Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " தமிழச்சி "

 


மிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆண்மகனைத் 'தமிழன் ' என்று கூறுவர். அதுபோல,  தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்ணினைத் ' தமிழச்சி ' என்று கூறுவர்.

தமிழைப் போலவே தனக்கென்று தனிப்புகழோடு வாழ்பவளே  தமிழச்சி. 


நான் பள்ளியில் படிக்கும் போது என் ஆசிரியரிடம்  வினாவொன்று  கேட்டேன். " வாழும் போதே துறக்கத்தைக் ( சொர்க்கம்)  காண முடியுமா? என்பதே நான் கேட்ட வினா.

'முடியும் ' என்றார் என் ஆசிரியர். எப்படி என்றேன்? நான். 


"இந்த உலகில் சிலருக்கு மட்டுமே வாய்த்திடும் ஐந்து பேறு உள்ளது . அவற்றில் ஏதேனும் ஒன்றினை நாம் பெற்றாலே, வாழும்போது துறக்கத்தைக் காணலாம் " என்றார். "அந்த ஐந்து பேறுகளையும்  விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா " என்றேன்.


1.இங்கிலாந்து குடியுரிமை பெற்றவாராய் இருத்தல் :

"சூரியன் மறையாத நாடு " என்ற பெருமை பெற்ற நாட்டை ( இங்கிலாந்து) தாய்நாடாகக் கொண்டவர்கள். அவர்களின் மொழியும் ,அவர்களின்  வழித்தோன்றல்களுமே இன்றைய உலகை ஆள்கிறது. இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் விலையில்லாமல் கல்வி, மருத்துவ உதவி பெற முடியும். ஆதலால் அவர்கள் பேறு பெற்றவர்கள்.


2.அமெரிக்க வாழ்க்கை : 

பார்போற்றும் செல்வாக்கும், பகட்டான வாழ்க்கையையும் பெற்றவர்கள் அமெரிக்கர்கள். "மண்ணுலகில் ஒரு பொன்னுலகு " எதுவென்றால் அது அமெரிக்கா. அதனால்,  அமெரிக்காவில் வாழ்பவர்கள் எல்லாம்  பேறு பெற்றவர்கள்.


3.சீனர்களின் உணவு : 

ஊர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன என அனைத்தையும் சுவையாக சமைப்பதில் கைதேர்ந்தவர்கள் சீனர்கள். உலகம் போற்றும் உணவென்றால் அது சீனர்களின் உணவுதான். அந்த உணவை உண்ணும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள்.  


4.சப்பான் நாட்டு வேலை : 

ஒரு வேலையை பொறுப்பாகவும், நேர்த்தியாகவும் செய்வதில் சிறந்தவர்கள் சப்பான் நாட்டு மக்கள். புதிதாக எந்தப் பொருளை நாம்  வாங்கினாலும் அது சப்பான் நாட்டுப்  பொருளா? என்று கேட்டு வாங்குகின்றோம். அவர்களின் தயாரிப்பு எப்போதும் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். அதனால், சப்பானில் வேலை செய்பவர்கள் பேறு பெற்றவர்கள். 


5.தமிழ்ப் பெண்களை மணமுடித்தல் :

உலகின் முதல் மனித இனத்தை தன் வயிற்றில் சுமந்தவர்கள். உலக மக்களை எல்லாம் தம் பிள்ளைகளாக எண்ணி நெஞ்சில் சுமப்பவர்கள்.  அறிவிலும், ஒழுக்கத்திலும் உலகிற்கே சான்றாக இருப்பவர்கள். இவர்களுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டவும் தெரியும். நிலாவுக்கே சென்று சோறு ஊட்டவும் தெரியும். அப்படிப்பட்ட தமிழ்ப் பெண்களை மணம் முடித்து வாழ்வதே வையகத்தில் உள்ள பேறுகளில் எல்லாம்  தலைசிறந்த பேறு " என்று விளக்கம் தந்தார் என் ஆசிரியர்.


ஆண்டாண்டு காலமாக பெண்களை ப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ்க் குமுகம். தமிழும், தமிழினமும் இன்றும் தழைத்திருப்பதற்குக் காரணமே நாம் பெண்களைப் போற்றிப் பாதுகாப்பதால்தான். உலகத்தின் உண்மையான ஆணிவேரே பெண்கள்தான். 


 "ஆண்களுக்குப்   பணிவிடை செய்வதற்கென்றே படைக்கப்பட்டதுதான் பெண்ணினம்" என்பதே  உலகில் உள்ள  பெண்களின் அடையாளம்.    தனக்குத் தாலி கட்டிய கணவனோ , தன் நாட்டைக் காத்து நிற்கும்  அரசனோ , யார் அறம் தவறி நின்றாலும் , அவர்களை எதிர்த்து நிற்பதே  தமிழச்சியின் அடையாளம்  .  நம் இலக்கியங்களும் தமிழச்சியை அப்படித்தான் படைத்திருக்கிறது. 


"தன் கணவனைக் கள்வன் என்று பொய்க்குற்றம் சாட்டி கொன்றதற்காக அரசவை சென்று நீதி கேட்டாள்.  மன்னனைத் தலைகுனிய வைத்தாள். நீதியைத் தலைநிமிர வைத்தாள் கண்ணகி " என்கிறது சிலப்பதிகாரம். 


" ஒரு பெண் நினைத்தால்  சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்ற முடியும். மண்ணுலகைப் பொன்னுலகமாய் மாற்ற முடியும். ஆண் துணையின்றி பெண்ணால் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டினாள்  மணிமேகலை.  உலக வரலாற்றில் ஒரு பெண்ணைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் காப்பியம் மணிமேகலை காப்பியமே. 


தன் கணவன் மலையுச்சியில் இருந்து கீழே தள்ளி கொல்லப் போகிறான் என்று தெரிந்தவுடன் அவன் காலைப்பிடித்து உயிர் பிச்சை கேட்காமல் , அவனை அதே  மலையுச்சியில் இருந்து கீழே தள்ளிக் கொன்றாள்  வீரமங்கை பத்தரை. ஆம் . இவள்தான்  குண்டலகேசியின் பாட்டுடைத் தலைவி.


புலியை முறத்தால் விரட்டிய மறத் தமிழச்சியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். மூவேந்தர்களை மறத்தால் ( வீரத்தால் ) விரட்டிய வீரத் தமிழச்சி பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?


ஏகம்பவாணன் எனும் சிற்றரசன் ஒருவன் இருந்தான். ஆயிரம் ஏர் கொண்டு உழுது வேளாண்தொழில்  செய்தான். வருகின்ற வருவாயைக் கொண்டு ஏழை எளியோர்க்கு உதவி செய்தான். அவன் வள்ளல் தன்மையை ஊரும் உலகும் போற்றிப் புகழ்ந்தது. அவன் புகழ்கண்டு மூவேந்தர்க்கும் பொறாமை வந்தது. ஏகம்பவாணனைக் காண மூவேந்தர்கள் சென்றனர்.  " அவர் வீட்டில் இல்லை. பணி நிமித்தமாக வெளியே  சென்றிருக்கிறார் " என்றாள் ஏகம்பவாணனின்  மனைவி . 


" ஓ, அவர் முடி நடப் போயிருக்கிறாரா? என்று அவனது வேளாண் தொழிலைக் காரணம் காட்டி நாற்றுமுடி நடப் போயுள்ளாரா எனும் பொருளில் பேசி எள்ளி நகையாடினர் மூவேந்தர்கள். அதற்கு மறுமொழியாக ஏகம்பவாணன் மனைவி பாடிய பாடலை இங்குக் காண்போம்.


" சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி 

ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன் 

மாவேந்தன் வன்கண்ணன் வாணன் பறித்துநடும்  

மூவேந்தர் தங்கள் முடி. " 


ஆமாம். என் கணவர் முடி நடத்தான் போயிருக்கிறார். வன்கண்மை உடையவனான என் கணவன் என்னும் மாவேந்தன், படைகளைத் தழைகளாக்கி அதில் செங்குருதி நீர் தேக்கி யானைகளை மிதிக்க வைத்து சேறாக்கி , அந்தச் சேற்றில் மூவேந்தர்களாகிய உங்கள் தலையில் அணிந்துள்ள  மணிமுடிகளைப் பறித்து நடப்போகிறான் " என்றாள் அந்த வீரத் தமிழச்சி. எதிரே நிற்பது மூவேந்தர்கள் எனத் தெரிந்தும் வீர முழக்கமிட்டாளே அதுதான் தமிழச்சியின் உண்மையான அடையாளம்.


சங்க காலத்தில் ஆண்களுக்கு நிகராகவே பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட்டது. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி  பெற்றவர்களாக பெண்கள் விளங்கினர். சங்க காலத்தில் 40 க்கும் மேற்பட்ட பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் கல்வியிலும்,  அறிவிலும் சிறந்து விளங்கியிருந்தார்கள் என்பதற்கு அவர்கள் இயற்றிய  பாடல்களே சான்று. 

வீட்டை ஆளும் இடத்திலும் , நாட்டை ஆளும் அரசர்களுக்கே அறிவுரை சொல்லும் இடத்திலும் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதைப் பெரும்பேறாகக் கருதினர். அதற்காக இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்கள்.


" குன்றக் குறவன் கடவுள் பேணி 

இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் 

ஆயரி நெடுங்கண் கலிழச் 

சேயதால் தெய்யநீ பிரியும் நாடே " 


( ஐங்குறுநூறு - 257)


"குன்றக் குறவன் கடவுளுக்கு  நேர்த்திக்கடன் பல  செய்து , கடவுளை வேண்டி இவளைப் பெற்றான். இவள் ஒளி வீசும் வளையல் அணிந்த இளம்பெண்.  இவள் ஆய்ந்த செவ்வரி படர்ந்த கண்ணை உடையவள். இவள் கண்களில் நீர் கசியும்படி விட்டுவிட்டு தொலைநாட்டுக்குச் செல்லலாமோ?  என்று தலைவனிடம் கேட்கிறாள் தோழி. தவம் செய்து பெரும்பேறால் கிடைத்த பெண்ணை அழ வைக்கலாமா? என்று தோழி தலைவனை மட்டும் கேட்கவில்லை. உலகோர் அனைவரையுமே கேட்பதாக இருக்கிறது . "பெண் இல்லையேல் நமக்குப் பெருமை இல்லை " என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும். 

 சங்க காலத்தில் அவள் பெற்ற உரிமைகளை, உலகம் உள்ளவரைக் கொடுத்து  தமிழச்சியை வாழவைப்போம். 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர், 

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்