வெள்ளைக்காரன் வந்துதான் எங்களுக்குக் கல்வியைக் கொடுத்தான். இல்லையேல் நாங்கள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருப்போம். வெள்ளைக்காரன் வந்ததால்தான் நாட்டில் பல கல்விக்கூடங்கள் எழுந்தன. அவர்கள் கொடுத்த கல்வியால்தான் மக்கள் லாழ்க்கைத்தரம் உயர்ந்தது என்று பகுத்தறிவு இல்லாத பச்சோந்திகள், ஆங்கிலேயனின் அடிவருடிகள் எல்லோரும் ஆங்காங்கே இதைச் சொல்லிசொல்லி அலப்பறை செய்து கொண்டிருப்பதை நாள்தோறும் நாம் காண்கிறோம் .
"கல்வி முறையில் உலகிற்கே முன்னோடி " என்றுமே தமிழகம்தான் என்பதை வரலாறு சொல்லும். வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்தபடி பேசாமல் வேறு என்ன பேசுவார்கள்?
அருட்தந்தை ஆண்ட்ரூ பெல் என்ற கல்வியாளர் , ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து 1808 ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். அப்போது தமிழகத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு வியந்தார். திண்ணைப் பள்ளி முறையில் அமைந்த ஒரு கல்விக்கூடத்தை ஸ்காட்லாந்தில் " சென்னைக் கல்லூரி ( மெட்ராஸ் காலேஜ்) " என்னும் பெயரில் நிறுவினார். அங்கு இக்கல்விமுறை சென்னைக் கல்விமுறை (மெட்ராஸ் சிஸ்டம்), பெல் கல்விமுறை (பெல் சிஸ்டம்) என்றும் அழைக்கப்பட்டது. தன் வாழ்நாளில் " சென்னைக் கல்விமுறையில் 10,000 மேற்பட்ட பள்ளிகளைத் தொடங்கினார். அதன்பின் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நாடுகளிலும் இக்கல்விமுறை பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக் கல்லூரியின் புகழ் 1833 ஆம் ஆண்டுமுதல் உலகெங்கும் பரவியது. ஆனால், நம்நாட்டிலோ 1835 ஆம் ஆண்டு முதல் " மெக்காலே கல்விமுறை " நடைமுறைக்கு வந்து நம்நாட்டை சீரழித்தது. "வேலையாள் தகுதி பெறும் " கல்விமுறையைத்தான் " மெக்காலே கல்விமுறை " என்று கூறுவர். அதாவது, அடிமைகளை உருவாக்கும் கல்விமுறை ஆகும். இக்கல்விமுறையே இன்று வரை நம்நாட்டில் தொடர்ந்து வந்து நமக்குத் தொல்லை தந்து கொண்டிருக்கிறது.
அறிவாளிகளை உருவாக்கும் நம் தமிழகத்தின் பண்டைக் கல்விமுறை இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது. நம் கல்விமுறை எப்படிப்பட்டது என்பதை ஏலாதியில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல்வழிக் காண்போம்.
" கற்றாரைக் கற்றது உணரார் எனமதியார்,
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை இவைஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று ."
( ஏலாதி - 09)
1.கல்வி கற்றவர்களைக் கல்லாதவர்கள் என்று சொல்லி ஏளனம் செய்யாதவர்கள். அதாவது , கற்றவர்களை மதித்து வாழ்பவர்கள்.
2 . உறவினர்களையும் , நண்பர்களையும் ஏற்றத்தாழ்வு கருதாமல், நன்முறையில் போற்றுபவர்கள்.
3.உணவு இல்லாதவர்க்கு உணவு அளித்து அவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குபவர்கள்.
4.தங்குவதற்கென்று . சொந்தமாக இருப்பிடம் இல்லாதவர்களுக்கு இருப்பிடம் கொடுப்பவர்கள்.
5.உடுத்த உடையில்லாமல் இருப்பவர்களுக்கு, உடை வாங்கிக் கொடுத்து அவர்களின் மானம் காப்பவர்கள்.
6.வறியோர்களின் நிலையறிந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களின் வறுமையைப் போக்குபவர்கள்.
இந்த ஆறு அறங்களைச் செய்பவர்களையே , கற்றவர்களாகவும், அறிவு உடையவர்களாகவும் உலகோர் போற்றுவர். இந்த ஆறு அறங்களைச் செய்யாதவர்கள் எவ்வளவு கற்றிருந்தாலும் அவர்களைக் கல்லாதவர்களாகவேஉலகோர் கருதுவர் .இதுவே நம்நாட்டுக் கல்விமுறை ஆகும்.
இன்றையச் சூழலில் கல்வி கற்றவர்களில் எத்தனை பேர் இந்த ஆறு அறங்களைச் செய்கிறார்கள்? எத்தனை பேர் ஆறு அறிவு பெற்றவர்களாக நடந்து கொள்கிறார்கள்? விடை காண முடியாத வினா இது. மனிதனை மனிதனாய் மாற்றுவதே உண்மையானக் கல்விமுறையாகும்.
பற்பல பட்டங்கள் வாங்குவதெல்லாம் கல்வி இல்லை. அந்தப் பட்டங்கள் எல்லாம் பட்டம் விடுவதற்குக் கூட பயன்படாது. பண்பாட்டோடு வாழாப் பழகாமல் வெறும் பட்டங்களை மட்டும் வாங்கி என்ன பயன்?
நல்ல மனிதனாய் வாழ்பவர்கள் மட்டுமே, கல்வி கற்றவர்களாகவும் , அறிவு உடையவர்களாகவும் போற்றப்படுவர் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
அடிமை வாழ்வைக் கற்றுத்தரும் மேனாட்டுக் கல்விமுறையைப் புறந்தள்ளுவோம். அறிவோடு வாழவும், அடுத்தவர்களுக்காக வாழவும் கற்றுத்தருகின்ற நம்நாட்டுக் கல்விமுறையைப் போற்றுவோம்.
" வகுப்பறையைக் கட்டமைத்துக் கற்பிப்பது அல்ல கல்வி!
வாழ்க்கையைக் கட்டமைக்கக் கற்பிப்பதே
உண்மையானக் கல்வி!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்