தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சமூக சூழலில் குழந்தை வளர்ப்புஎன்பது சிக்கலானதாக மாறிவருகிறது. சமூக ஊடகங்கள், வெளியுலகத் தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள் என பல காரணிகள் குழந்தைகளின் குண நலனை கட்டமைக்கின்றன. பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளோடு செலவழித்து அவர்களது நலனுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றிய சிந்தனை தொகுப்பு இது.
அன்பாக பேச தொடங்குங்கள்
குழந்தைக்கு முதலில் அன்பாக பேசக் கற்றுத்தர வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர் அன்பாக பேசவேண்டும். பெற்றோர் வழியில்தான் குழந்தைகளும் நடப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும்.
நல்ல சொற்களைப் பயன்படுத்துங்கள்
எப்போதும் குழந்தைகளுக்கு நல்ல சொற்களை பேச கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் இருக்கும் போது, வசவுச் சொற்களை பயன்படுத்த வேண்டாம். பள்ளியில் அல்லது விளையாட செல்லும் இடங்களில் குழந்தை, பிற குழந்தைகளிடம் இருந்தோ அல்லது சுற்றுவட்டார நபர்கள் மூலமாகவோ தவறான சொற்களை கற்றுக் கொள்ளலாம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என எடுத்துச் சொன்னால் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
பிறரை மதிக்க கற்றுக் கொடுங்கள்
அனைவரும் வேலையை விரைவாக முடித்து விட்டு வீடு திரும்புவும். தங்கள் தேவைகளை பார்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். வீட்டிலும் அப்படி இல்லாமல் பெரியோர்களையும் உறவினர்களையும் நண்பர்களையும் மதித்து நடப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் வலியுறுத்த வேண்டும். கொடுத்தால் திருப்பி கிடைப்பதில் மரியாதையும் ஒன்று என்பதை அவர்கள் மனதில் பதிவு செய்ய வேண்டும்.
தன்னம்பிக்கை பற்றி சொல்லிக் கொடுங்கள்
இன்று பல குழந்தைகள் உறவினர்களை பிரிந்து, தாய், தந்தையோடு அடுக்குமாடி குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் வாழ்கின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தை தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் பல விஷயங்களில் எப்படி நடந்து கொள்வது எப்படி சூழலை சமாளிப்பது என்று தெரியாமல் பயம் கொள்கிறார்கள். கவனமாக இருக்க வேண்டுமே தவிர பயந்து போய் இருக்க வேண்டியதில்லை என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
சுறுசுறுப்பாக செயல்பட உற்சாகம் அளியுங்கள்
குழந்தைகள், உற்சாகத்தோடு இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமை நேர்மாறாக உள்ளது. காரணம் அவர்கள் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை தான். அவர்கள் சுறுசுறுப்பாக பிற குழந்தைகளோடு கூடி விளையாடும் சூழலை உருவாக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தையோடு விளையாடிச் சிரித்து மகிழ வேண்டும். நிறைய வெளியிடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
நன்றி சொல்ல கற்றுத் தாருங்கள்
விரும்பிய பொருளோ அல்லது விஷயமோ பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிற மனிதர்கள் மூலம் கிடைக்க நேர்ந்தால் உடனே நன்றி சொல்லும் பண்பை கற்றுக்கொடுங்கள். அது நன்றி உணர்வை அதிகரித்து அவர்களை பண்பாளராக வளர செய்யும்.
0 கருத்துகள்