"கவிச்சக்கரவர்த்தி " கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில் ஒரு பாடலையும், அந்தப் பாடலுக்கான சூழலையும் இங்குக் காண்போம்.
தசரதனிடம் சூழ்ச்சி செய்து வரம் பெற்ற கையேயி , தன் மகன் பரதனை அரசனாக்கும் வேலையை மேற்கொள்கிறாள். அந்த வரத்தின் மூலம் இராமனை வனத்திற்குப் போகுமாறு தசரதனை ஆணையிடச் சொல்கிறாள். இராமனும் தன் தந்தை சொல்லை மதித்துக் காட்டிற்குச் செல்ல உடன்படுகிறான். இந்தச் சூழ்ச்சியைக் கண்ட இலக்குவன், தன் அண்ணன் இராமன் ஏமாற்றப் பட்டதை நினைத்து , கையேயியைத் தாக்குவதற்குப் பாய்கிறான். அந்தச் சூழலில் இராமன் பாடுவதாக ஒரு பாடலை அமைத்திருக்கிறார் கம்பர். அந்தப் பாடல்களைக் காண்போம் .
" நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே
பதியின் பிழையன்று பயந்த நம்மைப் புரந்தான்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்டது ?என்றான்.
( கம்பராமாயணம் , நகர் நீங்கு படலம் - 129)
"இலக்குவனா ஏன் வீணாக சினம் கொள்கிறாய்? நதி ஒன்று நீர் இல்லாமல் வறண்டுபோய் அழகற்று இருந்தால் , அது அந்த நதியின் குற்றமா? இல்லையே.
மழை பெய்யாமல் போனதற்கு நதி மீது நாம் பிழை சொல்லலாமா? அதுபோலத்தான் இதுவும் . கையேயி என்ன செய்வாள்? பாவம். இதில் குற்றம் என்பது தாய் கையேயி மீதும் இல்லை. முடிசூடப் போகும் தம்பி பரதன் மீதும் இல்லை. வரம் கொடுத்து என்னை வனத்திற்குப் போகச் சொன்ன தந்தை மீதும் இல்லை. இது விதியின் ( ஊழ்வினை) பிழை. விதி அப்படி அமைந்துவிட்டது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? இதற்காகவா நீ சினம் கொள்கிறாய்? வேண்டாம் " என்றான் இராமன்.
தவறு செய்வது என்பது மனித இயல்பு. அதை தடுக்கவும் முடியாது. தவிர்க்கவும் முடியாது. ஆனால், மனிதர்கள் செய்யும் பிழையைப் பொறுத்து அவர்களை ஏற்றுக் கொள்ள முடியும். அதுவே அறிவுடைமை ஆகும். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " என்ற கூற்றுப்படி முன்னர் நாம் செய்த குற்றத்திற்கான பலனை, பின்னர் நாம் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். அந்த நிலையை ஏற்படுத்தும் மனிதர்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. அவர்கள் மீது சினம் கொண்டு என்ன பயன்? அவர்கள் வெறும் கருவிகளே.
" எய்தவன் இருக்க அம்பை நோவானேன்? என்ற பழமொழிக்கு ஏற்ப, நாம் யாருக்கோ செய்த வினைப்பயன், இன்னொருவர் மூலமாக நமக்கு வந்து சேர்கிறது. அவ்வளவுதான். அதற்காக நாம் ஏன் அவர்கள் மீது சினம் கொள்ள வேண்டும்? நாம் செய்த தவறுக்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டுமல்லவா? ஆகையால், நமக்கு யார் தீங்கு செய்தாலும், அவர்கள் மீது சினம் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? என்று ஆராய்வோம். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமல் வாழ்வோம். நமக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எல்லாம் இன்னொருவரை காரணம் சொல்வதைத் தவிர்ப்போம். " தீதும் நன்றும் பிறர்தர வாரா " என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துவோம்.
இந்தக் கம்பராமாயணம் பாடலின் கருத்தையே எளிமையாக்கி, எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பாடலாக்கி " தியாகம் " என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தினார் கவியரசர் கண்ணதாசன்.
" நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதிசெய்த குற்றம் இல்லை!
விதிசெய்த குற்றம் இன்றி
வேறு யாரம்மா !
என்ற பாடலே அது.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்