Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " உரனுடையாளர் கேண்மை "

 



"சேரும் இடம் சரியாக இருந்தால் போகும் இடம் சரியாக இருக்கும் " என்பார்கள். அதாவது,  நல்ல நண்பர்களுடன் சேர்ந்தால் நாம் போகும் பாதை நல்ல பாதையாக இருக்கும்  என்ற பொருளில்தான் அந்தக் கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நாம் எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர வேண்டும் என்பதை சோழன் நல்லுருத்திரன் பாடிய புறநானூற்றுப்  பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.


"  விளைபதச் சீறிடம் நோக்கி , வளைகதிர் 

வல்சி கொண்டு , அளைமல்க வைக்கும் 

எலிமுயன் றனைய ராகி , உள்ளதம் 

வளன்வலி உறுக்கும்  உளம் இலாளரோடு 

இயைந்த கேண்மை இல்லா கியரோ!  

கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென , 

அன்று அவண் உண்ணா தாகி , வழிநாள், 

 பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து,  

இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் 

புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து 

உரனுடை யாளர் கேண்மையொடு 

 இயைந்த வைகல் உளவா கியரோ!


( சோழன் நல்லுருத்திரன் , புறநானூறு - 190)


விளைநிலத்தில் நெல் நன்கு  விளைந்திருக்கும் காலத்தில்  நெல்மணி கதிர்களைக் கொண்டுபோய் தன் வளையில் பதுக்கிக்கொள்ளும் எலி போன்ற சிறிய முயற்சி உடையாரோடு  நட்பு கொள்ளக்கூடாது. தான் தாக்கிய காட்டுப்பன்றியொன்று இடப்பக்கமாக வீழ்ந்ததால் மான உணர்ச்சியால் தன் செயலுக்கு நாணி அதனை உணவாக எடுத்துக் கொள்ளாமல்,  பெரிய குகையில் தனித்திருந்து , மறுநாள் வேட்டையாட விரும்பி, எழுந்து  பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்டு  பசியாறும் புலிபோல் மனம்தளராத துணிவும், நெஞ்சுரமும், மானமும் உள்ளவர்களோடு நட்பு கொள்ள வேண்டும். சோம்பேறிகளின் நட்பு நம்மை மேலும்மேலும்  சோம்பேறியாக்கும்.  வலிமையுடையவர்களின் நட்பு நம்மை மேலும்மேலும் வலிமையாக்கும். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்