Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " சும்மா இருப்பதே சுகம் "

 



எங்கும் அலைபாயாமல் ஒருமுகத்தன்மையோடு இருக்கும் நெருப்புதான் விளக்காக மாறி மற்றவர்களுக்கு ஒளி தரும்  அதுபோலவே , மனிதனும் தன் மனத்தை  எங்கும் அலைபாய விடாமல் ஒருமுகத்தன்மையோடு இருந்தால் எண்ணிய செயல்களில் வெற்றி காண முடியும். எல்லோர்க்குமான வாழ்க்கையை வாழவும் முடியும். 

கடிவாளம் போட்ட குதிரைதான் இலக்கை அடையும். அதுபோல,  மனத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவன்தான் இலக்கை அடைவான். 

சூறாவளியைப் போல மனம் கட்டுக்கடங்காமல் போகக் கூடாது. கட்டி வைத்த மாட்டைப் போல நம் மனம் ஓரிடத்திலே நின்றிருந்தால் நாம்  தேடியே சுகத்தை இருந்த இடத்திலேயே காணலாம் என்பது அறிவுடையோர் வாக்கு. மனம் இருப்பதனால் தான் எல்லாத் துன்பங்களும் நம்மைச் சூழ்கின்றன. அந்த மனத்தைக் கடந்து சும்மா இருந்தால் பேரின்பத்தை நாம் அடையலாம். இதைத்தான் " சும்மா இருக்கும் சுகமே சுகம் " என்று மெய்யியலார்கள்  போற்றுகின்றனர்.


" இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற் 

றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல 

வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து 

சும்மா இருக்கும் சுகம். " 


( திருவருட்பா ) 


"இறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ , நான் அறியேன்.  என் தலைவனே! காலம் காலமாக தொன்றுதொட்டு என்னைத் தொடர்ந்து  வரும் மாயை விலகி, வானில் பல வெளிகள் அடுக்கடுக்காய் உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே  எனக்குச் சுகமளிக்கும் நாள் " என்கிறார் வள்ளலார்.


வள்ளலார் சொன்ன இந்த நிலையை அடைய விரும்பினால், எவ்வுயிரையும் கொல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கையும் செய்யாமல்,  மனத்தைக் கட்டுப்படுத்தி வாழ வேண்டும். 


சும்மா இருத்தல் என்பதற்கு எந்த வேலையையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல. எதன் மீதும் ஆசையின்றி மனத்தை ஒருமுகப்படுத்தி வாழ்வதாகும். 


பொன்,பொருள், நிலம் என்று எதைத் தேடியும் ஓடாதீர்கள். எதன் மீதும் ஆசை கொள்ளாதீர்கள். எந்தக் கவலையையும்  நெஞ்சில் நிறுத்தாமல் சும்மா இருந்து பாருங்கள் நீங்கள் தேடியது எல்லாம் உங்களைத் தேடி தானாகவே வரும். உங்களுக்கானது உங்களை விட்டு வேறு எங்கும் போகாது.  உங்களைத் தேடி ஒருநாள் ஓடி வரும்.  அதுவரை சும்மா இருங்கள். 


ஆம்.

சும்மா இருப்பதே ஒரு சுகம்தான். சும்மா  இருந்து பாருங்கள். உணர்வீர்கள். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்