கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் " நாம் இருவர் நமக்கு ஒருவர் " என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதைப்பற்றிச் சிந்தித்து அழகாகப் பாடல் ஒன்றைப் பாடி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
" பொற்பறிவுஇல் லாதபல புத்திரரைப் பெறலின்ஓர்
நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே! - பொற்கொடியே!
பன்றிபல குட்டி பயந்ததனால் ஏதுபயன்?
ஒன்றமையா தோகரிக்கன்று? ஓது.
( நீதிவெண்பா - 54)
பொன்னாலான கொடியைப் போன்றவளே!
பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை. யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோ? நீ சொல். யாராவது பலமாக இருந்தாலே யானை பலம் என்றுதானே சொல்கிறார்கள்? உடல்பலத்தில் மட்டுமல்ல. அறிவு பலத்திலும் யானைதான் சிறந்து விளங்குகிறது. அதனால், நல்ல அறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டினும், நல்ல அறிவுள்ள ஒரு பிள்ளையைப் பெறுதல் நலமாகும்.
"ஆசைக்கு ஒன்று, அசையா சொத்துக்கு ஒன்று " என்று சொல்லி இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த இரண்டும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளும்போது அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வயிறு காய்ந்தவன் சோத்துக்கு அடித்துக் கொள்வான். வசதி கண்டவன் சொத்துக்காக அடித்துக் கொள்வான். நாட்டில் பல இன்னல்களுக்குக் காரணமே சொத்துத் தகறாறுதான்.
" நாம் இருவர் நமக்கு ஒருவர் " என்று இருந்து விட்டாலே, பங்கு பிரிக்கிற சண்டையும் வராது. பங்காளிச் சண்டையும் வராது. " அறுக்க மாட்டாதவன் இடுப்பில் 58 அறுவாளாம் " அதுபோல, ஒரு பிள்ளையை ஒழுங்காக வளர்க்கத் தெரியாதவனுக்கு எதுக்கு மூன்று, நான்கு பிள்ளைகள்? ஒரு பிள்ளையைப் பெற்றோமா, அதை அறிவோடும், அடக்கத்தோடும் வளர்த்தோமோ என்று இருப்பதே நல்லவர்க்கு அழகு ஆகும்.
அந்தக் காலத்தில் பெருந்தொற்று , மிகுதியான போர்கள் போன்றவற்றால் எண்ணற்ற உயிர்களை இழந்தனர். அதை ஈடு செய்யவே எண்ணிலடங்கா குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். அதுவும் இல்லாமல் அக்காலத்தில் மக்கட்தொகை மிகமிகக் குறைவாகும். ஆனால், இப்போது அப்படியல்ல. மக்கள்தொகை பெருக்கம் கடலளவு இருக்கிறது. அதை சரிகட்ட " நாம் இருவர் நமக்கு ஒருவர் " என்பதே சரி.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்