Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தேரு வருதே மோரு வருமோ "

 



தமிழில் மாலைமாற்றுப் பாடல்கள் பல உள்ளன.  அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.


" தேரு வருதே மோரு வருமோ 

மோரு வருமோ தேரு வருதே " 


இப்பாடலைத் திருப்பிப் படித்தாலும் இதே பாடல் வரும். அதுவும் பொருள் மாறாமல் வரும். 


பாடலின் பொருளை அறிவோம் : 

வெயில் கடுமையாக உள்ளது. தேர் வரும்போது நீர்மோர் வருமோ? நீர்மோர் வருகிறது. ஓ! தேரும் வருகிறது. நன்று , நன்று.


தண்டியலங்காரத்தில் இடம்பெற்றுள்ள மூன்று மாலைமாற்று குறள் வெண்பாக்களையும்,  அவற்றிற்கு பரிதிமாற் கலைஞர் தந்த விளக்கங்களையும் காண்போம்.


" நீவாத மாதவா, தாமோக ராகமோ,

தாவாத  மாதவா நீ ".


நீங்காத பெரும்தவம் உடையோனே!  வலிய மயக்க வேட்கையோ நீங்காது. ஆதலால், அழகிய பெண்ணுடைய ஆசையினை நீக்கி அருள்வாயாக.  அதாவது,  அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக!  


 "வாயாயா நீகாவா யாதாமா தாமாதா 

யாவாகா நீயாயா வா. " 


எமக்கு வாயாதன யாவை?  நீ எம்மைக் காத்து அருள்புரிவாய்!  அவ்வாறு இல்லாவிட்டால் என்னவாகும்? இம்மாது பெரும் வருத்தம் உறுவாள். நீ விரும்பினால் எதுதான் முடியாதன? அதனால் நான் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து நீ வருக. 


" பூவாளை நாறுநீ பூமேக லோகமே 

பூநீறு நாளைவா பூ. "


தலைவியைக் கூடி மகிழ வந்த தலைவனைத் தோழி தடுக்கிறாள். அதற்கான காரணத்தைக் கூறுகிறாள். பூப்படையாதவளை அடைய விரும்பிய மேகமே!  நீ பூமழை பொழிய வந்தாயோ!  பூவும் நீறும் கொண்டு நாளை வா! இன்று அவள் பூப்படைந்திருக்கிறாள். 


தலைவனோடு கூடி மகிழும் அளவிற்கு தலைவி உடல் அளவில்   உரியவளாக இல்லை. அதனை மறைமுகமாகத் தலைவனுக்கு உணர்த்த மேகத்தை அழைத்துச் சொல்வதுபோல தோழி பாடுகிறாள். 


இப்படி எண்ணற்ற கவிநயங்களைக் கொண்டதுதான் நம் கன்னித்தமிழ் இலக்கியங்கள் .


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்