Ad Code

Ticker

6/recent/ticker-posts

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி

ஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும்.தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து, மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாகும். இதனை இந்துக்கள் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.
மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.இது முதலில் வண்ணச் சாயம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது.இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்ற பெயரும் உண்டு.
விதைதேர்வு
நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நடவு செய்ய 600-800 கிலோ மஞ்சள் தேவை.
விதை நேர்த்தி
மஞ்சளை அறுவடை செய்தவுடன் செதிள் பூச்சி மற்றும் பூஞ்சணம் தாக்காதவாறு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சளை நடுவதற்கு முன்பும் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதை முளைப்புத் திறன் நன்கு இருக்கும். பூச்சி மற்றும் பூஞ்சாணத் தாக்குதல் இருக்காது.
நடவு முன் விதை நேர்த்தி
ஆவூட்டம் – 2 லிட்டர்சூடோமோனஸ் – 1 கிலோதண்ணீர் – 100 லிட்டர்இவற்றை நன்கு கலந்து விதை மஞ்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். செதில் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் வெகுவாகக் கட்டுப்படும்.
நிலத்தேர்வு மற்றும் நிலப்பராமரிப்பு
மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மற்றுமொருமுறை மஞ்சளை பயிரிடக் கூடாது. இவ்வாறு பயிரிட்டால் நூற்புழுத் தாக்குதல் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் வெகுவாகப் பாதிக்கும். அதுபோல் நூற்புழு அதிகம் தாக்கும் வாழை, மிளகாய், தக்காளி, கத்தரி, கனகாம்பரம் சாகுபடி செய்த தோட்டத்தில் மஞ்களைப் பயிரிடக் கூடாது.
மாற்றுப் பயிராக கரும்பு, நெல் அல்லது தானியப்பயிர்கள் பயிரிடலாம். பயிர் சுழற்சி செய்வது மிகவும் அவசியம். ஆகவே மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு மாற்றுப் பயிர் செய்த பின்பு மஞ்சளைப் பயிரிடலாம். நிலத்தை 3-4 முறை உழ வேண்டும்.
கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழுஉரம் இட வேண்டும் அல்லது 2 டன் மண்புழு உரம் இட வேண்டும். நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடு இருந்தால் நெல் உமிச் சாம்பல் ஒரு ஏக்கருக்கு 500கிலோ வீதம் (1 டிப்பர்) கடைசி உழவின்போது இடலாம்.
பயிர் பராமரிப்பு
நடவு செய்த ஒரு வாரத்தில் களைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இவற்றை அகற்றிவிட சுரண்டுகளை செய்ய வேண்டும். 15 நாட்கள் கழித்து மீண்டும் களைகள் இருப்பின் கைகளை எடுத்து அகற்ற வேண்டும். களைக் கொல்லி போன்ற எந்தக் வேதிக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது.
30 நாட்கள் கழித்து களை இருந்தால் மற்றொருமுறை களை அகற்ற வேண்டும். பின்னர் மஞ்சள் செடி, பாரின் நடுவில் வருமாறு மண் அணைக்க வேண்டும். முன்னர் கூறிய பலவகைப் பயிர்களை ஏக்கருக்கு 10-12 கிலோ வீதம் பாரின் நடுவே து£வி உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.
நடவு செய்த ஐம்பது நாட்கள் கழித்து பாரில் தூவிவிட்ட பலவகைப் பயிர்கள் நன்கு வளர்ந்து இருக்கும். இவற்றை எல்லாம் பிடுங்கி ஒருபார்விட்டு ஒருபாரில் பரப்பிவிட வேண்டும். இதற்கு மூடாக்கு என்று பெயர். பரப்பிய பாரில் நீர் பாயாதவாறு மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால் பாதியளவு பாசனம் போதுமானதாகிறது பயிர்களைப் பரப்பி வைப்பதால் நீராவிப் போக்கு கட்டுப்படுத்தப் படுகிறது.
மண்புழுப் பெருக்கம் அதிகமாகி விரலி ஓட்டம் அதிகரிக்கும். நிலம் பொலபொலப்பாக மாறும்.நடவிற்கு 60 நாள் கழித்து தோட்டத்தில் காணப்படும் புல், பூண்டு மற்றும் சுற்றியிருக்கும் செடி,கொடிகளை சேகரித்து பலவகைப் பயிர்கள் பரப்பிய பாரில் போட வேண்டும். அதை அறுவடை வரையில் தொடர்ந்து செய்துவரலாம்.
பயிர்வளர்ச்சி குன்றி இருந்தால் அல்லது ஊக்கம் இன்றி இருந்தால் இதில் சொல்லப்பட்ட வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம்.அமுதக் கரைசல் (உடனடி வளர்ச்சி ஊக்கி)இதை நடவு செய்த 45 ஆம் நாளிலிருந்து பயன்படுத்தலாம்.
மாட்டுச் சாணம் – 1கிலாமாட்டுச் சிறுநீர் – 1 லிட்டர்பனைவெல்லம் – 250 கிராம்நீர் – 10 லிட்டர்இவற்றை நன்கு கலக்கி 24 மணி நேரம் ஊறவைத்து இதிலிருந்து 1 லிட்டர் கரைசலை எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் மூலம் மஞ்சள் இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். நடவு செய்த 45 நாளில் 50 லிட்டர் கரைசல் போதுமானது.
இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மஞ்சள் பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை:

அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டிராக்டர் லோடு மக்கிய தொழு உரம் அல்லது ஒரு டிராக்டர் லோடு ஊட்டம் ஏற்றிய தொழு உரம்.

வளர்ச்சி ஊக்கி அட்டவணை

3 மூன்றாம் நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

பல தானிய விதைப்பு - தழைசத்து மற்றும் களைகளை கட்டுப்படுத்தும்

15 ம் நாள்
நடவு - ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஏக்கருக்கு தரைவழி கொடுக்கலாம்.

 30 ம் நாள்
கியூமிக்  5 லிட்டர்  தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.

33  நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

 45 ம் நாள்
மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் தரைவழி தரலாம்.

 60 ம் நாள்
EM ஒரு லிட்டர்
 ஏக்கருக்கு தரைவழி தரலாம்.

பார்மாற்றும் போது - ஊட்டம் ஏற்றிய தொழு உரம் கொடுக்கலாம்.

62 நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

 75 ம் நாள்
வேஸ்ட்டிகம்போசர் தரை வழி கொடுக்கலாம்.

 90 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

91 நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

105 ம் நாள்
பஞ்சகவ்யா ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம்.

 120 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.
ஊட்டம் ஏற்றிய தொமு உரம் கொடுக்கலாம்.

121 நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

 135 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர்  தரைவழி கொடுக்கலாம்.

150 ம் நாள்
மீன் அமிலம் மூன்று லிட்டர் தரைவழி  கொடுக்கலாம்.

151  நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

 165 ம் நாள்
EM ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

 180 ம் நாள்
வேஸ்டிகம்போசர் தரை வழிதரலாம்.

181 நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

 195 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் ஏக்கருக்கு கொடுக்கலாம்.

210 ம் நாள்
பஞ்சகவ்யா மூன்று லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரைவழி தரவும்.

211 நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

225 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.

240 ம் நாள்
கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம்.

241  நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

255 ம் நாள்
மீன் அமிலம் மூன்று விட்டர் தரை வழி கொடுக்கலாம்.

270 ம் நாள்
EM ஒரு லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம்.

285 ம் நாள்
வேஸ்ட்டிகம்போசர் தரை வழி கொடுக்கலாம்.

300 ம் நாள்
வேம்பிளஸ் ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

301 நாள்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ்  தெளிக்கலாம்

315 ம் நாள்
பஞ்சகவ்யா மூன்று லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

தேவைப்பட்டால்
330 ம் நாள்
ஜீவாமிர்தம் 200 லிட்டர் தரை வழி கொடுக்கலாம்.

இந்த நாட்களுக்கு இடையில்
நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல்  தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்கலாம்.
அறுவடை
7 முதல் 9 மாதம் கழித்து மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை வண்ணம் மாறி இலை மஞ்சள் வண்ணமாகி வாடத் தொடங்கும். அச்சமயம் தாள்களை அறுக்கத் தொடங்கலாம். இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மண்வெட்டி கொண்டு கிழங்கு மற்றும் விரலியைச் சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.
அறுவடைக்குப் பிறகு விதை நேர்த்தி
(600-800 கிலோ விதை மஞ்சளுக்கு)ஆவூட்டம் (பஞ்சகவ்யம்) – 2 – 5 லிட்டர் (தயாரிப்புமுறை குறிக்கப்பட்டுள்ளது)சூடோமோனஸ்- 1- 2 கிலோதண்ணீர் – தேவையான அளவுஇவற்றை நன்கு கலக்கி விதை மஞ்சள் நன்கு மூழ்குமாறு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் விதை நேர்த்தி செய்த மஞ்சளை நிழலில் உலர வைத்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெப்பம் மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சேமிக்க வேண்டும். மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பாக மற்றுமொருமுறை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

கிழங்கு பாதுகாப்பு முறைகள்
கிழங்குகளை வேகவைக்க சாண நீர் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான நீரில் தான் வேக வைக்க வேண்டும். கிழங்குகளைச் சரியான அளவு வேகவைக்கவேண்டும். அதிகமாக வேகவைத்தால் நிறம் மங்கிவிடும். குறைவாக வேக வைத்தால் கிழங்குகள் காயும் போது நொறுங்கி உடைந்து விடும். நீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் சுமார் 45 முதல் 60 நிமிடங்களில் கிழங்குகள் நன்றாக வெந்துவிடும். இதனை சில குறிப்புகள் மூலம் கண்டறிலாம். முதலாவது நல்ல மஞ்சள் வாசனை வீசும். இரண்டாவது நீர் கொதிக்கும் போது நுரை தள்ளும். மூன்றாவது கிழங்கினை இலேசாக அமுக்கும்போது நெகிழ்ந்து கொடுக்கும். நன்கு வெந்த கிழங்கினுள் சிறு குச்சியினை நுழைத்தால் அது எளிதில் உள்ளே செல்லும். மஞ்சளை உடைத்துப் பார்த்தால் உட்பாகம் ஆரஞ்சு நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த சமயத்தில் கிழங்குகளை எடுத்து ஆறவிடவேண்டும்.
தூய்மையான தரையில் சூரிய வெப்பத்தில் காய வைக்கவேண்டும். மழையில் நனைய விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு முறை கிளறி விட்டு சீராக காயவிடவேண்டும். தினமும் மாலையில் கிழங்குகளை ஒன்றாகக் குவித்து தார்பாலினால் மூடிவிடவேண்டும். சுமார் 10 அல்லது 15 நாட்களில் மஞ்சள் காய்ந்துவிடும். கிழங்குகள் உறுதியாக மாறிவிடும்.

காய்ந்த மஞ்சளைப் பெரிய உருளைகளில் போட்டு மெருகூட்டலாம். இந்த உருளைகள் கையாலோ அல்லது மின்சாரத்தாலோ சுற்றப்படுகின்றன. மெருகூட்டும் போது மஞ்சள் கிழங்குகளின் மீதுள்ள செதில்கள், சிறு வேர்கள் நீங்கி மேற்புறம் பளபளப்பும் மெருகும் சேர்க்கிறது. இவ்வாறு மெருகூட்டும் போது நிறமிடுதல் செய்யவேண்டும். நிற மூட்டுவதற்கு இரசாயனங்களையோ, இதர பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது. நல்ல சுத்தமான உலர்ந்த மஞ்சள் பொடியினைச் சேர்த்து நிறமூட்டலாம்.
பதப்படுத்தப்பட்ட மஞ்சளைப் பாலித்தீன் உட்கொடுக்கப்பட்ட கோணிச் சாக்குகளில் அடைக்கவேண்டும். ஈரமற்ற தரைகளில் வைக்கவேண்டும். அவற்றிலிருந்து சுமார் ஒரு அடிக்கும் கூடுதலாக இடைவெளி விட்டு மஞ்சள் சிப்பங்களை அடுக்கவேண்டும். எலி, அணில், பறவைகள் உள்ளே நுழைய விடக்கூடாது. அவ்வப்போது சிப்பங்களை சூரிய வெளிச்சத்தில் காட்டுவதால் மஞ்சளின் சேமிப்பைக் கூட்ட முடியும். பூச்சி மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
மஞ்சள் பயன்கள்
மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.சளித் தொல்லையில் இருந்து விடுபட நன்றாக காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட வேண்டும்.
மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்