தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க மட்டுமல்ல,மின் மோட்டார், பி.வி.சி பைப் போன்றவற்றை வாங்கவும் மானியம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர்ப் பாசனத்துக்குச் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர், மற்ற விவசாயிகள் 12½ ஏக்கர் நிலத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துப் பயன்பெறலாம்.மேலும் துணை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் முழு மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, குழாய் பதிக்கும் செலவில் கூடுதலாக, 3,000 ரூபாய் பெறலாம் எனத் தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
சொட்டுநீர்ப் பாசன மானிய திட்டத்தில், விவசாயிகளுக்கு ஏற்படும் செலவைக் குறைக்கும் வகையில், மெயின் பைப் லைன் அமைக்கும் செலவில், ஹெக்டேருக்கு, 3,000 ரூபாய் மானியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. குழாய் பதிக்க வெட்டப்படும் குழியானது, இரண்டடி அகலம், இரண்டடி ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும். புதிதாகச் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள், குழி வெட்டும் செலவையும் சேர்த்து விண்ணப்பித்து, மானியம் பெறலாம். மேலும், நீர்ப்பாசன வசதியற்ற விவசாய நிலத்தில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கத் தேவையான நீர் ஆதாரத்தை உருவாக்குவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.25,000, மின் மோட்டார் பம்ப் அல்லது டீசல் இன்ஜின் வாங்குவதற்கு ரூ.15,000, கிணற்றிலிருந்து நீரை நுண்ணீர்ப்பாசனம் மூலம் வயலுக்கு எடுத்துச் செல்ல தேவையான பி.வி.சி நீர் கடத்துக் குழாய்கள் வாங்குவதற்கு ரூ.10,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படுகிறது.
உழவன் செயலி மூலம் சொட்டு நீர்ப் பாசனத்துக்கு விண்ணப்பித்து விட்டு, அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்துக்கு நேரில் செல்லவும். அப்போது, விவசாயிகள் சிட்டா, அடங்கல், ரேஷன் அட்டை நகல், ஆதார் கார்டு நகல், நில வரைபடம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 3 ஆகியவற்றை, அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்துச் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கப் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
உழவன் செயலியில் பதிவு செய்யும்போதே, சொட்டுநீர்ப் பாசன கருவிகள் வழங்கும் நிறுவனத்தையும் நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் என்றாலும், பாசனக் கருவியைத் தோட்டத்துக்கு எடுத்து வரும் வண்டி வாடகை மற்றும் இதர செலவுகள் என்று குறிப்பிட்ட தொகையை விவசாயிகள் கொடுக்க வேண்டும்.5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள விவசாயி என்றால், 75 சதவிகிதம் மானியம் போக மீதி தொகையைச் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நிறுவனத்துக்கே நேரடியாகச் செலுத்திவிடலாம்.
0 கருத்துகள்