அறிவைச் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக கல்விக் கூடங்கள் கட்டப்படுகின்றன.
அளவற்ற செல்வங்களைச் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகத்தான் மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன. அது என்னவோ தெரியவில்லை. அளவற்ற செல்வத்தைச் சேர்ப்பவர்களின் முகவரியைத் தேடிப் பிடித்துக் கொண்டு பற்பல நோய்கள் படையெடுத்து வந்துவிடுகின்றன.
காரணம் ஒன்றுதான். அளவற்ற செல்வத்தைச் சேர்க்கும்போது அது தன் உடன்பிறப்பான நோய்களை உடன் அழைத்துக் கொள்ளும்.
அளவோடு சேர்க்கின்ற செல்வமோ " மருந்தாக " இருக்கும்.
அளவின்றி சேர்க்கின்ற செல்வமோ மனிதனுக்கு நோயாகவே இருக்கும்.
அளவின்றி சேர்க்கப்படும் செல்வத்தால் ஏற்படும் தீங்குகளை அழகான உவமையோடு விளக்கும் " விவேக சிந்தாமணி " பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" திரவியம் வந்த போது
சேர்ந்தபல் லோர்க்கும் ஈந்தால்
வரவர வளரும் அந்த
வகைசெயா விடின்கெட்டு ஏகும்
ஒருகலிங் கினைவிட் டக்கால்
ஓதநீர் போக்குப் போகப்
பெருகுறும் ஏரி இல்லா
விடில்நடு அணையைப் போக்கும். "
( விவேக சிந்தாமணி - 222)
பெருமழை காலத்தில், வெள்ளம் பெருக்கெடுத்து வந்து ஏரியைச் சூழ்ந்து நிற்கும் வேளையில், ஏரியில் உள்ள ஒரு மடையைத் திறந்து , நீரை அது போகிற போக்கில் வெளியேற்றி விட்டால் ஏரியும் பாதுகாப்பாக இருக்கும். ஏரியில் தேவையான நீரும் நிரம்பும். அவ்வாறு மடையைத் திறக்காமல் நீரை அளவுக்குமேல் சேர்க்க நினைத்தால், வெள்ளமானது கரையை உடைத்து மொத்த நீரையும் வெளியேற்றி விடும்.
அதுபோல, பொருட்செல்வம் நம்மிடம் சேருகின்ற வேளையில், அச்செல்வத்தைக் கொண்டு தன்னைச் சார்ந்த பலருக்கும் பயன்படும்படி பகிர்ந்து கொடுத்தால், நம்மிடம் உள்ள செல்வம் மேலும் மேலும் பெருகும். அப்படிச் செய்யாவிட்டால், அச்செல்வம் தேவையற்ற வழிகளில் சென்று, மொத்தமாக அழிவுற்று அனைத்து செல்வமும் அவனை விட்டு நீங்கும்.
என்னே! அழகான பாடல். எவ்வளவு அறிவார்ந்த கருத்து. இப்பாடலைப் படித்துணர்ந்த பின்னும், ஒருவன் பொருள் சேர்க்க வேண்டுமென்று நினைத்தால், அணை உடைந்து ஒரே நாளில் ஏரி இருந்த இடம் தெரியாமல் போவதுபோல, அவர்களின் செல்வமும் ஓர்நாள் அடையாளம் தெரியாமால் போகும். " வாழ்ந்து கெட்ட குடும்பம் " என்ற வசைமொழியே அவர்களின் வழித்தோன்றல்களுக்குக் கிடைக்கும்.
"அளவோடு சேர்க்கின்ற செல்வம்
அவரவர் பெற்ற மக்களுக்குப் போய்ச் சேரும்!
அளவற்ற செல்வமோ
நாட்டில் உள்ள மருத்துவமனைக்கே
போய்ச் சேரும் !
இதுதான் உண்மை. "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்