ஒரு குடும்பத்தில் அக்கா, தங்கை இருவர் இருந்தார்கள். அக்காவுக்கு திருமண வயது அடைந்ததும், அவளுக்குத் திருமணம் செய்து வைத்து, மணமகன் வாழ்கின்ற ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். காலங்கள் உருண்டோடின.
தங்கை, தன் அக்காவைப் பார்ப்பதற்காக, தன் அக்கா வாழ்கின்ற ஊருக்கு ஒருமுறை சென்றாள் . அவள் சென்ற நேரத்தில் அந்த வீட்டில் , அக்காவைத் தவிர மற்ற அனைவருமே இருந்தார்கள். " என் அக்கா எங்கே " என்று தன் அக்காவின் மாமியாரிடம் கேட்டாள் .
'வாழையிலை ' விற்பதற்காகச் சென்றிருக்கிறாள் " என்றார் அக்காவின் மாமியார். அக்காவின் மாமியார் வீட்டில் பெரிய வாழைத்தோட்டம் ஒன்று இருக்கிறது. அந்த வாழைத்தோட்டத்தில் விளைகின்ற வாழையிலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் போன்றவற்றைக் கூடையில் வைத்துத் தெருதெருவாகச் சென்று விற்பனை செய்வது அவள் அக்காவின் வழக்கமாகும். அப்படித்தான் அன்றும் வாழையிலைகளை விற்பனை செய்ய அவள் சென்றிருந்தாள்.
தன் அக்கா வாழையிலை விற்பதற்காகச் சென்றிருக்கிறாள் என்று அக்காவின் மாமியார் தன்னிடம் சொன்னதும், அது பற்றி ஏதோ சிந்தித்தாள் தங்கை. நீண்ட சிந்தனைக்குப் பின்பு, தன் அக்காவின் மாமியாரிடம் சென்று " வீட்டில் வாழைக்காய்கள் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கூடையில் போட்டுக் கொடுங்கள். அதை வாழையிலைகளை விற்பனை செய்வதற்காக, அக்கா சென்றுள்ள தெருவுக்கெல்லாம் கொண்டு சென்று நான் விற்பனை செய்து வருகிறேன் " என்றாள் தங்கை. " நீ எங்கள் வீட்டிற்கு விருந்தினராக வந்திருக்கிறாய் .
நீ எதற்கு இதையெல்லாம் செய்யப் போகிறாய்? " என்று கேட்டார் அக்காவின் மாமியார்.
" இருக்கட்டும் அத்தை என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்த வாழைக்காய்களை எல்லாம் கூடை நிறைய எடுத்துப் போட்டுக்கொண்டு தன் அக்கா எந்தெந்தத் தெருவில் எல்லாம் வாழையிலைகளை விற்றாளோ , அந்தத் தெருக்களின் விவரத்தை எல்லாம் தன் அக்காவின் மாமியாரிடம் கேட்டுக் கொண்டு, அந்தத் தெருக்கெளுக்கு மட்டும் சென்று வாழைக்காய்களை விற்பனை செய்துவிட்டு வந்தாள். அதன்பின்தான் அவள் நிம்மதி அடைந்தாள்.
தன் அக்கா வாழையிலைகளை விற்பனை செய்யச் சென்றிருக்கிறாள் என்றதும் அதுபற்றி ஏன் அவள் நீண்ட நேரம் சிந்தித்தாள்? அக்கா வாழையிலைகளை விற்பனை செய்த தெருக்களை எல்லாம் கேட்டறிந்து கொண்டு ஏன் அந்தத் தெருக்களில் மட்டும் அவள் வாழைக்காய்களை விற்றாள்? அக்கா வாழையிலைகளை விற்ற தெருக்களில் எல்லாம் வாழைக்காய்களை விற்பனை செய்தபின் அவள் ஏன் நிம்மதி அடைந்தாள்? இத்தனை வினாக்களுக்கும் உரிய விடைகளை இப்போது காண்போம்.
தன் அக்கா வாழையிலை விற்கச் சென்றதும் அவள் என்ன சிந்தித்தாள் தெரியுமா? தன் அக்கா என்ன சொல்லி வாழையிலைகளை விற்பனைச் செய்திருப்பாள் என்பதைப் பற்றித்தான் அவள் சிந்தித்தாள். "வாழையிலை, வாழையிலை " என்று கூவி கூவியா தன் அக்கா விற்பனை செய்திருப்பாள்? இல்லை. வாழையிலைகளை கூவி கூவி விற்கும்போது, வாழையிலை, வாழையிலை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். வாழல, வாழல என்றுதானே பேச்சு வழக்கில் சொல்வார்கள். தான் வாழ வந்த ஊரில் வாழல, வாழல என்று சொன்னால், அதற்கு என்ன பொருள்? நான் இந்த ஊரில் வாழவில்லை ( வாழல) என்றுதானே பொருள் ஆகும். தான் நன்றாக வாழ வந்த ஊரில் , வாழ்கின்ற ஊரில், வாழல, வாழல என்று சொன்னால், " நான் இந்த ஊரில் வாழவில்லை " என்ற எதிர்மறைப் பொருள்தரும் சொல்லாகும் அல்லவா? அது குற்றமல்லவா?
அந்தக் குற்றத்தைப் போக்கவே, அக்கா வாழையிலை விற்ற தெருக்களுக்கு எல்லாம் சென்று தங்கை வாழைக்காய்களை விற்க நினைத்தாள் . அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? தங்கை , தான் கொண்டு சென்ற வாழைக்காய்களை எல்லாம் என்ன சொல்லி விற்றிருப்பாள்? வாழைக்காய், வாழைக்காய் என்று சொல்லித்தானே விற்றிருக்க வேண்டும்? ஆனால், பேச்சு வழக்கில் வாழக்கா, வாழக்கா என்று சொல்லியல்லவா விற்பனை செய்ய முடியும். அதன் பொருள் என்ன? வாழ் + அக்கா ( வாழக்கா) . நீ வாழ வந்த ஊரில் நன்றாக வாழ் அக்கா, வாழ் அக்கா என்று சொல்லிச் சொல்லியே தான் கொண்டு சென்ற வாழைக்காய்களை எல்லாம் அவள் விற்பனை செய்தாள்.
அக்கா சொல்லிச் சென்ற வாழல ( வாழவில்லை) என்ற எதிர்மறைப் பொருள்தரும் சொல்லை, வாழக்கா ( வாழ் + அக்கா) என்று நேர்மறைப் பொருள்தரும் சொல்லாக மாற்ற வேண்டும் என்பதகாகவும், தன்னுடைய அக்கா வாழச்சென்ற ஊரில், அவள் நீடூழி வாழவேண்டும் என்பதற்காகவும்தான் , தன் அக்கா வாழையிலைகளை விற்பனை செய்த தெருக்களுக்கு எல்லாம் சென்று வாழக்கா, வாழக்கா என்று சொல்லிச் சொல்லியே வாழைக்காய்களை விற்றிருக்கிறாள் அந்த அன்புத் தங்கை. தங்கையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.
இங்குத் தமிழின் அருமையைப் பாராட்டுவதா?
நாம் பேசுகின்ற எந்தவொரு சொல்லையும் எதிர்மறைப் பொருள்தரும் சொல்லாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த தங்கையின் திறமையைப் பாராட்டுவதா? யாரைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
"தம்பி உடையார் படைக்கு அஞ்சான் " என்று தம்பிகளுக்காக ஒரு பழமொழி இருப்பது போல,
" தங்கை உடையார் எதற்குமே அஞ்சார் " என்று தங்கைகளுக்காக ஒரு புதுமொழியை உருவாக்குவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்