கி.மு.7500ஆம் ஆண்டு காலத்தில் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் மிளகாயை பயன்படுத்தத் தொடங்கினாலும், கி.மு.3500ஆம் வருடத்துக்குப் பிறகுதான் பச்சைமிளகாய் பயிரிடத் தொடங்கினார்கள்.1493இல் மற்ற நாடுகளுக்கு கடல்வழியை கண்டுபிடிக்க கப்பலில் கிளம்பினார் கொலம்பஸ். அவர் கண்டெடுத்தவற்றில் மிளகாயும் ஒன்று. தனது பயணத்தின்போது மேற்கிந்தியத் தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் மிளகாயைப் பரப்பினார்.சுமார் 400 வருடங்களுக்கு முன்பு போர்ச்சுக்கல் மாலுமிகள் அரபிக்கடல் வழியாக கோவாவுக்கு வந்தபோதுதான் இந்தியாவில் மிளகாய் அறிமுகமானது.படிப்படியாக இந்தியா முழுவதும் மிளகாய் பரவியது.
இரகங்கள் :
கோ 1, கோ 2, கோ 3, பிகேஎம் 1, சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு, அர்கா மெகானா, அர்கா ஹரிதா, அர்கா சுவேதா மற்றும் அர்கா லோகித் ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாட்டு நிலம், செம்மண் ஏற்றது. 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.
விதையளவு
ஒரு எக்டருக்கு, நாற்றங்காலுக்கு ஒரு கிலோ விதையும், நேரடி விதைப்பிற்கு 2 கிலோ விதையும் தேவைப்படும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். அசோஸ் பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்கு குறைக்கலாம்.
நாற்றங்கால் தயாரித்தல்
நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீ. நீளம், 15 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் 5-10 செ.மீ இடைவெளியில் வரிசையில் விதைத்தபிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பி, பூவாளியால் தண்ணீர் ஊற்றவும்.
விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும். நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளூகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது, கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழு உரம் அல்லது மக்கிய குப்பை இட்டு 45 செ.மீ இடைவெளியில், பார்கள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
நடுவதற்கு 40 முதல் 44 நாட்கள் வயதுடைய நாற்றுகளே ஏற்றவை. தயார் செய்துள்ள பார்களில் பயிருக்கு பயிர் 30 செ.மீ. இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நாற்று நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றாக இருந்தாலும், நேரடி விதைப்பாக இருந்தாலும் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
அடியுரமாக எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். மானாவாரி அல்லது இறவைப்பயிர் இரண்டிற்கும் தழைச்சத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும். விதைத்த 70,100 மற்றும் 130வது நாள், நாற்றுகள் நட்ட 30,60,90ம் நாள் ஒவ்வொரு முறையும் எக்டருக்கு 30 கிலோ வீதம் தழைச்சத்து இடவேண்டும். உரம் இட்டபின் நீர்பாய்ச்சவேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கவும், பூக்கள் விடுவதைத் தூண்டவும் நட்ட 60 அல்லது விதைத்த 100வது நாளில் ஒரு முறையும், 30 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையும், வளர்ச்சி ஊக்கி என்ஏஏ 10 மில்லி கிராம், ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும் டிரையகான்கைடனால் 1.25 மிலி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.மிளகாய் செடியில் நன்றாக பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால், பூ நன்றாக விடும். அதேபோல் துளிரும் நன்றாக வரும். நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கிடைக்கும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
நாற்று நட்ட பின் 20-வது நாள் களை எடுக்க வேண்டும். நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.
இலைப்பேன்
இது, இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும். இப்பூச்சி தாக்குதல் காணப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீரில், டைமெத்தோயேட் 30 இ.சி என்ற மருந்தை 2 மி.லி கலந்து தெளிக்க வேண்டும்.
செஞ்சிலந்தி
இப்பூச்சி கண்ணுக்குத் தெரியாது. இப்பூச்சி தாக்கினால் இலை திட்டு, திட்டாக மஞ்சள் நிறமாக மாறும். இந்நோய் தாக்கினால் மிளகாய் வளைவாக மாறும்.இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, டைகோபால்ட் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மி.லி வீதம் கலந்து, ஒரு ஏக்கருக்கு 500 மி.லி தெளிக்க வேண்டும். நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீரில் 6 கிராம் கலந்தும் தெளிக்கலாம்.
காய்துளைப்பான்
இவ்வகை பூச்சி தாக்கினால் காய், தண்டு ஆகியவற்றில் புழுக்கள் துளையிடும். ஆரம்ப நிலையாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து தாய்ப் பூச்சிகளை அழிக்கலாம். அதேபோல், ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்தும் அழிக்கலாம். இப்பொறிகள் வைக்கும்போது கீழே தண்ணீரும், அதில் 2 சொட்டுகள் மண்ணெண்ணெயும் விட்டு வைக்க வேண்டும். டிரைக்கோ கிராமா கைலோனா என்ற ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 12 இடத்தில் கட்டியும் இப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
பச்சை மிளகாயை நட்ட 75 நாட்கள் அல்லது விதைத்த 105 நாட்களிலும், பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்குப் பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் 3 முதல் 4 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் இரண்டு பறிப்புகளிலிருந்து பச்சை மிளகாயும் அடுத்த பறிப்புகளிலிருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 210-240 நாட்களில், வற்றல்- 2-3 டன், பச்சைமிளகாய்-10-15 டன் வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளன.உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே பெண்கள் உட்கொள்வது நல்லது.
4 கருத்துகள்
நீங்க சொன்ன வரலாறு நம்புற மாதிரியா இருக்கு.
பதிலளிநீக்குசங்க காலத்தில் நம் முன்னோர்கள் மிளகுத்தூள் பயன்படுத்தி இருப்பார்கள்.இருந்த போதும் இது சம்பந்தமாக ஆழமான ஆராய்ச்சி தேவை
பதிலளிநீக்குநீங்க எப்படி பார்த்தாலும், இந்தியா மற்றும் அதை சூழ்ந்த நாடுகளில் மட்டும் தான் இப்பையும் மிளகாய் பயண்படுத்தும் வழக்கம் உள்ளது.நீங்க சென்ன நாடுகளில் இப்பையும் அவங்க பயன்படுத்துவது மிகக் குறைவு அதுவும் இந்தியர்கள் பழக்கிவிட்டது. மேற்கத்தியர்களுக்கு காரம் பிடிக்காது. சாப்பிடாத ஒன்ன அவங்க எப்படி விவசாயம் பண்ணிருப்பாங்க அதுவும் கீமு 7500,3500 க்கு முன்னாடி. விவசாயம் இந்தியாவில் தான் முதலில் செய்தார்கள். எங்க மக்கள் தொகை அதிகம் இருக்கோ அங்கதான் தேவை அதிகம் விவசாயமும் அங்கதான் நடந்திருக்கு. மேற்கத்திய நாடுகளில் மக்கள் மிகக்குறைவு அந்த காலத்தில் அங்க விவசாயத்துக்கு அவசியமே இல்லை. நீங்க சொன்ன வரலாறு சுத்தப் பொய்.எந்த logic இல்லை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு'அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்!
செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி!
குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டுவிட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம். 1,493-ம் ஆண்டில் கொலம்பஸ் மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்ஸ் சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர். அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விஷயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.
போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது. இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை. மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமேதான்.
காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.
மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இந்தியப் பெண்களையேச் சேரும்.
ஆதாரம்
vikatan
Published: 25th Feb, 2007 at 5:30 AMUpdated: over 1 year ago
வரலாறு: மிளகாய்