Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! அறிவுக்கு ஏது மதிப்பு?

 



இந்த உலகம் அறிவுடையோர் கைகளில் இருந்திருந்தால் இன்று எவ்வளவு அழகாக இருந்திருக்கும். "குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல " இந்த உலகம் பணம் படைத்தவர்கள்  கைகளில் சிக்கித் தவிக்கிறது. 

இந்த உலகில் உள்ள அனைவரும் நிகராய் வாழ வேண்டும் என்றால் இந்த உலகை அறிவுடையோர் ஆள வேண்டும். ஆனால், இங்கு  முட்டாள்கள் அனைவரும் முதலாளியாக இருக்கிறார்கள். அறிவாளிகள் எல்லாம் அவர்களுக்கு அடிமைகளாய் இருக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் காலக்கொடுமை.

நான்கு கால்கள் உடையது மட்டும் இங்கு விலங்குகள்  அல்ல . அதிகார நாற்காலியில் உட்காருகின்ற மனிதர்களும் இங்கு விலங்குகள்தான். ஆம்  அதிகாரம் கிடைத்தவுடன் விலங்குகளாய் மாறி விடுகிறார்கள். மது  போதையைவிடக் கொடியது மற்றவர்களை அடிமைகளாய் நடத்தும் அதிகார போதை. 


அறிவுடையோர்க்கு மதிப்பளித்து ஆளும் இடத்தை அவர்களிடம் அளித்துப் பாருங்கள்.  அன்று மண்ணுலகம் பொன்னுலகமாய் மாறும். 

நடை உடை பாவனைகளால் ஆளை மயக்கும் அறிவிலிகளைப்  போற்றுவதும் , எளிமையாக வாழும் அறிவுடையோரை ஒதுக்குவதும்  காலம் காலமாகவே  தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஒருவர் உடுத்தியிருக்கும் ஆடை அணிகலன்களுக்கு அளிக்கின்ற மதிப்பைக் கூட  அறிவுடையோர்க்கு அளிப்பதில்லை . பகட்டு போற்றப்படுகிறது. படிப்பு தூற்றப்படுகிறது. இந்த வழக்கத்தை  ஔவையார், அவர் காலத்திலேயே கண்டித்து அழகான பாடல் ஒன்றைப் பாடி இருக்கிறார். 


" விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும் ; 

விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் ; - அரையதினில் 

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் ; அவர்கவிதை 

நஞ்சேனும் வேம்பேனும் நன்று. " 


( ஔவையார் தனிப்பாடல் திரட்டு - 03)


 

இரண்டு உதவியாளர்களை உடன் வைத்துக் கொண்டு ( ஐயா வாழ்க , ஐயா வாழ்க என்று ) தன்னைப் போற்றி புகழும்படி செய்ய வேண்டும். 

எல்லா விரல்களில் விலையுயர்ந்த மோதிரங்களை அணிந்து கொள்ள வேண்டும். 

இடையில் தூய வெண்மையான  பருத்தி ஆடையையோ,  பட்டாடையோ அணிந்திருக்க வேண்டும்.  


இப்படி எல்லாம் தங்களை ஒப்பனை செய்து கொண்டு சொல்கின்றவர்கள்  கருத்துகள், விரும்பத்தகாத நஞ்சாக இருந்தாலும்,  கேட்பதற்குக் கசப்பாக இருந்தாலும்,  " நீங்கள் சொல்வது எல்லாம் நன்றாக இருக்கிறது " என்று சொல்லி அதை ஏற்றுக்கொள்வார்கள் . " 


இந்தப் பாடலும் அதன் பொருளும் இந்தக் காலத்தில் உள்ள பொருளுடையோர்க்கும் , அரசியல்வாதிகளுக்கும்  மிகச்சரியாக பொருந்துகிறது.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்