காட்டில் புலி ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு வாரமாக இரை ஏதும் கிடைக்கவில்லை. பசிக்கொடுமையால் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு காட்டுமானைக் ( கடமா ) கண்டதும் , மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. மானை நோக்கி வேகமாக ஓடியது. தன் முழு வலிமையையும் மான்மீது செலுத்தி மானை வேட்டையாடி வீழ்த்தியது. பின் மானைத் தின்று பசியாற மானின் அருகில் சென்றது. சிறிது நேரம் மானை உற்று நோக்கியது. அதன்பின் மானைத் தின்னாமல் பின்வாங்கியது . தன்பசிக்காக மானை வேட்டையாடிய புலி, ஏன் மானைத் தின்னாமல் சென்றது? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
" கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்."
( நாலடியார் - 300)
காட்டில் வாழும் வேங்கைப் புலியானது , தான் வேட்டையாடிய காட்டுமான் இடப்பக்கம் வீழ்ந்ததாயின் அதை உண்ணாது பட்டினி கிடந்து உயிர் துறக்கும். அதுபோல , இடம் அகன்ற விண்ணுலகம் கைக்குக் கிடைப்பதாயினும், அது மானம் கெட வருமாயின் அந்த விண்ணுலகையும் விரும்ப மாட்டார் மேன்மைக் குணம்கொண்ட விழுமியோர் (மண்ணுலகில் சிறந்தோர்) .
புலிகளிடம் பல சிறப்பு குணங்கள் உண்டு. அதில் ஒன்றையே இப்பாடலில் கண்டோம். அதாவது , தன் எதிரே நிற்கும் இரையை வேட்டையாடும்போது, அது வலப்பக்கம் வீழ்கிறதா, இல்லை இடப்பக்கம் வீழ்கிறதா என்று புலியானது உற்றுநோக்கும். வலப்பக்கம் வீழ்ந்தால் தான் வென்றதாய் எண்ணி அந்த இரையை அகமகிழ்ந்து உண்ணும். இடப்பக்கம் வீழ்ந்தால் தான் தோற்றதாய் எண்ணி அந்த இரையைப் புறக்கணிக்கும். பட்டினி கிடந்து இறந்தாலும் இறக்குமே தவிர, இடப்பக்கமாய் விழுந்த இரையை ஒருபோதும் உண்ணாது. புலிகளுக்கு உயிரைவிட தன்மானமே பெரிது. அதுதான் உண்மையான புலிக்குணம்.
ஈழத்தில் வீழ்ந்தாலும் சரி, எங்கெங்கோ சென்று வாழ்ந்தாலும் சரி இறுதிவரை தன்மானத்தோடுதான் வாழ்வார்கள்
தமிழ்ப்புலிகள்!.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்