Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " கபிலர் அகவல் "



தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட நூல் இது. இல்லை, இல்லை  மறைக்கப்பட்ட நூல்தான்  இது.  சாதி அமைப்புக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட நூல். இந்த மண்ணில் யாரால் சாதிப் பாகுபாடு திணிக்கப்பட்டதோ,  அவர்களை எதிர்த்து எழுதப்பட்ட நூல்தான் இது.  அதனால்தான் அடையாளம் தெரியாமல் போன நூலாக இது உள்ளது. 


கபிலரால் கூறப்படுவது போல எழுதப்பட்ட நூல்தான் " கபிலர் அகவல் " . இந்நூலை எழுதியவர் "கபிலதேவ நாயனார் " . பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் 138 அகவலடிகள் உள்ளன.  


" மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ 

காற்றும் சிலரை நீக்கி வீசுமோ 

மானிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ 

கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ 

மேல்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும் 

கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ "


1.மழை சிலரை விட்டுவிட்டுச் சிலருக்கு மட்டும்தான் பெய்யுமோ? 

2.காற்று சிலரை ஒதுக்கிவிட்டு வீசுமோ? 

3.இந்த நிலம் சிலரைச் சுமக்க மாட்டேன் என்று சொல்லுமோ?

4.கதிரவன் சிலருக்கு ஒளிதர மாட்டேன் என்று கூறுமோ? 

5.மேல்சாதி என்போருக்கு உணவு நாட்டிலும்,  கீழ்சாதி என்போருக்கு உணவு  காட்டிலுமா விளைகிறது?


" திருவும் வறுமையும் செய்தவப் பேறும் 

சாவதும் வேறிலை தரணியோர்க்கே 

குலமும் ஒன்றே குடியும் ஒன்றே 

இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே " 


1.சாதி பார்த்து செல்வம் வருவது இல்லை. 

2.சாதி பார்த்து வறுமை வருவது இல்லை. 

3.சாதி பார்த்து தவப்பேறு  வருவது இல்லை. 

4.சாதி பார்த்து சாவு வருவது இல்லை. 

இந்த உலகில் பிறந்த எல்லோர்க்குமே இவை வருகின்றன.  இதில் வேறுபாடு இல்லை.


"குலம், குடி, பிறப்பு, இறப்பு ஆகியவை எல்லார்க்குமே ஒன்றுதான். இதிலும் வேறுபாடு இல்லை" என்கிறது கபிலர் அகவல். 


"இயற்கையிடம் இல்லையே சாதி?

இயற்கைக்கு எதிரானது தானே சாதி! 


எல்லோர்க்கும் வேர் ஒன்றுதான். மனிதம்தான் நமக்கான வேர்!

வேர் ஒன்றாக இருக்கும்போது 

வேறுபட்டு நிற்கலாமா?

கிளைகளாய் பிரிந்து நிற்கலாம்!

கிறுக்குப் பிடித்து நிற்கலாமா?


மனிதா! 

நீ சாதிக்க விரும்புகிறாயா?

இல்லை,  

 சாதியை விரும்புகிறாயா? 


இவண் 

ஆ.தி.பகலன், 

நெறியாளர், 

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்