ஒருமுறை ஔவையார் அம்பர் என்ற சிற்றூரில் உள்ள ஒரு தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தத் தெருவில் இருந்த ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவரில் ஏழு சீர்கள் கொண்ட இரண்டடிப் பாடல் ஒன்று எழுதப்பட்டு இருந்தது.
"தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே;
மண்ணாவ தும்சோழ மண்டலமே!!
அப்பாடலின் பொருட்சுவையையும், சொற்சுவையையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தார் ஔவையார். இந்த வீட்டில் தமிழ்மணம் கமழ்கிறதே என்று எண்ணி வியந்தார். முழுமை பெறாத அப்பாடலின் மீதமுள்ள அடிகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படவே , அந்த வீட்டின் கதவைத் தட்டினார் ஔவையார்.
அப்போது அந்த வீட்டின் உள்ளேயிருந்து சிலம்பி என்ற பெண் வெளியே வந்தாள். வெளியே வந்த சிலம்பியைப் பார்த்து, "இந்த வீட்டின் சுவரில் எழுதப் பட்டிருந்த இரண்டடி பாடலைக் கண்டேன். அதன் சுவையை அறிந்து வியந்தேன். முழுப்பாடலையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் கதவைத் தட்டினேன். முழுப்பாடலையும் எனக்குக் கூறுவாயாக " என்றார் ஔவையார்.
அதற்கு அந்த சிலம்பியோ , அதை ஏன் கேட்கிறீர்கள் பாட்டி? அது ஒரு பெரிய கதை என்று தன் கதையைக் கூறத் தொடங்கினாள். "ஒருநாள் "கவிச்சக்கரவர்த்தி " கம்பர், இந்த வீதி வழியே சென்றார். நாடு போற்றும் புலவராயிற்றே அவர். அதனால் , அவரை என் வீட்டுக்குள் அழைத்து என்னைப் பற்றி ஒரு பாடல் பாடுங்கள். என் பெருமையும் நாடெங்கும் பரவட்டுமே " என்று வேண்டினேன். நான் ஒரு பாடல் பாட வேண்டுமென்றால் ஆயிரம் பொன் கொடுக்க வேண்டும் என்றார் கம்பர்.
எப்படியாவது கம்பரின் வாயால் என்னைப்பற்றி ஒரு பாடல் பாடி கேட்டுவிட வேண்டும் என்ற ஆசையில் என்னிடம் இருந்த பொன்னையும், பொருளையும் கொடுத்தேன். அவை எல்லாம் 500 பொன்னுககு ஈடாகவே இருந்தது. அதனால் கம்பர் இரண்டு அடிகளை மட்டும் பாடி கொடுத்துவிட்டு, மீதமுள்ள 500 பொன்னைக் கொடுக்கும் போது அடுத்த இரண்டு அடிகளைப் பாடி கொடுப்பதாகச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எனக்கு இனிமேல் எங்கே 500 பொன் கிடைக்கப் போகிறது? என்னுடைய ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே " என்று சொல்லி புலம்பினால் சிலம்பி.
" சிலம்பியே நீ கவலைப்படாதே! மீதமுள்ள இரண்டு அடியை நான் பாடுகிறேன் " என்றார் ஔவையார். " தங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் இப்போது 500 பொன் இல்லையே " என்றாள் சிலம்பி. உன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையென்பது எனக்குத் தெரியும். பரவாயில்லை. எனக்கு வயிறு பசிக்கிறது. ஆதலால், எனக்குக் குடிப்பதற்கு ஏதாவது கொடு. எனக்கு அதுபோதும் " என்றார் ஔவையார். "என்னிடம் கூழ்தான் இருக்கிறது. இதோ கொண்டு வருகிறேன் " என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள் சிலம்பி. அவள் வருவதற்குள் அந்தப் பாடலை நிறைவு செய்திருந்தார் ஔவையார்.
" தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே ;
மண்ணாவ தும்சோழ மண்டலமே; - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி, அரவிந்தத் தாள்அணியும்
செம்பொன் சிலம்பே சிலம்பு."
( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 16)
சிறந்த நீர் என்று போற்றப்படுவது எங்கள் காவிரியின் நீரே ;
வெற்றிமாலை அணிந்த அரசருள் சிறந்தவன் என்று போற்றப்படுபவன் எங்கள் சோழ மன்னனே ;
சிறந்த நாடு என்று போற்றப்படுவது எங்கள் சோழ நாடே ;
சிறந்த பெண்ணென்று போற்றப்படுபவள் அம்பர் என்ற ஊரில் வாழும் சிலம்பி என்ற பெயரை உடையவளே ; காலில் அணியும்
சிறந்த சிலம்பென்று போற்றப்படுவது , அவள் தன் தாமரை போன்ற காலில் அணியும் பொன் சிலம்பே " என்று சிலம்பியை மட்டும் போற்றாமல், சிலம்பியின் காற்சிலம்பையும் சேர்த்து போற்றினார் ஔவையார்.
ஔவையாரின் பாடல்திறத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள் சிலம்பி. ஔவையார் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்குக் குடிக்கக் கூழ் கொடுத்தாள் சிலம்பி. கூழுக்காக ஔவையார் இந்தப் பாடல் பாடியதால், " கூழுக்குப் பாடிய ஔவையார் " என்ற சொற்றொடர் உருவாகி புகழ்பெற்றது.
அன்றைய பொழுதென்னவோ ஔவையார் கூழுக்குப் பாடினார். ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே பாடினார் "தமிழ் மூதாட்டி " ஔவையார்.
பொன்னுக்குப் பாடும் புலவர்களும் , கூழுக்குப் பாடும் புலவர்களும் , இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். பொன்னுக்குப் பாடும் புலவர்களையே இந்த உலகம் போற்றுகிறது.
கூழுக்குப் பாடும் புலவர்களை எல்லாம் , இந்த உலகம் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. கூழுக்குப் பாடும் ஏழைப்புலவர்கள் எல்லாம் இன்று இந்த மண்ணில் நல்நிலையில் வாழாமல் போகலாம். மக்கள் மனதில் நற்புகழோடு என்றென்றும் வாழ்வார்கள் என்பது உண்மையிலும் உண்மை.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்