தலைவனும், தலைவியும் இனிய முறையில் இல்லறம் நடத்தி வருகிறார்கள். இல்லறம் நடத்த போதுமானப் பொருள் வேண்டுமல்லவா? ஆதலால் பொருளீட்டும் பொருட்டு தலைவன் தன் தலைவியை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தன் அன்புக்குரியவளைப் பிரிய மனமில்லாமல் பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டான். தன் உடலைவிட்டு தன் உயிர் பிரிவதுபோல தன் கணவன் தன்னைவிட்டு பிரிவதாய் எண்ணி வருந்தினாள் தலைவி. கண்களில் நீர் வழிய தலைவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் தலைவி. தலைவனோ நொடிக்கு ஒருமுறை தலைவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான்.
தன்னையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்லும் தலைவனின் கண்களைப் பாராட்டிப் பாடல் ஒன்றைப் பாடுகிறாள் தலைவி.
" மாலோதி நித்தம் தமியேன் வருந்தி வருடப்பெற்ற
காலோ நடந்தன ; கண்ணோ திரும்பின ; கற்றவர்க்குப்
பூலோ கமும்தரும் மாவலி வாணன் பொருப்பிடத்தே
மேலோர் இரங்குவர் ; கீழோர் எந்நாளும் விரோதிப்பரே "
"நாள்தோறும் நான் அன்புரை கூறி , என் மெல்லிய கைகளால் வருடப்பெற்ற கால்களோ என்னைக் கண்டு கொள்ளாமல் என்னை விட்டு பிரிந்து செல்கின்றன. என்னால் ஒரு உதவியும் பெறாத என் தலைவனின் கண்களோ என்னையே திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்கின்றன. கண்கள் மேலானவை. அதனால்தான் அவை என்னைக் கண்டு இரங்குகின்றன. அவை ( மனித உடலில்) மேலான இடத்தில் இருக்கின்றன. கால்கள் கீழானவை. அதனால்தான் அவை நான் செய்த உதவிகளை எல்லாம் மறந்து , பகைகொண்டவன் கண்டும் காணாமல் செல்வதைப் போல செல்கின்றன. அவை மனித உடலில் கீழே இருக்கின்றன " என்றாள் தலைவி.
நாம் என்ன உதவி செய்தாலும் நன்றி மறப்பது கீழோர் செயலாகும். ஒருவர் எந்த உதவியும் செய்யாத போதும், தேவையறிந்து தேடிச்சென்று உதவி செய்வதே மேலோர் செயலாகும்.
மனித இனத்தில் மேலோர் கீழோர் என்ற பாகுபாடு எப்போதும் இல்லை. ஒருவரது செயலே அவருக்கான இடத்தைத் தீர்மானிக்கிறது. எல்லோர்க்கும் பயன்படும் தூய்மையான நீரைக் கொண்ட கார்மேகம் மேலான இடத்தில் இருக்கிறது. யாருக்கும் பயன்படாத உப்புநீரைக் கொண்ட கடல்நீரோ கீழான ( பள்ளத்தில்) இடத்தில் இருக்கிறது.
யார் யார்க்கு எது உரிய இடம்? என்பதை இங்கு இயற்கையே நமக்குப் பாடம் நடத்திவிட்டது. நாம்தான் எதையும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். உதவி செய்பவர்கள் உயர்ந்த இடத்திலும் , உதவும் உள்ளம் இல்லாதவர்கள் தாழ்ந்த இடத்திலும்தான் இருப்பர். இதுவே இயற்கையின் வரையறை ஆகும்.
" முடியாதவர்களுக்கு
முடிந்தவரை
உதவி செய்யுங்கள்!
உங்களுக்கான இடம்
உயர்ந்த இடமாகவே இருக்கும்!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 கருத்துகள்