பசியோடு வாழும் மனிதனின் கனவு என்னவாக இருக்கும்?
மூன்று வேளை உணவு.
மூன்று வேளை உணவும் கிடைத்தபின், அவனது கனவு என்னவாக இருக்கும்?
மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்க்க வேண்டும் என்பதே.
வயிற்றுப் பசியோடு இருக்கும் மனிதன், "மூன்று வேளை உணவு கிடைத்தால் போதும்" என்கிறான். மூன்று வேளை உணவு கிடைத்ததும் அவன் ஆசைகள் எல்லாம் பேராசைகள் ஆகிவிடுகின்றன. பேராசை பிடித்தவனுக்கும், பித்துப் பிடித்தவனுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை.
மூன்று வேளை உணவு முழுமையாக கிடைத்து விட்டாலே இந்த உலகையே ஆள வேண்டும் என்ற எண்ணம் எல்லோர்க்கும் வந்து விடுகிறது. ஆம். ஆள வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறதே தவிர, மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏனோ யாருக்கும் வருவதில்லை. அதனால்தான் மூன்று தலைமுறைக்கேனும் சொத்து சேர்த்து வைக்க விரும்புகின்றனர்.
மூன்று வேளை உணவு, வயிற்றுக்கு இன்பம் தரும். வாழ்க்கைக்கு இன்பம் தராது. மூன்று தலைமுறைக்குச் சேர்த்து வைக்கும் சொத்து சிற்றின்பத்தைத்தான் தரும். பேரின்பத்தைத் தராது. நம் முன்னோர்கள் கண்டுணரந்த , கண்டுணர்த்திய முப்பொருளே நம் வாழ்க்கைக்கு உண்மையான இன்பத்தைத் தரும். அதுவும் பேரின்பத்தைத் தரும்.
அது என்ன முப்பொருள்?
அறம் , பொருள் , இன்பம் என்ற மூன்று பொருளையே "முப்பொருள் " என்று நம் முன்னோர்கள் போற்றினர். வள்ளுவரும் அந்த முப்பொருளை வைத்தே முப்பால் ( திருக்குறள் ) இயற்றினார். "அறவழியில் சென்று பொருளைத் தேடினால் இன்பத்தை அடையலாம். அந்த இன்பமே பேரின்பத்தைத் தரும் " இதுவே வள்ளுவம் உணர்த்தும் உண்மையாகும்.
" முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பான் இறையாங்கு
முப்பொருள் உண்மைக்கு இறை.
( இன்னிலை - 16)
1.அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பொருள்களின் உண்மை இயல்புகளை உணர்ந்து தெளிந்தவன் அருமையான நல்லொழுக்கங்களை உடையவன் ஆவான்.
2அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பொருள்களின் உண்மைகளை முழுமையாக உணர்ந்து, அதை உடைமையாக்கிக் கொண்டவன் அரிய தவங்களைப் புரிந்த முனிவன் ஆவான்.
3.அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பொருள்களின் உண்மையை மக்களிடம் காட்டி, அதை மக்களிடம் பெருக்குபவனே உண்மையான அரசன் ஆவான்.
4.அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பொருள்கள்தான் மெய்ப்பொருளுக்கு உறைவிடமாகும். முப்பொருளை அடைந்தவர்களே இறைநிலை அடைந்தவர்கள் ஆவர்.
வாழ்க்கைக்கு இன்ப நிலையையும், வாழ்பவர்க்கு இறை நிலையையும் தருகின்ற முப்பொருளையே நாம் தேடுவோம். அழிந்து போகின்ற, நமக்கு அழிவைத் தருகின்ற பிற பொருள்களை நாடுவதைத் தவிர்ப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்