Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " நரகம் செல்வோர் யார்? "

 



தமிழாசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார். அவர் நுழைந்ததும், அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தனர். " மாணவர்களே!  முந்தைய வகுப்பில்   மனப்பாடப் பாடல் ஒன்றைப்  படித்து வரச்சொன்னேன், அதைப் படித்து  விட்டீர்களா?  " என்றார் தமிழாசிரியர்.


" ஆம். ஐயா,  படித்துவிட்டோம் " என்றனர் மாணவர்கள். ஆனால், ஒரு மாணவன் மட்டும் தலைகுனிந்தபடி நின்றான். அவன் கற்றலில் குறைபாடு உள்ள மாணவன். ஆனால், குறும்புக்காரன். அவனைப் பார்த்து, " நீ மட்டும் ஏன் படிக்கவில்லை?  " என்று கேட்டார் தமிழாசிரியர்.  " நான் எத்தனை முறை படித்தாலும் என் மண்டையில் ஏறவில்லை.நான் என்ன செய்வேன்? ஐயா " என்று கேட்டான்  அந்த மாணவன். 


"அப்படியா? அந்தப் பாடலைப் பத்துமுறை எழுதிக் கொண்டு வா " என்றார் தமிழாசிரியர். அவனும் அவ்வாறே எழுதிக் கொண்டு வந்தான். "இப்போதாவது அந்தப் பாடலைச் சொல் " என்றார் தமிழாசிரியர். " இப்போதும் என் மண்டையில் அந்தப் பாடல்  ஏறவில்லை ஐயா  " என்றான் அந்த மாணவன். 

" அப்படியென்றால் மீண்டும் அந்தப் பாடலைப் பத்துமுறை எழுதிக் கொண்டு வா " என்றார் தமிழாசிரியர். "  எப்போது பார்த்தாலும் என்னைப் படி, படி என்று சொல்லி எனக்கு  நெருக்கடி கொடுக்கிறீர்கள்.   பத்துமுறை எழுதிக் கொண்டுவரச்  சொல்லி அடிக்கடி எனக்குத்  தொல்லைக் கொடுக்கிறீர்கள். இப்படி எல்லாம் என்னைக் கொடுமைப்படுத்தினால் நீங்கள் நரகத்திற்குத்தான் செல்வீர்கள் ஐயா " என்றான் அந்த மாணவன்.


" உன்னைப் படிக்கச் சொன்னது ஒரு குற்றமா? நீ படித்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்  என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். அதற்காக நான்  நரகத்திற்குத்தான் செல்வேன் என்று சொல்லலாமா? அது முறையா? " என்றார் தமிழாசிரியர்.  

" ஐயா,  அதை நான்  சொல்லவில்லை.  "திரிகடுகம் " சொல்கிறது " என்றான் அந்த மாணவன். " திரிகடுகம் " நல்லொழுக்கங்களைக் கூறும் நூல் ஆயிற்றே.   அது எப்படி என்னை நரகத்திற்குப் போகச் சொல்லும் " என்றார் தமிழாசிரியர்.


நேற்று நூலகப் பாடவேளையில் நூலகம் சென்றேன். அங்கிருந்த திரிகடுகம் நூலை எடுத்துப் படித்தேன். அதில் உள்ள ஒரு பாடலில்தான் நீங்கள்  நரகம் செல்வீர்கள் என்று சொல்லி இருந்தது ஐயா " என்றான். " அப்படியா?  அது என்ன பாடல்? " என்று கேட்டார் தமிழாசிரியர்.


" ஆற்றானை, " ஆற்று" என்று அலைப்பானும்;  அன்புஇன்றி,

ஏற்றார்க்கு இயைவ கரப்பானும் , கூற்றம்

வரவு உண்மை சிந்தியாதானும் ; - இம்மூவர் 

நிரயத்துச் சென்று வீழ்வார். " 

( திரிகடுகம் - 45)



 திறமையற்ற ஏவலாளனை வேலை வாங்குபவனும் , இரந்தவர்க்கு இல்லை என்று சொல்பவனும் , இறப்பு உண்மையென்று நினையாமல் தீமையைச் செய்தவனும் நரகத்திற்குச் ( நிரையத்துச்)  செல்வர் " என்று கூறும் " திரிகடுகம்"  பாடலையும் , அதன் விளக்கத்தையும் கூறினான் அந்த மாணவன். 


"இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ள மூன்று குற்றங்களையுமே நான் செய்யவில்லையே? பிறகு எப்படி நான்  நரகத்திற்குச் செல்வேன் " என்றார் தமிழாசிரியர். " ஐயா,  இந்தப் பாடல் குறிப்பிடும்  மூன்று குற்றங்களில் , முதல் குற்றத்தைத்தான் நீங்கள் அடிக்கடி  செய்கிறீர்கள்?  அதாவது,  " திறமையற்ற. ஏவலாளனை வேலை  வாங்குபவன் நரகத்திற்குச் செல்வான் " என்று இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. நான் எத்தனை முறை  படித்தாலும் எனக்கு படிப்பு வரவில்லை. ஆகையால்,  இந்த இடத்தில் நான் திறமையற்ற ஏவலாளன். அப்படிப்பட்ட என்னை படி, படி என்றும், பத்துமுறை எழுது எழுது என்றும் , என்னை வேலை வாங்கிக் கொடுமைப்படுத்துவது,  நீங்கள் செய்யும்  மாபெரும் குற்றமாகும். அந்தக் குற்றத்திற்காகவே நீங்கள் நரகம் செல்வீர்கள் என்று கூறினேன் ஐயா " என்றான் அந்த மாணவன்.


" சரி,  இருக்கட்டும். உன் விருப்பப்படியே நான் நரகம் செல்கிறேன். நீ என் லிருப்பப்படி,  நன்றாகப் படித்து,  நல்ல நிலைக்கு உயர்ந்து, நீயாவது  சொர்க்கத்திற்குப் போ. எனக்கு அது போதும்.   நீ சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்பதற்காகவே உன்னைப் பலமுறை படிக்க வைத்து, எழுத லைத்து, நான் செய்யும்  அந்தக் குற்றத்திற்காக நான் நரகம் செல்கிறேன். அதுபற்றி எனக்குக் கவலையில்லை " என்றார் தமிழாசிரியர். 


தமிழாசிரியரின் உயர்ந்த உள்ளத்தைக் கண்டு,  உள்ளம் உருகிய அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து,  தான் செய்த பிழையைப் பொறுத்தருளூமாறு வேண்டினான். தமிழாசிரியரும் அவன் பிழையைப் பொறுத்து அவனை நல்வழிப்படுத்தினார். அன்றுமுதல் கூடுதல் கவனம் எடுத்துப், படிக்கத் தொடங்கினான்  அந்த மாணவன் . 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்