கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. இவன் வில்லாற்றலைக் கண்டே " வல்வில் ஓரி " என்ற அடைமொழியோடு அழைத்தனர் தமிழ்ப் புலவர்கள். தற்போதைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவனாக இருந்தவன்தான் வல்வில் ஓரி. "ஆதன் ஓரி " என்றும் இவன் அழைக்கப்பட்டான். இவன் வில்லாற்றலைப் புகழ்ந்து புறநானூற்றில் வன்பரணர் பாடிய பாடல் ஒன்றை இங்குக் காண்போம்.
" வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழல் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத் திறந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்றிவன்
விலைவன் போலான் ; வெறுக்கைநன்கு உடையன் ;
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
( புறநானூறு - 152)
வன்பரணர் கொல்லிமலையைச் சார்ந்த காட்டில் தன் சுற்றத்தாரோடு சென்றிருந்தார். அங்கு வேட்டுவன் ஒருவன் வேட்டையாடுவதைக் கண்டார். அவ்வேட்டுவன் எய்த அம்பு ஒன்று பெரிய யானையின் தலையில் பாய்ந்து வெளியேறி, அவ்வழியே சென்ற பெரும்புலியின் உடலைத் துளைத்து, அதனைக் கடந்தும் , அங்கே சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் உடம்பையும் துளைத்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓர் உடும்பின் மீது பாய்ந்து தன் சினம் தீர்த்து நின்றது.
அந்த வேட்டுவனின் வில்லாற்றலைக் கண்டு வன்பரணர் வியந்தார். அவன் தோற்றத்தையும், வில்லாற்றலையும் பார்த்தால் அவன் வேட்டுவன்போல் தோன்றவில்லை. அவன் ஒரு மன்னனைப்போல் இருப்பதை அறிந்தார். அவன் வில்லாற்றலை வைத்து கொல்லிமலையின் அரசன் ஓரி என உணர்ந்தார். அதன்பின் வன்பரணரும் அவர் சுற்றத்தாரும் பல இசைக்கருவிகளை இசைத்து ஓரியைப் புகழ்ந்து பாடினார். அவர் புகழ்ந்து பாடியதும் அவன் நாணி நின்றான். அவன் நாணி நிற்பதைக் கண்டு, அவன் ஓரி என்பதை உறுதிப்படுத்தினார் வன்பரணர். தன்னை நாடி வந்த வன்பரணருக்கும், அவர் சுற்றத்தாருக்கும் கொல்லிமலையில் கிடைக்கும் பொன்னையும் பொருளையும் கொடுத்துச் சிறப்பித்தான் வல்வில் ஓரி.
ஒரே அம்பினால் யானை, புலி, மான், பன்றி, உடும்பு என்று ஐந்து விலங்குகளை வீழ்த்தியிருக்கிறான் வல்வில் ஓரி. இத்தகைய வில்லாற்றலையே " வல்வில் வேட்டம் " என்று போற்றுவர்.
தமிழர்கள் வில்லாற்றலிலும் , வீரத்திலும் கைதேர்ந்தவர்கள் என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்