Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " இன்று போய் நாளை வா "

 


வறியவன் ஒருவன் தன் வறுமையைப் போக்கிக் கொள்ள,   செல்வந்தனை நாடி செல்கின்றான். செல்வந்தனிடம் தன் வறுமை நிலையை எடுத்துக் கூறி உதவி கேட்கிறான். செல்வந்தனோ , ஏதோ கதை கேட்பது போல கேட்டுவிட்டு " இன்று போய் நாளை வா " என்கிறான். சரி என்று சொல்லிவிட்டு வீட்டிற்குச் செல்கிறான் வறியவன். செல்வந்தனை நாடி மீண்டும் மறுநாள் செல்கிறான் வறியவன்.  " இன்று போய் நாளை வா " என்று மீண்டும் சொல்கிறான் செல்வந்தன். இது நாள்தோறும் நடக்கிறது. வறியவனும் செல்வந்தனை நாடி நாள்தோறும் நடக்கிறான். இது தொடர்கதை ஆகிறது. 


இதைப் படிக்கும் போதே நமக்குக் கண்கள் கலங்குகின்றன. அந்த  வறியவன் நிலை நமக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக , சீர்காழி அருணாசலக் கவிராயர் இயற்றிய இப்பாடலைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்.


" நல்லவர்கள் வாயால் நவிலும்மொழி பொய்யாமல், 

 இல்லைஎனாது உள்ளமட்டும் ஈவார்கள் - நல்லகுணம் 

அல்லவர்கள் " போ வா " என்று ஆசைசொல்லி நாள்கழித்தே 

இல்லை என்பார்இப் பாரிலே " 


இவ்வுலகில் உள்ள  நல்லவர்கள் தமது வாயால் சொன்ன சொல் தவறாது இருப்பார்கள்.  இல்லையென்று வந்தோர்க்கு , இல்லையென்று சொல்லாமல் , தம்மிடம் இருக்கின்ற பொருளைக் கொடுத்து  உதவுவார்கள்.


நல்லவர் அல்லாதவர்காளோ,  தன்னிடம் உதவி கேட்டு வந்த வறியவர்களிடம் , " இன்று போய் நாளை வாருங்கள் " என்று ஆசைமொழிகளைச் சொல்லிச் சொல்லியே வீணாக நாள்களைக் கழிப்பார்கள். இறுதியில் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுவர்கள்.  அவர்களுக்கு எத்துணை கொடிய உள்ளம் பாருங்கள். 


எண்ணிலங்கா செல்வங்களைத் தன்பால் வைத்துக் கொண்டிருப்பவர்கள்  வறியவர்களுக்கு எவ்வளவோ  நன்மைகள் செய்யலாம்.  ஆனால், யாருக்கும் ஒன்றுமே  செய்யாமல் செல்வங்களை சேர்த்து வைக்கிறார்கள் சிலர். மற்றவர்களுக்கு ஒன்றுமே  ஈயாதாரை நாம் என்ன செய்யலாம்? அவர்களைப் பார்த்து வள்ளுவர் கூறுவதைப் பாருங்கள்.


" கரப்பவர்க்கு யாங்கொலிக்கும் கொல்லோ இரப்பவர் 

சொல்லாடப் போஒம் உயிர். " 

( குறள் - 1070)


இருப்பவர்கள் தங்களிடம் எதுவும் இல்லை என்று சொல்லவும்,  வறியவர்கள் உயிர் உடனேயே போகிறது.  

எல்லாச் செல்வங்களையும் வைத்துக் கொண்டு இல்லையென்று மறைப்பவர் உயிர் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது . தெரியவில்லையே " என்கிறார் வள்ளுவர்.  அதாவது,  எங்கே போய் ஒளிந்து கொண்டாலும், அதற்கும் ஒரு முடிவு உண்டு என்று உறுதிபடக் கூறுகிறார்.


இந்த உண்மையை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.  இருப்பதை எல்லோர்க்கும் அள்ளிக் கொடுங்கள். 


" கொடிது கொடிது வறுமை கொடிது!

அதனினும் கொடிது 

வறுமையைப் போக்க உதவாத செல்வம்! 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்