Ad Code

Ticker

6/recent/ticker-posts

பூம்புகார் அகழாய்வு

 கடலுக்குள் புதையுண்ட பூம்புகார் நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது! ஆய்வு தகவல்கள் வெளியீடு…


இந்த ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் பூம்புகார் 2500 ஆண்டுகள் வயது உடையவை அல்ல என்றும், 15,000 வருடங்களுக்கு முன்பு தற்போது 40 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் முதன் முதலில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.


இந்திய துணைக்கண்டத்தில் மேற்கு கடற்கரைப் பகுதியில் இருந்த துவாரகாவும், கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்த பூம்புகாரும் பண்டைய காலத்தில் மிகத் தலைசிறந்த நகரங்களாக இருந்துள்ளன.


குறிப்பாக பூம்புகார் மிகத் தலைசிறந்த துறைமுகமாக விளங்கி, கிழக்கே தொலைதூர தென் கிழக்கு ஆசியநாடுகளுடனும், மேற்கே எகிப்து வரையிலும் கடல் சார் வணிகத் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. இந்த பூம்புகார் நகரம் சோழ மன்னர்களால் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு, 1000 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் என்று காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டு வருகிறது. எனினும், பூம்புகாரின் அழிவுபற்றி இதுவரை முறையான ஆய்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.


ஆய்வுக்கு மத்திய அரசு நிதியுதவி


இந்த சூழலில் பூம்புகார் குறித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பல கோடி நிதிஉதவியோடு பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தலைமையில் பல்துறை சார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் காவிரி வண்டல் பகுதிகள் இந்திய செயற்கைக் கோள் படங்கள் மூலமும், கடல் கீழ் பகுதிகள் GEBCO (பல்துறை சார் கடல் கீழ்தரைமட்ட அளவு) மற்றும் MBES (ஒலிசார் கடல் கீழ் தரைமட்ட அளவீடு மூலமும் ஆராயப்பட்டன.


ஜெப்கோ மூலம் நடத்திய முதற்கட்ட ஆய்வுகளில் கடலுக்கு கீழே 40 கி.மீ தூரம்வரை 3 மிகப் பெரிய டெல்டாக்களை காவிரி நதி உருவாக்கியிருப்பது தெரிய வந்தது. தற்போதைய கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. முதல் 40 கி.மீ வரை உள்ளசுமார் 1000 சதுர கி.மீகளில் MBES சர்வே, தேசிய கடல் சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இவ்வாய்வில் பூம்புகார் பற்றிய வியத்தகு பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டன.


கோவைக்கு இணையான அளவுடைய நகரம்


முதன்முறையாக தற்காலக் கடற்கரையில் இருந்து சுமார் 30 - 40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீபரப்பில் (தற்போதைய கோவை மாநகருக்கு இணையான அளவுடைய நகரம்) ஒரு துறைமுக நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த துறைமுக நகரம் சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது. இந்நகரத்தில் ஒரு துறைமுகம். அதன் அருகே மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டடங்களைக் கொண்ட குடியிருப்புக்கள் மற்றும் கலங்கரை விளக்கமும் காணப்பட்டன. இந்த துறைமுகம் வடக்கு-தெற்காக 11 கி.மீ நீளமும், கிழக்கு-மேற்காக 2.5 கி.மீ அகலமும் கொண்டு இருந்தது. இந்த துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 70-80 கப்பல்கள் நிறுத்துவதற்காக சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு கப்பல் துறைகள் காணப்படுகின்றன.


துறைமுகம் மற்றும் கப்பல்துறைகள் ஆகிய இரண்டுமே வடக்கு-தெற்காக காணப்படும் 40 கி.மீ. நீளமான மற்றும் 3-4 மீட்டர் உயரமான கடந்த கால பீச் மணல் மேடுகளுக்கு மேற்காக இருக்கின்றன. இதில் இருந்து துறைமுகத்தையும், கப்பல் தளங்களையும் அலைகளின் நேரடித் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த இடத்தில் துறைமுகத்தையும் மற்றும் கப்பல் துறைகளையும் அமைத்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. மேலும் இத்துறைமுகத்தைச்சுற்றி பல இடங்களில் குடியிருப்புக்கள் தென் படுகின்றன.


உலகின் பழமையான கலங்கரை விளக்கம்


துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 4 சதுர கி.மீ. பரப்பளவில் மணலால் மூடப்பட்ட குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் துறைமுகத்திற்கு வடக்கே வடக்கு-தெற்காக காணப்படுகின்ற பீச் மணல் மேட்டில் சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் காணப்படுகின்றன. இதே போன்று துறைமுகத்திற்கு 10 கி.மீ. தென்கிழக்கிலும் காம்பவுண்ட் உடன் கூடிய, ஆனால் உள்ளே உள்ள கட்டிடங்கள் அழிந்த நிலையில் உள்ள குடியிருப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்திற்கு 10 கி.மீ. வடக்கே அழிந்த நிலையில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு உள்ளே உள்ள இந்த கலங்கரை விளக்கத்தை அடைவதற்காக கட்டிய பாலத்தின் அடியே யுள்ள தூண்களும், சுற்றுப்படிக்கட்டின் அடித் தூண்களும் தெளிவாக MBES படங்களிலே தென்படுகின்றன.


இந்த கலங்கரை விளக்கத்தின் அமைப்பு எகிப்தில் உள்ள கிளியோபட்ரா கலங்கரை விளக்கம் போலவும், மற்றும் 1100 ஆண்டுகட்கு முன்பு பராந்தக சோழன் வேதாரண்ணியம் - கோடியக்கரையில் அமைத்த கலங்கரை விளக்கம் போலவும் தெரிகின்றது. ஆனால் இக்கலங்கரை விளக்கம் எல்லாவற்றிற்கும் காலத்தால் முந்தைய, சுமார் 15,000 ஆண்டுகள் பழமையானதாகும். ஆக, கடலுக்கு கீழே கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பூம்புகார் நகரம் சுமார் 15,000 ஆண்டுகட்கு முன்பு முதன்முதலாக அமைக்கப்பட்ட பூம்புகார் நகரம் என்று தெரிகிறது.




இவை ஒருபுறம் இருக்க இந்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் நடத்திய ஆய்வுகள் மாயவரம் வரை கடல் இருந்ததற்கான தடயங்களாக வடக்கு-தெற்காக ஏழு கடந்த காலகடலோர பீச் மணல் மேடுகளைக் காண்பிக்கின்றது. இந்த ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் பூம்புகார் 2500 ஆண்டுகள் வயது உடையவை அல்ல என்றும், 15,000 வருடங்களுக்கு முன்பு தற்போது 40 கி.மீ. தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் முதன்முதலில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் பழமையான நகரமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வடிவமைக்க, சுமார் 12 நிறுவனங்கள் இணைத்து இந்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இதன் இறுதியில் தமிழர்களின் வரலாறு முழுமையாக வெளிக்கொணர வாய்ப்புள்ளது.











கருத்துரையிடுக

0 கருத்துகள்