Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தலைநிலத்து வைக்கப்படும் "

 


ஒருவரிடம் உள்ள  சிறந்த கல்வியைப் பார்த்து போற்ற  வேண்டுமே தவிர,  அவர் பிறந்த குடியைப் பார்த்து தூற்றக் கூடாது. குடி சிறந்தது அன்று. ஒருவரிடம்  குடியிருக்கும் கல்வியே சிறந்தது என்பதை விளக்கும் நாலடியார் பாடல் ஒன்றை  இங்குக் காண்போம்.


" களர்நிலத்தில் பிறந்த உப்பினைச் சான்றோர் 

விளைநிலத்து நெல்லின் விழுமியதாகக் கொள்வர் 

கடைநிலத்தோர் ஆயினும் அறிந்தோரை 

தலைநிலத்து வைக்கப் படும்.

( நாலடியார் - 133) 


உவர் நிலத்தில் உருவான உப்பினைச் சான்றோர்கள் விளைநிலத்தில் பிறந்த நெல்லைவிட. உயர்வாகக் கருதி போற்றுவர்.  " உப்பில்லாப் பண்டம் குப்பையிலே " என்பது பழமொழி. அறுசுவை உணவாக இருந்தாலும், அதில்  உப்பு இல்லையெனில் அவை உண்பதற்கு உதவாது. அதனால் உணவைக் காட்டிலும் உப்பிற்கே உயர்ந்த இடம் அளிக்கப்படும். 


அதுபோல,  ஒருவன் எக்குடியில் பிறந்திருந்தாலும், அவன் கற்க வேண்டிய  கல்வியைக் கற்றவனாக இருந்தால்,  அவனை உயர்ந்த இடத்தில் வைத்து சான்றோர் போற்றுவர்.

 

சான்றோர்கள்  என்றுமே ஒருவரது  கல்வியறிவை வைத்தே அவரைக் கொண்டாடுவர்.  அவர் பிறந்த குடியை ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  

கல்வியே ஒருவரை உயர்ந்த இடத்தில் அமர வைக்கும் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்