Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ் அறிவோம்! " ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் "




அரண்மனை கருவூலத்திற்குள்  புகுந்த திருடன் ஒருவன்,  கையில் கிடைத்த தங்க நகைகளை எல்லாம் அள்ளி மூட்டை கட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பினான். அவன் தப்பிச் செல்லும் போது  காவலர்கள் சிலர் அவன் திருடன் என்பதை கண்டுணர்ந்து   திருடன்,  திருடன் என கத்திக்கொண்டே   அவனைப் பின்தொடர்ந்தனர். அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி மறைந்தான் திருடன். 


காட்டைச் சுற்றி வளைத்துத் தேடினர் அரண்மனை காவலர்கள். காட்டை விட்டு நகை மூட்டையோடு வெளியே வந்தால் கைது செய்யப்படுவோம் என்பதை உணர்ந்து கொண்ட திருடன்,  நகை மூட்டையை எங்கேயாவது ஒளித்து வைக்க இடம்  தேடினான்.  அங்கே  உள்ள  ஒரு மரத்தின் அடியில் முனிவர் ஒருவர் தவம் செய்வதைப் பார்த்தான். அவர் கண்ணை மூடியபடி தவம் செய்து கொண்டிருந்தார். அந்த முனிவருக்குப் பின்னால்  இருந்த  மரப்பொந்தில் தங்க நகைகளை ஒளித்து வைத்து விட்டு, அந்த  மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். காவலர்கள் காட்டை விட்டு வெளியே சென்ற பின்பு அந்த நகை மூட்டையை எடுத்துச் செல்லலாம் என்று அவன் நினைத்தான். 


பல இடங்களில் தேடி அலைந்துவிட்டு கடைசியாக முனிவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்  காவலர்கள்.அங்கே  தவம் மேற்கொண்டிருந்த  முனிவரைத் தட்டி எழுப்பி ( தவத்தைக் கலைத்து ),  " இந்தப் பக்கம் நகை மூட்டையுடன் திருடன் ஒருவன் வந்தானா? என்று கேட்டனர் காவலர்கள்.  " நான் தவம் மேற்கொண்டிருந்ததால் எனக்கு எதுவும் தெரியாது "  என்றார் 

முனிவர். முனிவர் பேச்சில் நம்பிக்கை இல்லாத  காவலர்கள்,  ஒருவேளை திருடன்தான் முனிவர் போல்   அமர்ந்து கொண்டு நம்மை ஏமாற்றுகிறானோ  என்ற எண்ணத்தில்  அவர் அமர்ந்து இடத்தைச் சுற்றி தேடினர். அவர் பின்னால் இருந்த மரப்பொந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகை மூட்டை அகப்பட்டது. " எப்படி இது இங்கு வந்தது" என்று  கேட்டனர் காவலர்கள்.  " நான் தவத்தில் இருந்ததால் அது பற்றி  எனக்கு எதுவும்  தெரியாது " என்றார் முனிவர்.  " அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இப்போது  எங்கள் ஐயம் நீங்கியது. நீ தான் உண்மையான திருடன் என்று இப்போது உறுதியாகிவிட்டது " என்று சொல்லிவிட்டு  முனிவரைக் கைது செய்து மன்னர் முன் நிறுத்தினார்கள் காவலர்கள்.


தனக்கு முன்னால்  நிறுத்தப்பட்ட முனிவரைப் பார்த்து , " ஏன் திருடினாய் " என்று கேட்டார் மன்னர். " நான் திருடவில்லை " என்றார் முனிவர். "பிறகு  எப்படி இந்த நகை மூட்டை உன்னருகில் கிடைத்தது?"  என்று கேட்டார் மன்னர். " அரசே! நான் ஒரு முற்றும் துறந்த முனிவன். பொன்னாசை, பொருளாசை அற்றவன். நான் எப்படி திருடியிருக்க முடியும்? நான் பரம்பொருளை அறிந்துகொள்ள கடும்தவம் மேற்கொண்டிருந்தேன். வேறு யாரோ இந்த நகை மூட்டைகளைக் கொண்டு வந்து என்னருகே வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அது யாரென்பதை நான் அறியவில்லை " என்றார் முனிவர். " பக்கத்தில் வந்த திருடனையே உன்னால் அறிய இயலாதபோது,  எங்கோ இருக்கும் பரம்பொருளை நீ அறிய போகிறாயா? என்ன கதை விடுகிறாயா? உண்மையான திருடன் யாரென்று நீ சொல்லாத காரணத்தினால் உன்னையே திருடனாக எண்ணி,  உன்னை கழுவில் ஏற்றிக் கொல்ல ஆணையிடுகிறான் " என்றார் மன்னர். 


உடனடியாக அந்த முனிவரை அழைத்துச் சென்று கழுமரத்தில் ஏற்றினார்கள் காவலர்கள்.  கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியின் ஆசனவாயைச் சொருகிவிடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளே ஏறி, வலி தாங்காமல் இறந்துவிடுவர். இது ஒரு கொடிய தண்டனை ஆகும். கழுவேற்றிய சில மணி நேரத்திலேயே உயிர் பிரிந்து விடும். ஆனால், பல மணி நேரமாகியும் முனிவர்  உயிர், அவர் உடலைவிட்டு பிரியவில்லை . இப்படியாக ஒருவாரம் சென்றது. ' இந்த முனிவர் தவ வலிமை மிக்கவர். அவர் செய்த அறம் அவரைக் காத்து நிற்கிறது. அதனால்தான்  அவர் உயிர் பிரியவில்லை "  என்று மக்கள் பேசிக் கொண்டனர். கூட்டம் கூட்டமாக வந்து முனிவரை வணங்கிச் சென்றனர். 


ஒரு வழியாக முனிவரின் விதி முடிந்து, அவர் உயிரைப் பறித்துச் செல்ல கூற்றுவன் ( எமன்)  வந்தான். தன் எதிரே நின்ற கூற்றவனைப் பார்த்து, " நான் பல ஆண்டுகளாக கடும்தவம் செய்து வருகின்றேன். நான் எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதவன் . என்னைக் கழுவேற்றம் செய்த மறுநொடியே என் உயிரைப் பறிக்க வராமல் , காலம் கடந்து வந்திருக்கிறாய். இந்த ஒரு வார காலத்தில் வலி பொறுக்க முடியாமல் நான் எவ்வளவு துயருற்றேன் தெரியுமா? நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இந்தக் கொடிய தண்டனை? " என்று கேட்டார் முனிவர்.


" நீ சிறு பிள்ளையாய் இருந்தபோது ஒரு தும்பியைப் ( தட்டான்)  பிடித்து அதன் வாலில்  ஒரு மெல்லியக் குச்சியைச் சொருகி அதைப் பறக்க வைத்தாய். அது பறக்க முடியாமல், இரை தேட வழியில்லாமல்,    ஒரு வாரம் வலியால் துடித்து இறந்தது. நீ தும்பிக்குச் செய்த தீவினைக்கு எதிர்வினையையே இப்போது ஒரு வாரமாக நீ அனுபவித்தாய் " என்றான் கூற்றுவன். " நான் சிறு பிள்ளையாய் இருக்கும்போது அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருளக் கூடாதா? . அதற்காக இப்படியா என்னைத்  தண்டிப்பது? என்றார் முனிவர்.


" நெருப்பை யார் தொட்டாலும் அது  சுடும்.  குழந்தை ஒன்று நம்மைத்  தெரியாமல் தொட்டுவிட்டது என்பதற்காக அது சுடாமல் இருக்காது. பெரியவரோ, சிறியவரோ தன்னை யார் தொட்டாலும் அது சுடும். அதுதான் நெருப்பின் குணம். அதுபோலத்தான் நாம் செய்த பாவங்களும் . நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அது எதிர்வினை ஆற்றும். 


"  பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா 

பிற்பகல் தாமே வரும். " 

(  குறள் 319)


"நாம் முற்பகலில் மற்றவர்களுக்குச் செய்த துன்பங்கள் யாவும் பிற்பகலில் தாமாக வந்து நம்மைப் பழி தீர்க்கும் என்ற வள்ளுவர் வாக்கை நீ கேட்டதில்லையா? நல்வினையோ தீவினையோ நீ  எதைச் செய்தாயோ  அதை அனுபவித்த பின்பே உன் உயிர் உன் உடலை விட்டு பிரியும். இது உனக்கு மட்டும் அல்ல. இந்த உலக மக்கள் அனைவர்க்குமே இது  பொருந்தும் " என்று " ஊழ்வினை " பற்றி  வகுப்பு எடுத்துவிட்டு முனிவரின் உடலில் இருந்த உயிரைப் பறித்துச் சென்றான் கூற்றுவன். 


" சுட்டிச் சொலப்படும் பேரறி வினர்கண்ணும் 

பட்ட இழுக்கம் பலவானால் - பட்ட 

பொறியின் வகைய கருமம் அதனால்

அறிவினை ஊழே அடும். " 


( பழமொழி நானூறு - 203) 


மண்ணில் இவர் சிறந்த அறிஞர், நல்லவர்,  புகழுடையவர், சிறந்த சான்றோர் 

என்று பலவாக போற்றிப் பாராட்டத்தக்க நிலையில் உள்ள  சான்றோர்க்கும் ஒரு சில நேரங்களில் இழுக்கோ, இடரோ நேரிடுகிறது. இது எதனால் என்று நினைத்துப் பார்த்தால், எல்லாம் அவர்கள்  செய்த முன்வினைப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். அறிவினைக் கூட அழிக்கும் ஆற்றல் ஊழ்வினைக்கு உண்டு என்பதையே இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.


 நாம் செய்யும் செயல்கள் யாவும்  இவ்வுலகில் உள்ள  உயிர்கள் மேல் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ,  அதன் விளைவுகளை நாமே துய்க்க , இந்த உலகு நமக்குத் திருப்பி அளிப்பதே " ஊழ்வினை " எனப்படும். நாம் இந்த உலகிற்கு நன்மை செய்தால் நமக்கு நன்மை விளையும். தீமை செய்தால், நமக்குத் தீமையே விளையும். 


" குற்றம் செய்தவர்கள் 

ஊரை ஏமாற்றலாம்

உலகை ஏமாற்றலாம்!

ஊழ்வினையை ஒருபோதும்  ஏமாற்ற முடியாது!

குற்றம் செய்தவர்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் 

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்!


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்