Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா "

 



நகரத்திற்குச் சென்று பல்வேறு பட்டப்படிப்புகளைக் கற்ற  படிப்பாளி ஒருவன்,  நீண்ட காலத்திற்குப்பின்  தன் சொந்த ஊருக்கு திரும்பினான்.  ஒரு பெரிய ஆற்றைக் கடந்துதான் அவன் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும். அப்போது மழைக்காலம் என்பதால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த ஆற்றைக் கடக்க பாலம் எதுவும் இல்லை. படகு மூலமாகத்தான் அந்த ஆற்றைக் கடக்க முடியும்.


ஆதலால்,  அந்த ஆற்றங்கரையோரம் படகுடன்  நின்றிருந்த படகோட்டியிடம்,   இங்கிருந்து தன்னை ஆற்றின் மறுகரைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டான்.  அந்த படகோட்டி கேட்ட  தொகையையும் கொடுத்தான். அதன்பின் அந்தப் படகில் ஏறி அமர்ந்தான்.  படகை விரைவாக ஓட்டிச் சென்றான் படகோட்டி.


படகு சென்று கொண்டிருந்தபோது படகோட்டியைப் பார்த்து " நீ என்ன படித்திருக்கிறாய் "  என்று கேட்டான் படிப்பாளி. " ஐயா,  நான் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியது இல்லை " என்றான் படிப்பாளி. " சரி, பள்ளிக்கூடம் போகவில்லையென்றால் என்ன? உனக்குக் கணிதப் பாடம் பற்றி ஏதாவது தெரியுமா?" என்று கேட்டான் படிப்பாளி. "தெரியாது" என்றான்  படகோட்டி. " உன் வாழ்நாளில் கால்பகுதியை இழந்துவிட்டாய் " என்றான் படிப்பாளி. 


" உனக்கு அடிப்படை அறிவியல் பற்றிய  செய்திகள் ஏதாவது தெரியுமா?  என்று கேட்டான் படிப்பாளி. அதற்கும் " தெரியாது " என்றே விடையளித்தான் படிப்பாளி. " உன் வாழ்நாளில் பாதியை இழந்துவிட்டாய் " என்றான் படிப்பாளி. "உனக்கு உலக வரலாறு பற்றி தெரியுமா? என்று கேட்டான் படிப்பாளி. " எனக்கு எங்கள் ஊர் வரலாறே முழுசா தெரியாது. அப்படி இருக்கும் போது உலக வரலாறு எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?  என்று கேட்டான் படகோட்டி.  "உன் வாழ்நாளில் முக்கால் பகுதியை இழந்து விட்டாயே?  என்று முணுமுணுத்தான் படிப்பாளி.


"பூகோளம் பற்றியாவது  உனக்கு  தெரியுமா? என்று கேட்டான் படிப்பாளி. " ஐயா,  இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் எனக்கே  எப்போது தெரிகிறது. எனக்கு எங்கள்  ஊர் பூக்காரி பற்றித்தான்  தெரியும். பூகோளம் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது " என்றான் படகோட்டி. " எதுவுமே தெரியாமல் நீயெல்லாம் எதற்கு இந்த மண்ணில் வாழ்கிறாய்? நான் எவ்வளவு படித்திருக்கிறேன் தெரியுமா?  அறிவியல், ஆங்கிலம்,  கணிதம், வரலாறு, அரசியல், சட்டம்,  மருத்துவம், , உளவியல் என எல்லாத் துறைகளிலும் பட்டம் பெற்றிருக்கிறேன். எனக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. பொது அறிவையும் கரைத்துக் குடித்திருக்கிறேன். இதில் ஒன்றைக்கூட தெரிந்து கொள்ளாமல் நீ இருக்கிறாய்? ஆமாம், நீ என் ( உயிரோடு) இருக்கிறாய்? என்று ஏளனத்தோடு கேட்டான் படிப்பாளி. 


அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் படகோட்டி,   படிப்பாளியைப் பார்த்து " எல்லாவற்றையும் தெரிந்து  வைத்திருக்கிறீர்களே, உங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்டான். " தெரியாது " என்றான் படிப்பாளி. எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட நீங்கள், நீச்சலை மட்டும் ஏன்  கற்றுக் கொள்ளவில்லை ? என்று கேட்டான்  படகோட்டி. " நான் ஏன் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும்? என்று கேட்டான் படிப்பாளி. 


அது ஒன்றும் இல்லை ஐயா,  படகில் ஒரு சிறு ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் படகின் உள்ளே நீர் புகுந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் படகு மூழ்கிவிடும். நாம் 

 பாதியாற்றைத்தான் கடந்திருக்கிறோம். இன்னும் மீதி ஆற்றைக் கடக்க வேண்டும். நீச்சல் அடித்துதான் கடக்க முடியும்.  அதுவும் இல்லாமல் இந்த ஆறு  மிகவும் ஆழமானது. எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அதனால் நீச்சல் அடித்துச் சென்று உயிர் பிழைத்துவிடுவேன்.


 நீங்கள்தான் பாவம். எல்லாவற்றையும் கற்று வைத்திருந்தும்,  நீச்சல் மட்டும் கற்றுக் கொள்ளாததால் இப்போது நீங்கள் சாகப் போகிறீர்கள் "  என்று சொல்லிவிட்டு கரையை நோக்கி நீந்திச் சென்றான் படகோட்டி.  தன் நிலையை எண்ணி கவலையில் மூழ்கினான் படிப்பாளி. கொஞ்ச நேரத்தில் படகும் ஆற்றில் மூழ்கியது. கூடவே அவனும் மூழ்கினான்.  தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது  என்ற தற்பெருமை வந்துவிட்டால் அவர்களுக்கு அழிவு உறுதி என்பதையே இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


"பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா 

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்! 

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு 

அச்சாணி அன்னதோர் சொல். " 

( அறநெறிச்சாரம் - 79)


ஒருவன்  கையில் பிடித்துள்ள சிறிய குடையும் பரந்த கதிர்களையுடைய ஞாயிற்றை மறைக்கும். ஆதலால்,  "யாம் பல நூல்களையும் கற்றுள்ளோம் " என்று ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் கூடாது. பலநூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர் இடத்தில் இருக்கும்  அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச்சொல்,  சில நூல்களைக் கற்றவர் இடத்திலும் இருக்கிறது என்பதை  உணர வேண்டும்.  


ஆதலால் , இவர் என்ன படித்திருக்கிறார்? இவருக்கு என்ன அறிவு இருக்கப் போகிறது?  இவருக்கு என்ன தெரியப் போகிறது? என்று யாரையும் தரக்குறைவாக நினைக்க வேண்டாம். நாம் நிறைய படித்துவிட்டோம் என்று தற்பெருமையும் கொள்ள  வேண்டாம். 


"அறிவு இருக்கும் இடத்தில் தற்பெருமை இருக்காது. தற்பெருமை இருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்பதை இனியேனும் உணர்ந்து கொள்வோம். " 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்