  என்று சான்றோர்கள் பட்டியலிட்ட பத்துக் கருத்துகளைக் கூறுவதால் இப்பாடல்களைப் 'பழியாப் பத்து ' என்று அழைக்கிறார்கள். 


1.ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் 

யாப்பு இலோரை இயல்புகுணம் பழியார்.


கடல் சூழ்ந்த உலகில் மக்களுக்குள் , எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழும் இயற்கையான தாழ்குணத்தை யாரும் பழிக்கமாட்டார்கள். 


2.மீப்பு இலோரை மீக்குணம் பழியார்.


மேன்மைக்குணம் இல்லாதவர்கள் மேன்மையான செயல்களைச் செய்யவில்லை என்பதற்காக யாரும் அவர்களை பழிக்கமாட்டார்கள். 


3 .பெருமை உடையதன் அருமை பழியார். 


பெருமைக்கு உரிய செயல்கள்  யாவும் செய்வதற்கு  அரியதாய் இருப்பதாய் எண்ணி அதை யாரும் பழிக்கமாட்டார்கள். 


4.அருமை உடையதன் பெருமை பழியார்.


கிடைத்தற்கு அரிய பொருளின் அருமை கருதி அச்செயலை முடிப்பது அரியது என்று யாரும் பழிக்கமாட்டார்கள்.


5.நிறையச் செய்யார் குறைவினைப் பழியார். 


ஒரு செயலை  முழுமையாக முடிக்காமால் குறையாக விட்டிருப்பின் அதற்காக அவரை யாரும் பழிக்கமாட்டார்கள். பின்னர் அச்செயலை முறையாக முடிப்பார் என்று நம்புவார்கள். 


6.முறைஇல் அரசர்நாட்டு இருந்து பழியார். 


செங்கோல் முறை தவறிய நாட்டில் இருக்கும் அறிஞர்கள்,  அந்த அரசனை பழிக்கமாட்டார்கள். அவனைப் பழிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள். 


7.செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார். 


உதவி செய்ய வேண்டிய உரிய சுற்றத்தார் உதவி செய்யாமல் போனால்  , அதற்காக உயர்ந்த குணமுடையோர் அவர்களைப் பழிக்கமாட்டார்கள். 


8.அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்.


முன்பின் அறியாத ஒரு புதிய நாட்டிற்குச் சென்றால்,  அங்கே உள்ள பழக்க வழக்கங்களையும் , ஒழுக்க மாறுதலையும் கண்டு யாரும் பழிக்கமாட்டார்கள். 


9.வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.


வறுமையுற்றோர் வள்ளல்போல் வழங்கவில்லையே என்று யாரும் அவர்களை பழிக்கமாட்டார்கள்.


10.சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார். 


கீழ்மக்களின் இழிசெயல்களைக் கண்டு, அறிவில் சிறந்த பெரியோர் யாரும் பழிக்கமாட்டார்கள். கண்டும் காணாமல் விலகி விடுவர். 


இந்தப் பத்துக் கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு உயர்நெறியில் நடப்போம். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்