Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " செல்வம் உடைக்கும் படை "

 



செல்வத்தைச்  சேர்க்க வேண்டிய வழிகள் எத்தனை உள்ளனவோ, அத்தனை வழிகளையும் ஆராய்ந்து அவ்வழியே சென்று செல்வத்தைச் சேர்க்கத் துடிக்கிறது இவ்வுலகம். 


அப்படிச் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம்,  காப்பாற்றி  வைத்துக் கொள்ளத் தெரியாமல் பலவழிகளில் இழக்கிறார்கள் இம்மண்ணில் பலர்.  செல்வத்தைச் சேர்ப்பது பெரிதல்ல. அதை காப்பதுதான் பெரிது.  அதை நல்வழியிலும்,   நல்லோர்க்கும் செலவு செய்ய விரும்பாமல் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 


ஒருவன் சேர்த்து வைத்த செல்வங்கள் எல்லாம்  மூன்று வழிகளில் அழிவதாக திரிகடுகம் கூறுகிறது. அந்த மூன்று வழிகளைத் திரிகடுகம் பாடல்வழிக் காண்போம்.


" தன்னை வியந்து தருக்கலும் தாழ்வுஇன்றிக் 

கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய 

பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் -  இம்மூன்றும் 

செல்வம் உடைக்கும் படை. "

( திரிகடுகம் - 38 ) 


1.ஒருவன் தன்னைத் தானே வியந்து செருக்குக் கொள்ளுதல் கூடாது.  ஒருவனது செருக்குதான் அவன் செல்வத்தை அழிக்கும் முதல் படையாகும். 


2.பெரியோர்களைக் கண்டு தாழ்ந்து போகாமலும் , அடக்கம் இல்லாமலும் இருந்து  வீணாகச் சினத்தைப் பெருக்குதலும் ஆகிய குணங்களே,  ஒருவனது செல்வத்தை அழிக்கும் இரண்டாவது படையாகும்.


3.மற்றவர்களுக்கு உரிய பொருள் என்று பாராமல்,  கண்ணில் கண்ட பொருள்களை எல்லாம் அடைய விரும்பும் சிறுமை குணமே,  ஒருவனது செல்வத்தை அழிக்கும் மூன்றாவது படையாகும். 


இந்த மூன்று குணங்கள்தான் ஒருவன் சேர்த்து வைத்த செல்வங்களை எல்லாம் அழிக்கும் படைகளாகும். 


"தங்கள் செல்வங்களைக் 

காக்க வேண்டும் என்று 

நினைப்பவர்கள் எல்லாம் 

இந்த மூன்று குணங்களைப் 

போக்க வேண்டும் " 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்