நம் கை அல்லது கால் எல்லாம் விலைமதிப்பற்ற உடலுறுப்புதான். ஆனால் சில சர்ஜரிகளில் கை,காலை இழந்தால் தான் உயிரை காப்பற்ற முடியும் என்ற சூழலில் அதை இழந்துதான் ஆகவேண்டும்.
தலை சிறந்த வெற்றிகளில் தன் எந்த படையை பலிகொடுத்தால் வெற்றி பெறலாம் என சரியாக கணித்து, அப்படி பலிகொடுத்து அடையப்பெற்ற வெற்றிகள் பல. இதை Triage என அழைப்பார்கள்
கிமு 218 ஆண்டு ரோம் மேல் படையெடுத்த ஹனிபால் கொடும்குளிரில் ஆல்ப்ஸ் மலையைக் கடக்கிறான். பல்லாயிரக் கணக்கான உயிர்களை பலிகொண்ட முடிவு அது. கடக்கையில் அவனுக்கே ஒரு கண் போனது.
"ஒரே ஒரு நாள் இரவு தங்குவோம். உங்கள் கண் தப்பிக்கும்" என மருத்துவர் மன்றாட, "ஒரு கண் போனால் இன்னொரு கண் உள்ளது. ஆனால் இந்த நாளை தவறவிட்டால் ரோமின் படைகளை பின்புறமிருந்து தாக்க வாய்ப்பு கிடைக்காது" என சொல்லி தன் கண்ணையும், பல்லாயிரம் வீரர்களையும் இழந்து ஒரு போர் வெற்றியை அடைந்தான் ஹனிபால்.
1979 ம் ஆண்டு எவெரெஸ்ட் உச்சியை மூவர் அடங்கிய அந்த குழு மதியம் 1:30 மணிக்கு தொட்டது. ஹானலோர் ஷ்மாட்ஸ் எனும் 39 வயது பெண். எவெரெஸ்டின் சிகரத்தை தொட்ட நாலாவது பெண் மற்றும் முதல் ஜெர்மன் பெண் ஆவார். அவருடன் ரே ஜெனெட் என்ற மிகுந்த அனுபவமுள்ள அமெரிக்க மலையேற்ற வீரரும் இருந்தார். கூட ஒரு ஷெர்பா.
அவர்கள் சிகரத்தில் மிகக் குறுகிய நேரம் மட்டுமே இருந்துவிட்டு உடனடியாக கீழிறங்கத் தொடங்கினர்.
எவெரெஸ்டின் கடைசி 850 மீட்டர் "மரணப்பகுதி" என அழைக்கபடுகிறது. அங்கே ஆக்ஸிஜன் அளவு சமவெளியில் உள்ளதில் மூன்றில் ஒரு பகுதிதான். அங்கே என்னதான் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டுபோனாலும், 8000 மீட்டருக்கு மேல் உங்கள் உடலின் செல்கள் இறக்கத்துவங்குகின்றன.
8,000 மீட்டருக்கு மேல் வளிமண்டல அழுத்தக் குறைவால், ஆக்சிஜன் உருளையைப் பயன்படுத்தினாலும் நுரையீரல் இரத்த நாளங்களுக்குள் ஆக்சிஜனை திறம்பட செலுத்த முடியாது. கூடுதல் ஆக்சிஜன் சுவாசித்தாலும், மூளைக்குத் தேவையான முழுமையான ஆக்சிஜன் அளவு கிடைப்பதில்லை. இதனால் சிந்தனைத் தெளிவும், முடிவெடுக்கும் திறனும் தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கும். உடல் தனது முக்கிய உறுப்புகளான இதயம் மற்றும் மூளையைப் பாதுகாக்க, கை மற்றும் கால் விரல்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைத்துக்கொள்ளும். உடல் தன் திசுக்களை தானே அழித்து எரிபொருளாக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும்.
அதனால் மனித உடல் மெதுவாக மரணிக்கும் ஸோன் அது. அத்தகைய ஸோனில் 8400வது மீட்டரில் ரே ஜென்னெட்டின் ஆக்ஸிஜன் சிலின்டர்கள் தீர்ந்துவிட்டன. அதன்பின் அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டார்.
8400 மீட்டரில் இருந்து 8000 மீட்டருக்கு கீழே 400 மீட்டர் இறங்கினால் அவரால் உயிர்தப்ப முடியும். வெறும் 400 மீட்டர் தானே? ஒரு ஓட்டபந்தய மைதானத்தை ஒருமுறை சுற்றும் தொலைவுதானே என நினைக்கலாம். ஆனால் எவெரெஸ்டில் 400 மீட்டரை கடக்க 2 மணிநேரம் ஆகும். ஆக்ஸிஜன் சிலின்டர் இல்லையெனில் 4 மணிநேரம் ஆகும்.
"எனக்கு களைப்பாக இருக்கிறது. இனி என்னால் இறங்கமுடியாது. நீங்கள் தப்பி சென்றுவிடுங்கள்" என்றார் ரே ஜென்னெட்.
இங்கே தான் டிரயாஜ் (Triage) கோட்பாடு பயன்பட்டிருக்கவேண்டும். ஒரு நண்பனை தன்னால் காப்பாற்ற முடியாது எனும் சூழலில், அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்கலாம். தூக்கிக்கொண்டு போக எல்லாம் முடியாது. சென்றிருந்தால் இந்த கதை ஒரு மரணத்துடன் முடிந்திருக்கும்...
ஆனால் ஹானலோர் ஷ்மாட்ஸ் நண்பனுடன் அதே உச்சியில் தங்குவது என முடிவெடுத்தார். கெஞ்சி, கூத்தாடிய ஷெர்பா பேச்சை கேட்காமல் இருவரும் ஒரு குழியை தோண்டி, அதில் படுத்துக்கொண்டு மேலே ஸ்லீப்பிங் பேகை போட்டு குளிரில் தப்ப முயன்றார்கள். அப்படியே மூவரும் உறங்கிவிட்டார்கள்.
காலையில் எழுகையில் ரே ஜென்னெட் இறந்திருந்தார். ஆக்ஸிஜன் இல்லாமல் தூக்கத்தில் அமைதியாக உயிர் பிரிந்திருந்தது. அப்போது கீழே 8000 மீட்டர் தொலைவில் உள்ள கேம்பில் இருந்து மீட்புகுழுவினர் மேலே ஏறிவருகிறார்கள். ரே ஜெனெட்டின் உடலை அங்கேயே விட்டுவிட்டு, ஹானலோரும் சுங்தாரேவும் தட்டுத்தடமாறி கீழே இறங்கத் தொடங்கினர். சவுத் கோல் முகாம் அவர்களின் கண்ணுக்குத் தெரியும் தூரத்தில்தான் இருந்தது.
வெறும் 100 மீட்டர் செங்குத்து உயர இடைவெளிதான் மீட்புகுழுவையும், இவர்களையும் பிரிக்கிறது. ஆனால் ஹானலோர் அப்படியே சமாளிக்க முடியாமல் ஒரு பாறை மேல் அமர்கிறார். "தண்ணீர், தண்ணீர்" என முணுமுணுக்கிறார். சுற்றிலும் பனிதான். ஆனால் -40 டிகிரி குளிரில் பனியை எடுத்து வாயில் போட்டால், அது கரைவதற்குள் நாக்கு உறைந்துவிடும்.
உலகின் மிக குளிர்ந்த பனிமலையில் தண்ணீர் பற்றாக்குறையாலும், களைப்பாலும் 100 மீட்டர் தொலைவில் தப்பும் வழி இருக்க, உயிரை விடுகிறார் ஹானலோர். அவருடன் வந்த ஷெர்பா தப்பினாலும் அவருக்கு கைவிரல்களும், காலும் அகற்றப்பட வேண்டியதானது.
ரே ஜெனெட் 8,400 மீட்டரில் ஆக்சிஜன் தீர்ந்து, "என்னால் நகர முடியாது, நீங்கள் செல்லுங்கள்" என்று கூறியபோதே அவருடைய உடல் உறுப்புகள் இயங்குவது நின்றுவிட்டது. ஹானலோர் மனிதநேயத்தின் அடிப்படையில் நண்பரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கே தங்க முடிவெடுத்தார். அது இரக்க குணம் என்றாலும், மரணப்பகுதியில் அது தற்கொலைக்குச் சமமான முடிவு. ஹானலோரின் இந்த உணர்ச்சிப்பூர்வமான முடிவால் ரே ஜெனெட்டின் உயிர் காப்பாற்றப்படவும் இல்லை, அவரும் உயிரை விட்டார். ஷெர்பாவும் கை, கால்களை இழந்தார்.
உயிர்கொலைகள் அத்துடன் நிற்கவில்லை. ஹானலோரின் கணவர் கெர்ஹார்ட் ஷ்மாட்ஸ் குழுவின் தலைவராக இருந்தார். ஆனால், எவரெஸ்டின் "Death Zone" பகுதியில் இருந்து ஒரு உடலைக் கீழே கொண்டு வருவது என்பது மலையேறுவதை விடப் பல மடங்கு கடினமானது மற்றும் ஆபத்தானது. இதனால் அவரது கணவராலும் கூட உடலை கீழே கொண்டு வர முடியவில்லை.
அடுத்த ஐந்து ஆண்டுகள் மனைவியின் உடலை கீழே இறக்க சொல்லி நேபாள அரசை மன்றாடி, ஜெர்மன் அரசை விட்டு லாபி செய்தார்.
ஹானலோர் இறந்தது 1979 அக்டோபர் மாதம். சரியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு, 1984-ல் நேபாள காவல் துறை மற்றும் ஷெர்பாக்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு, அவரது உடலை மலையிலிருந்து கீழே மீட்டுவர முயற்சி செய்தது.
இந்த மீட்புப் பணியின் போது, நேபாள காவல் துறை அதிகாரி யோகேந்திர பகதூர் தாபா மற்றும் அங் தோர்ஜி ஆகிய இருவர், சுமார் 8,400 மீட்டர் உயரத்தில் பலத்த காற்றினாலும் சோர்வாலும் நிலைதடுமாறி மலையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
ஒரே ஒரு உடலை மீட்க முயன்று மேலும் இரண்டு உயிர்கள் பலியானதால், அந்த உடலை மீட்கும் முயற்சி நிரந்தரமாகக் கைவிடப்பட்டது.
ஹானலோரின் உடல் 8,000 மீட்டருக்கு மேல் பேக்-பேக் மீது சாய்ந்தவாறு, கண்கள் திறந்த நிலையில், காற்றுக்கு அவரது முடி பறப்பது போல் பல ஆண்டுகள் உறைந்து கிடந்தது. தெற்கு வழியாகச் சென்ற அனைத்து மலையேற்ற வீரர்களுக்கும் அது ஒரு பயங்கரமான எச்சரிக்கை அடையாளமாக இருந்தது.
ஹனிபால் தன் ஒரு கண்ணையும், படைகளையும் இழந்து வெற்றி பெற்றதைப் போல, எவரெஸ்ட் போன்ற ஆபத்தான இடங்களில் "ஒரு நண்பனின் இழப்பை ஏற்கத் துணியும் கொடூரமான நிதானம்" மட்டுமே மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும்.
இதுதான் ஹானலோரின் வாழ்க்கை நமக்கு கற்பிக்கும் பாடம்.

0 கருத்துகள்