Ad Code

Ticker

6/recent/ticker-posts

முற்காலப் பாண்டியர், சேரர் வரலாற்றில் உறவுகளின் சிறப்பு

 


மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து இருபத்துநான்கு கிலோமீட்டர் தொலைவில் திருப்புவனம் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள புட்பவனேசுவரர் கோயில் மூவரால் பாடப்பெற்ற கோயிலாகும். இக்கோயில் பிற்காலத்தில் திருப்பணி செய்யப் பெற்றமையால் முற்காலப் பாண்டியர் காலத்திலிருந்த கோயிலின் வடிவம் சிதைந்துவிட்டது. அவற்றிலிருந்த பகுதிகள் இக்கோயிலைச் சுற்றிச் சிதைந்து கிடக்கின்றன. தற்போதுள்ள இக்கோயிலில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோமாஸ்கந்தர் செப்புத்திருமேனியும் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த துர்க்கை, சப்தமாதர் கற்சிலைகளும் காணப் படுகின்றன. இப்பகுதியில் வாழ்ந்த அந்தணர்களுக்குப் பிற்காலப் பாண்டியர்  காலத்தில் பிரமதேயம் வழங்கப்பட்டு அதற்கான இரண்டு செப்பேடுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.  நாயக்கர் காலத்திலும் இவ்வூரும் கோயிலும் சிறப்புடன் விளங்கியிருக்கின்றன. தற்போது திருமலை நாயக்க மன்னனின் உருவச்சிலை இக்கோயில் வாயிலில் காணப்படுகின்றது.


 இவ்வூர்ப் புட்பவனேசுவரர் கோயில் பகுதியில், வட்டெழுத்தில் அமைந்த முற்காலப் பாண்டியமன்னர் கல்வெட்டுக்கள் இரண்டு அண்மையில் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்களில் ஒன்று திருப்புவனம் புட்பவனேசுவரர் கோயிலின் திருச்சுற்றிலும் மற்றொன்று இக்கோயிலின் வெளிப்புறத்திலும் காணப்படுகின்றது. இக் கல்வெட்டுக்கள் இவ்வூரிலிருந்து சிதைந்துபோன முற்காலப் பாண்டியர் காலச் சிவன்கோயிலைச் சார்ந்தவையாகும். ஒன்று அக்கோயிலில் இருந்த தூணிலும் மற்றொன்று கருவறைத் திருநிலைவாயிலில் இருந்த கல்லிலும் பொறிக்கப் பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் பாண்டியர் கலை வரலாற்றினையும், அரசியல் வரலாற்றினையும், சேரமன்னர் வரலாற்றினையும், பாண்டியர் சேரர் உறவினையும் அறிய உறுதுணை புரிகின்றன.


கல்வெட்டுக்களின் காலம்


இக்கல்வெட்டுக்களின் எழுத்தமைதியைக் கொண்டும் இவற்றில் காணப் படும் செய்தியைக் கொண்டும் இவற்றைக் கி.பி.10-ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சார்ந்ததென்று கணிக்கலாம். இக்கல்வெட்டுக்கள் இரண்டும் சடையன்மாறனாக விளங்கிய, சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டை வெளியிட்ட இராசசிம்மன் காலத்துக் கல்வெட்டுக்களாகக் கருதலாம். ஒன்று இரண்டாவது ஆட்சியாண்டிலும் மற்றொன்று இவனது நாலாவது ஆட்சி யாண்டிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் இவ்வூர்க் கண்மாய் இராசசிங்ககுளம் என்று குறிப்பிடப்படுவதால் இராசசிம்மனால் அக்கண்மாய் பெயர் பெற்ற பிறகு இக்கல்வெட்டு பொறிக்கப்பெற்றிருக்கலாம். இக்குளத் தின்கீழ் அமைந்த 'சூழல்' என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோதுதான் இராசசிம்மன் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டின் ஆணையை வழங்கியிருக்கின்றான்.


முதலாம் கல்வெட்டு


திருப்புவனம் புட்பவனேசுவரர் கோயில் திருச்சுற்று நடைபாதையில் வடமேற்கு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் இரண்டு கற்களில் இக்கல்வெட்டு  பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் இறுதிவரிகள் சற்று சிதைந் துள்ளன.


கல்வெட்டு


1. ஸ்வஸ்திஸ்ரீ கோ

2. ச்சடையமா 

3. றக்கு யாண்டு 2

4.இவ்வாண்டு இ

5. ராசசிங்க கு

6. ளக்கீழ் குண

7.வூர் அய்யன்

8. மணக்காடு உ

9. டையானுக்கு வீ

10. ரபாண்டிய வீ

11. ணை மாராயன்

12. ஆயின அரை

13. யன் வீர நாரா

14. யணன் மணவாட்

15. டி கொம்மன 

16. சாமி அக்க

17. ன் சிரி கோயி

18. ல் எடுத்து பி

19. ரதிட்டை செ

20. ய்து ஒரு திரு

21. நொந்தா விள

22. க்கு வச்சு

23. இதனுக்கு

24. குடுத்த சாவா மூவாபே

25. (ரா) டு 75 எ [ழு]பத்தஞ் 

26. சும் காத்துவைச்சு நி

27. சதம் நாராய உழக்கா

28. ல் உழக்கு நெய் மு 

29. ட்டாமல் அட்டுவா

30. ன் திருப்புவணத்து

31. தேவர் வெட்டிக்குடி

32. பூவணவன் அரைய

33.  ன் இவனுக்கு

34. தேவன் அ

35. .................


1. கல்வெட்டில் இவ்வெண்கள் தமிழ் எழுத்துக்களில் உள்ளன.


செய்தியும், சிறப்பும்


சடையன்மாறனின் (இராசசிம்மனின்) இரண்டாவது ஆட்சியாண்டில் குணவூர் அய்யன் மணக்காடு உடையான் என்பவனின் அக்கனும் (அக்காள்) வீரபாண்டிய வீணைமாராயன் ஆயின அரையன் வீரநாராயணன் என்பவனின் மணவாட்டியுமான கொம்மனசாமி என்பவள் சிரிகோயில் எடுத்து, பிரதிட்டை செய்து அக்கோயிலில் ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்காக எழுபத்தைந்து ஆடுகள் திருப்புவனத்துத் தேவர் வெட்டிக்குடி (இடைக்குடி) பூவணவன் அரையன் என்பவனுக்கு அளித்ததைத் தெரிவிக்கின்றது. இவற்றைப் பெற்றுக்கொண்ட பூவணவன் அரையன் நிசதம் திருப்புவனத்துத் தேவர்க்கு நாள்தோறும் உழக்கு நெய்க்குக் குறையாமல் அளக்கவேண்டும் என்றும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.


இக்கல்வெட்டில் இரண்டு பாண்டிய அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவர்களில் ஒருவன் வீணைமாராயன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இவனே வீரபாண்டியன் என்ற பெயரையும் பெற்று வீரபாண்டிய வீணைமாராயன் ஆயின அரையன் வீரநாராயணன் என்று அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இராசசிம்மனின் கல்வெட்டு ஒன்றில் அவனது தந்தையின் பெயரான வீரநாராயணன் பெயரும் குறிப்பிட்டுக் கல்வெட்டு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் இவன் வீணை வாசிப்பதில் வல்லவனாக விளங்கியமையால் இவன் வீணைமாராயன் என்ற விருதினைப் பெற்றிருக்கவேண்டும். இக்கல்வெட்டில் இவ்வூர்க் குளம் இராசசிங்ககுளம் என்று இராசசிம்மனின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கின்றது. திருப்புவனத்தில் உறைகின்ற சிவனுக்குக் கற்றளி எடுத்தவர் யார்  என்பதையும் அவர் ஒரு பெண் என்பதையும் இக்கல்வெட்டுச் செய்தி உணர்த்துகின்றது.


இரண்டாம் கல்வெட்டு


புட்பவனேசுவரர் கோயில் கிழக்குப்புறச் சுவரின் வெளிப்புறத்தில் சாலையில் கிடக்கும் உடைந்த தூணில் இக்கல்வெட்டு உள்ளது:


1. ஸ்வஸ்திஸ்ரீ கோ

2. ச்சடையமாறக்கு

3. யாண்டு 2 இதனெதி

4. ர் 2 இவ்வாண்டு

5. திருப்பூவணத்து

6. ப்படாரர்க்கு சேரமா 

7. நார் இராசாதித்

8. தவர்ம்மராஇன கோ

9. க்கோதை வர்ம்மர் வை

10. த்த திருநொந்தா வி

11. ளக்கு ஒன்றினு

12. க்கு பகலும் இரவு

13. ம் முட்டாமல் எரிவதா

14.  க வைச்ச ஆடு நூறு

15. இவை சாவாமூவாப்

16. (பேராடா]கப் பகலும்

17. காத்து மே[ச்சு]

18. நாராய உழ

19. க் கால் நி

20. யதி உரி

21. ய் நெய் மு 

22. ட்டாமல்

23. அட்டு வா

24. ன் இவ்வூ

25. ர் படைத்த 

26. லைவன் [வி]

27. டையாபதி

28. இவனுக் 

29. குப் புணை

30. இவ்வூர்

31. படைத்தலை

32. வன் நி .......

33. வன் வி

34. ந்தன் இ

35. ..............

36. ............


செய்தியும் சிறப்பும்


இக்கல்வெட்டு சடையன்மாறனின் (இராசசிம்மன்) நான்காம் ஆட்சியாண்டில் திருப்புவனத்துப் படாரர்க்கு ஒரு நந்தாவிளக்கு எரிப்  பதற்காகச் சேரமன்னனான சேரமாநார் இராசாதித்தவர்மரான கோக்கோதைவர்மர் நூறு ஆடுகள் அளித்ததைத் தெரிவிக்கின்றது. இவ்வாடுகளை இவ்வூர்ப் (இடைக்குடி) படைத்தலைவன் விடையாபதி காத்து மேய்த்துத் திருப்புவனத்துப் படாரர்க்கு நாள்தோறும் உரிநெய் அளக்க வேண்டும். இவனுக்குப் புணையாக யார் விளங்கியது என்பதை இக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.


பாண்டியர்க்கும் சேரர்க்கும் உள்ள தொடர்பைத் தெளிவாக்கும் வகையில் முற்காலப்பாண்டியர் கல்வெட்டு ஒன்றில் சேரமன்னன் ஒருவன் குறிப்பிடப்படுவது மிகச் சிறப்பான செய்தியாகும். இக்கல்வெட்டில் குறிப் பிடப்படும் சேரமன்னன் பாண்டிய மன்னனோடு உறவுகொண்டு விளங்கியமையால் பாண்டியன் தலைநகருக்கு அருகில் அமைந்த பாடல் பெற்ற திருப்புவனம் கோயிலுக்கு வந்து நிவந்தம் அளித்துள்ளான். இவன் பாண்டிய அரசனின் விருந்தினனாக மதுரைக்கு வந்த வேளையில் இதனைச் செய்திருக்கலாம். பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் சேரன் மகள் வானவன்மாதேவியை மணம்புரிந்தவன் ஆவான். அவர் வயிற்றில் தோன்றியவனே  இக்கல்வெட்டிற்குரிய அரசனான (சடையமாறன்) இராசசிம்மன் ஆவான்.


கல்வெட்டு குறிக்கும் சேரமன்னன்:-


இக்கல்வெட்டு குறிக்கும் சேரமன்னன் இராசசிம்மனுக்கு என்ன உறவு என்று தெரியவில்லை. ஆனால் இவன் யார் என்பதை உய்த்தறியலாம். முற்காலப்பாண்டியர் காலத்தில் கி.பி. 844க்கும் 962க்கும் இடைப்பட்டகாலத்தில் சேரநாட்டில் ஆட்சிபுரிந்த சேரமன்னர்கள் கீழ்க்கண்ட நால்வர் ஆவார்கள்:


1. தாணுரவி (கி.பி.844 - 885)


2. இராமவர்மன் குலசேகரன் (கி.பி.885 - 917)


3. கோதைரவி (கி.பி. 917 - 947)


4 இந்துகோதை (கி.பி. 944 - 962)


மேற்கண்ட நால்வரில் இராசசிம்மன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்கள் இராமவர்மன், கோதைரவி என்ற இரு சேர மன்னர்கள் ஆவார்கள். இவர்களில் இராமவர்மன் இராசசிம்மனின் ஆட்சிக்காலத்தின் முற்பகுதியினை (நான்காவது ஆட்சியாண்டு) சேர்ந்தமையால் இக்கல்வெட்டில் குறிக்கப்படும் சேரமன்னன் சேரநாட்டில் கி.பி. 885 முதல் 917 வரை ஆட்சி புரிந்த இராமவர்மனாக இருக்கவேண்டும் எனலாம். இவன் கல்வெட்டில் சேரமாநார் இராசாதித்தவர்மராயின கோக்கோதைவர்மர் என்று குறிப்பிடப்படுகின்றான். இராமவர்மனுக்கு இராசாதித்தவர்மர் என்ற பெயர் முடிசூடும் நாளில் இடப்பட்டப் பெயராகும் இப்பெயரே திருப்புவனம் கல்வெட்டில் குறிப்பிடப்படும் சேரமன்னன் இராமவர்மன் என்பதை உறுதிப்படுத்துகின்றது. மேலும் இவன் கோக்கோதை என்றும் குறிப்பிடப்படுகின்றான். இவனுக்குப் பின்னர் வந்த  இவன் மகன் கோதைரவி சேர நாட்டில் ஆட்சி புரிந்திருக்கின்றான்.


சேர மன்னர்க்கும் பாண்டியர்க்கும் உள்ள மணவுறவுகள் முற்காலப் பாண்டியர் செப்பேடுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவற்றில் பலவற்றில் எந்த சேரமன்னன் என்பது தெளிவாக அறியும்படி குறிப்பிடப்படவில்லை. இச்சூழ்நிலையில் திருப்புவனம் கல்வெட்டு பாண்டிய மன்னரோடு உறவுவைத்துப் பாண்டியநாடு வந்த ஒரு சேரமன்னன் யார் என்பது பற்றிய ஒரு தெளிவான செய்தியைத் தருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


(திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை)



கருத்துரையிடுக

0 கருத்துகள்