இன்றைய உலகில் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தாய்தந்தையர் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். இரவும் பகலும் உழைக்கிறார்கள். பொன்னையும், பொருளையும் அளவின்றி சேர்த்து வைக்கிறார்கள். பிள்ளைகளுக்குக் குடும்பச்சுமை தெரியாமல் வளர்க்கிறார்கள். அதனால் பிள்ளைகளோ பொறுப்பின்றி வளர்கிறார்கள்.
அளவில்லாமல் செல்லம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளும் , செல்வம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளும் சீரழிந்துதான் போவார்கள் என்பதற்கு எண்ணற்றச் சான்றுகள் பலவற்றை நாள்தோறும் நம் கண்ணெதிரில் காண்கிறோம்.
அறிவுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, அறிவை வளர்க்கும் நூல்களை வாங்கிக் கொடுத்து , தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் அழியாப் புகழோடு வாழக் காரணமாக இருப்பார்கள். அறிவற்ற பெற்றோர்களோ தங்கள் பிள்ளைகள் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அழிந்து போவதற்குக் காரணமாக இருப்பார்கள்.
நல்ல பெற்றோர் என்போர் ,
தங்கள் பிள்ளைகளுக்கு எதைச் சேர்த்து வைக்க வேண்டும் என்பதை நாலடியார் பாடல் மூலமாக இங்குக் காண்போம்.
" வைப்புழிக் கோட்படா வாய்த்தீயின் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற. "
( நாலடியார் - 134)
கல்வியைப் பொருள்போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் அது குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் அதைக் கவர முடியாது. ஆதலால், அறிவுடைய ஒருவன் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை எல்லாம் செல்வங்கள் ஆகா.
"உங்கள் பிள்ளைகளுக்கு
அழியாத செல்வமாகிய
கல்விச் செல்வத்தை மட்டும்
சேர்த்து வையுங்கள்.
அது அவர்களுக்கென்று
ஓர் அடையாளத்தைக் கொடுக்கும்!
அழியும் செல்வமாகிய
பொருட்செல்வத்தைச்
சேர்த்து வைக்காதீர்கள்.
அது அவர்களுக்கு
அழிவையே கொடுக்கும்! "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்