Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " இரட்டைப்புலவர்கள்"

 



சோழநாட்டில் உள்ள ஆலந்துறையில் பிறந்தவர்கள்தான் முதுசூரியர் , இளஞ்சூரியர் என்று அழைக்கப்பட்ட இரட்டைப்புலவர்கள். 

உறவு முறையால் ஒருவர் அத்தை மகன்,  இன்னொருவர் மாமன் மகன். இவர்கள் இருவருமே பிறக்கும்போதே மாற்றுத் திறனாளிகளாகப் பிறந்தார்கள். அத்தை மகனுக்கு பார்வை கிடையாது.  மாமன் மகனுக்குக் கால்களால்  நடக்க முடியாது.


தங்கள் பிள்ளைகளின் நிலைகண்டு அவர்களின் பெற்றோர்கள் மனம்  வருந்தினார்கள். அவர்களின் மனக்கவலையைப் போக்கும் பொருட்டு,   " இந்த இரு குழந்தைகளும்  ஞானம் பெற்று  ஞாயிறு ( சூரியன்)  போல் உலகெங்கும் உலாவந்து புகழ்பெறுவார்கள் " என்று  வாழ்த்தினார் ஒரு பெரியவர்.  இதனாலேயே, இவர்களில் முதலில் பிறந்தவர்க்கு முதுசூரியர் என்றும்,  இரண்டாவதாகப் பிறந்தவர்க்கு இளம்சூரியர் என்றும் பெயரிட்டு அழைத்தனர். அந்தப் பெரியவர் வாழ்த்தியதைப் போலவே இருவரும் தமிழ் ஞானம் பெற்று  பாடல்கள் பல இயற்றி புகழ் பெற்றனர். 


கவி பாடுவதில் வல்லவர்களாக திகழ்ந்த இவர்கள் சிலேடைப் பாடல்கள்  பாடுவதிலும், அம்மானைப் பாடல்கள் பாடுவதிலும் , கலம்பகம் பாடுவதிலும் திறமை உடையவர்களாக இருந்தார்கள். " கண்பாய ( பெருமையுடைய)  கலம்பகத்திற்கு இரட்டையர் " எனும் தொடர் வாயிலாக கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் இரட்டையர்கள் என்பதை அறியலாம்.   இவர்களில் கால் இல்லாதவரை ( மாமன் மகன்) , பார்வை இல்லாதவர் ( அத்தை மகன்)  தன் தோளில் வைத்துத் தூக்கிச் செல்வார். கால் இல்லாதவர் பார்வை இல்லாதவரை வழிநடத்த இருவரும் பல இடங்களுக்குச் சென்று பாடல் பாடினர். 


ஒரு பாடலின் முதல் இரண்டு அடியை ஒருவர் பாடுவார். அதையொட்டி இன்னொருவர் அடுத்த இரண்டு அடியைப் பாடி முடிப்பார். இவ்வாறு இருவரும் சேர்ந்தே எல்லாச் செய்யுள்களையும் பாடி வந்ததால், இவர்களை "இரட்டைப் புலவர்கள் " என்று எல்லோரும் அழைத்தனர். வரபதியாட்கொண்டார் என்னும் சேரமன்னன் காலத்தில் ( 14 ஆம் நூற்றாண்டு)   இவர்கள் வாழ்ந்தனர்.


இரட்டைப் புலவர்கள் இருவரும்,  குன்றும் குழியுமாக இருந்த வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கால் இழந்தவரைத் தூக்கிச் செல்லும் பார்வை இழந்தவர் இரண்டு அடிகளைப் பாடினார். 


" குன்றும் குழியும் குறுகி வழிநடந்து 

சென்று திரிவது என்றும் தீராதோ?  " 


இதற்கு விடைசொல்லும் வகையில் அடுத்த இரண்டு அடிகளை கால் இல்லாதவர் பாடி முடித்தார். 


" ஒன்றும் 

கொடாதவனைக் காவென்றும் கோவென்றும் கூறின் 

இடாதோ நமக்குஇவ் இடர். 


முழுப்பாடலையும்,  அதன் விளக்கத்தையும் இப்போது காண்போம்.  


" குன்றும் குழியும் குறுகி வழிநடந்து 

சென்று திரிவதென்றும் தீராதோ - ஒன்றும் 

கொடாதானைக் காவென்றும் கோவென்றும் கூறின் 

இடாதோ நமக்கிவ் விடர். " 


மலைகளையும், தாழ்ந்த பள்ளங்களையும் கடந்து, குறுகிய வழிகளில் நடந்து , பல்வேறு இடங்களுக்குச் செல்கிறோமே இந்தத் துன்பம் ஒருபோதும் நம்மைவிட்டு தீராதோ? என்று வினா  எழுப்பினார் பார்வை இல்லாதவர். 


புலவர்களுக்கு ஒன்றுமே கொடுக்காதவனைப் பார்த்து " காப்பாற்றுபவன் என்றும்,  அரசன் என்றும் , பொய்யாகப் புகழ்ந்து பேசினோமே , நமக்கு இத்தகைய துன்பம் வராமல் போகுமோ?  என்று விடையளித்தார் கால் இல்லாதவர். 


மன்னனையும், வள்ளலையும் புகழ்ந்து பாடி பரிசில் பெறுவதே புலவர் தொழில்.  அப்படி புகழும்போது அதில் பொய்யும் இருக்கும். உண்மையும் இருக்கும். " கவிதைக்குப் பொய்யழகு " என்றல்லவா சொல்வார்கள். அப்படி சொல்லப்படுகின்ற பொய்யினால்தான் நமக்கு இந்த நிலை என்று கூறுகிறார் கால் இல்லாதவர். 


ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும்,  பொய் சொல்லக் கூடாது.  அப்படி பொய் சொன்னால், அதற்கு உரிய தண்டனை வந்து சேரும். யார் சொன்னாலும் பொய் பொய்தான். வாழ்த்துவதற்காக சொன்னாலும்,  வயிற்றுப் பிழைப்புக்காகச் சொன்னாலும் பொய் பொய்தான்.  அதற்கான தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது  என்பதையே  இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகிறது. 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்