Ad Code

Ticker

6/recent/ticker-posts

கீரனூர் அருகே புதிய ஆசிரியம் கல்வெட்டு

  



ஆயக்குடிவயல்  (புதுக்கோட்டை_மாவட்டம், குளத்தூர்_தாலுகா கீரனூர் அருகே உள்ள ஆயக்குடிவயல் கிராமம்) வழியாக வரும்போது இளம் வெளிச்சத்தில், செங்கிடி_குளத்துக்குள் கிடந்த கல்பலகை ஒன்றில் எழுத்து இருப்பது போல கண்ணில் பட்டது. நமக்கு எந்த கல்லை கண்டாலும் எழுத்து இருப்பது போல பிரமை தோன்றும் என எண்ணி கொண்டு சிறிது தூரம் சென்றதும், மனது கேட்காமல் மீண்டும் திரும்பி வந்து குளத்துக்குள் இறங்கி பார்த்தேன். பலகையில் மங்கல குறியீடுகளுடன் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. உடனே பிரசாத் ( Prasad Muruga ) அண்ணனை அழைக்க, அவரும் வந்து சேர்ந்தார்.


மங்கிய ஒளியில் கல்வெட்டில் இருந்த பூர்ண கும்பம், குத்து விளக்கு வடிவங்கள் மற்றும் அடியில் பொறிக்கப்பட்டிருந்த ஆசிரியம், கீரனூர் போன்ற வார்த்தைகளை கொண்டு இது எங்கள் ஊரானா கீரனூர் சம்பந்தப்பட்ட ஆசிரியம் கல்வெட்டாக இருக்கலாம் என உறுதி செய்து புறப்பட்டோம். மறுநாள் பொங்கல் அன்று காலை நார்த்தமலையில் சாமி கும்பிட்டுவிட்டு மதியம் பிரசாத் அண்ணன் கோவிலுக்கு சென்றுவிட்டதாக கூறவே, நானும், ராகுலும் ( Rahul Prasath M ) குளத்தில் கிடந்த அந்த கல்லுக்கு மாவு பூசி எழுத்துக்களை படிக்க முயற்சி செய்தோம்.


அவ்வாறு முயற்சித்ததில் அந்த கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.


ஸ்வஸ்திஸ்ரீ

வட சிறு

வாய நாட்டு ந

ரஞ்சிலூர் ஆ

க்கொண்ட

தெவரான உ

டையார் காங்க

யர்கு கீரனூர் ப

ரமன் காங்கய

னாடாலாவா

ன் ஆசிரி

ம்.


பின்னர் கல்வெட்டை நேரில் ஆய்வு செய்த பேராசிரியர் திரு. சுப. முத்தழகன் ஐயா அவர்கள் வாசிப்பை திருத்தி


"ஸ்வஸ்திஸ்ரீ வடசிறுவாய் நாட்டு நாஞ்சிலூர் ஆட்கொண்ட தேவரான உடையார் காங்கயர்கு கீரனூர் பரமன் காங்கேய நாடாள்வான் ஆசிரியம்"


என்று பொருள்படும் வகையில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளதை விளக்கினார். 


மூன்று அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட இந்த கல்பலகையில் பதிமூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டின் கீழ் மங்கல சின்னங்களான முக்காலி மேல் வைக்கப்பட்டுள்ள பூரண கும்பமும், கும்பத்தின் இருபுறமும் குத்து விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் தலைப்பகுதியில்  தோரணம் போன்று வரையப்பட்டுள்ளது. பொதுவாக பல்வேறு ஆசிரியம் கல்வெட்டுகளில் இந்த மங்கல சின்னங்கள் காணப்படுகின்றன.


இந்த கல்வெட்டில் குறிப்பிடப்படும் வடசிறுவாய் நாடு என்பது நமது கீரனூர் சிவன் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்றாம் குலோத்துங்க சோழர் மற்றும் மூன்றாம் ராசராசன் கல்வெட்டுகளில் (*P.S.I - 145,  156, 198) குறிப்பிடப்படும் வடசிறுவாயில்நாடு என கொள்ளலாம். 


இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள ஒடுக்கூர் தொடங்கி கீரனூர், நாஞ்சூர், வாழமங்கலம், மோசக்குடி, திருப்பூர், கோவில்வீரக்குடி மற்றும் செனயாக்குடி வரை இந்த வடசிறுவாயில் நாட்டில் இருந்ததாக கீரனுர் சிவன் கோவிலில் உள்ள முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது. (P.S.I - 546)


இந்த புதிய கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள நாஞ்சிலூர் தற்போதைய நாஞ்சூராக இருக்க வேண்டும். ஏனெனில் மேலே கண்ட குலசேகர பாண்டியனின் கல்வெட்டில் நாஞ்சூரானது வடசிறுவாயில் நாட்டு நாஞ்சில் என குறிப்பிடுகிறது. அந்த நாஞ்சில் இந்த கல்வெட்டில் நாஞ்சிலூராக மருவி தற்போது நாஞ்சூராக மாறி உள்ளது.


ஆகவே நாஞ்சூரை சேர்ந்த ஆட்கொண்ட தேவரான உடையார் காங்கயர் என்பவருக்கு கீரனூரை சேர்ந்த பரமன் காங்கய நாடாள்வான் ஆசிரியம் வழங்கியுள்ளதை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.


800 ஆண்டுகளுக்கு முன்பே கீரனூரின் ஊர்தலைவராக (ஆளும் அரையராக) விசையபால நாடாழ்வான் என்பவர் இருந்ததை கீரனூர் சிவன் கோவிலில் உள்ள மூன்றாம் ராசராசன் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. (P.S.I - 198)


அது என்ன ஆசிரியம்? என கேட்டால் அதற்கு விளக்கம் பெற 700 ஆண்டுகள் வரலாற்றில் பின் செல்ல வேண்டும். கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டில் பிற்கால பாண்டிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் நில உடமையாளர்கள் நாடாள்வார்கள், அரசுகள், சார் அரசுகள் என உள்ளூர் ஆட்சியாளர்களாக உருவெடுத்தனர். நாயக்க அரசு இங்கு நன்கு நிலை பெறும் வரையிலும், அதன் பிறகும் கூட சுதந்திர ஆட்சியாளர்களாக இவர்கள் செயல்பட்டு வந்தனர். அந்த காலகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளிலிருந்து  பாதுகாப்பு அளிப்பவர்களுக்கு  தரப்பட்ட நில தானங்கள், உரிமைகள் ஆசிரிய_பிரமாணம், பாடிக்காவல்_சுவந்திரம் என்று அழைக்கப்படுகின்றன.


அதன்படி பார்க்கையில் நாஞ்சூர் காங்கயர் கீரனூர் நாடாள்வார்க்கோ அல்லது கீரனூருக்கோ பாதுகாப்பு வழங்கியதன் பொருட்டு அவருக்கு இந்த ஆசிரிய பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது என கருதலாம். (ஆய்வுக்கு உரிய கருத்து)


இந்த ஆசிரியம் மற்றும் பாடிக்காவல் உரிமைகள் தனிநபர்கள் மட்டுமல்லாமல் குழுக்கள் மற்றும் ஊர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.


எடுத்துக்காட்டாக நமது கீரனூர் ஊரவர்களும், மேலப்புதுவயல் ஊரவர்களும் வளம்பகுடி முத்தரையன் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக அவர் நமது கீரனூர் ஊரவர்களுக்கு ஆசிரிய பிரமாணம் செய்து கொடுத்ததை நமது சிவன் கோவிலில் உள்ள விஐயநகர ஆட்சிக் கால கல்வெட்டு ஒன்று பதிவு செய்துள்ளது. (P.S.I - 704)


70 க்கும் மேற்பட்ட இது போன்ற ஆசிரியம் கல்வெட்டுகள் இதுவரை கண்டெடுக்கப்பட்டன. இவை அதிக அளவில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் கிடைக்கப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த புதிய கல்வெட்டில் அரசர்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதியை கொண்டு இது 17 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனெனில் கி.பி 1700 க்கு பின்னர் இந்த பகுதி குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை தொண்டைமான்கள் ஆட்சிக்கு கீழ் வந்ததால் அவர்கள் பெயர் பொறித்த கல்வெட்டுகள் இப்பகுதியில் கிடைக்கப் பெறுகின்றன.


புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டின் விளக்கம் மற்றும் காலம் குறித்து பதிவில் பிழையிருந்தால் தயவு செய்து தக்க சான்றுகளுடன் நெறிப்படுத்துமாறு நண்பர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் புதிதாக வெளிப்படும் கல்வெட்டுகள் பிழைகளற்ற உண்மை வரலாற்றை உருவாக்க வேண்டும் என்பதே நமது பேராவல்.


மேலான கருத்துக்களை எதிர்நோக்கி வணக்கத்துடன்,

நாராயண மூர்த்தி,

Rahul Prasath M.


(*P.S.I - Inscription of Pudukkottai state)

கருத்துரையிடுக

0 கருத்துகள்