Ad Code

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களிடையே அரசியல் சமூக விழிப்புணர்வு

மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தேசப்பற்றும், மதநல்லிணக்கமும், சமூக விழிப்புணர்வு அவசியமாக இருத்தல் வேண்டும். நற்பண்புகளை உள்ள மாணவனே சிறந்த இந்திய குடிமகனாக உருவாகின்றான். மற்றும் தேசநலன் கருதி நற்செயல்களைப் புரிய முன்வரவேண்டும். நாளைய உலகம் இன்றைய இளைஞர்களிடம் தான் உள்ளது. நாட்டின் நடப்புகள், அரசியல் செய்திகள், வர்த்தக செய்திகள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, போன்றவை குறித்து மாணவர்களிடம் நல்ல விழிப்புணர்வு இருக்க வேண்டும். மக்களாட்சி நாடான இந்தியாவில் பல கட்சிகள் இருக்கின்றன.அவற்றின் நோக்கங்களையும் கொள்கைகளையும் மாணவர்கள் அறிய வேண்டும். கட்சியினர் கொள்கையின்படி செயல்படுகிறார்களா என்பதையும் கூர்ந்து நோக்க வேண்டும். 18 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது.  இந்தியாவில் 1947 முதல் ஆண்களும் பெண்களும் 18 வயது நிரம்பினால் வாக்களிக்கலாம் என்ற உரிமை அளிக்கப் பட்டது. தாம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களைப்பற்றி அறிந்து இருக்க வேண்டும். வாக்களிப்பதை தம் கடமையாகவும் உரிமையாகவும் கருத வேண்டும்.

அரசியலில் ஈடுபட்டு நற்செயல்களை புரிய விரும்பும் மாணவர்கள் காந்தி, நேரு, படேல், காமராஜர், பெரியார் ஆகியோரின் வாழ்க்கை பாடங்களை கற்க வேண்டும். சுதந்திர போராட்ட வரலாற்றை நன்கு கற்று அறிய வேண்டும். அப்பொழுது தான் இந்திய தாயின் பெருமைகள் தெரியும். சும்மா கிடைக்கவில்லை இந்திய சுதந்திரம். பலரது உயிர் மற்றும் பொருட் களை தியாகம் செய்துதான் இந்தியாவை மீட்டனர்.இன்றைய அரசியல் போக்கினை அறிந்து கொள்வதுடன் தமக்கென ஒரு நல்வழியை தேர்ந்தெடுத்து அவ்வழியில் நிற்கவேண்டும். இன்றைய அரசியல் சூழலில் நன்னெறிகொண்ட நன்மக்கள் பங்கேற்பது மிகவும் அவசியம். படித்தவர்களும், சமுதாய நற்செயல் புரியும் எண்ணம் கொண்டவர்களும் நாட்டிற்காக உழைக்க அரசியலில் ஈடுபடலாம். பெண்கள் பெருமளவு அரசியலுக்கு வரவேண்டும்.  கிராம சபைகளில் பெண்கள் நற்செயல் புரிகின்றனர். பெண்களுக்குள்ளும் படித்தவர்களும், தீர்மானம் எடுக்க தெரிந்தவர்களும் நன்னெறி கொண்டவர்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும். துணிச்சலும், அறநெறிகளும் மிகுந்த பெண்கள் அரசியலிலும்  பொது சேவைகளிலும் ஈடுபட வேண்டும். பெண்கள் சிலர் தாய்மை உள்ளத்துடன் நற்செயல் புரிந்து வருகின்றனர். அச்செயல்கள் பெருமளவில் தொடர வேண்டும்.

கட்சியில் இல்லாமலும் சமூக பணிகளைச் செய்யலாம். கட்சி அதிகாரம் இல்லாமல் வள்ளலார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ராஜா ராம் மோகன் ராய் போன்றோர் நற்பணி செய்தார்கள். இந்திய சமுதாயத்தில் வறுமையில் வாடுவோரும் கல்வியறிவு இல்லாத சிறார்களும், எழுத்தறிவில்லாத மலைவாழ் மக்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் வாழ்வு மேம்பட தனியார்  நல அமைப்புகளுடன் சேர்த்து இளைஞர்கள் தொண்டு புரியலாம். மேலும் நம் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையும் நடைமுறையில் உள்ளது. கொத்தடிமை தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் வறுமையின் காரணமாக தம்மையே அடகுவைத்து முதலாளிக்காக உழைக்கின்றனர். இவர்களைப்பற்றி எல்லாம் இளைஞர் சமுதாயம் தெரிந்து அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். செய்தித்தாட்களில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் இறப்பதும், பெண் கடத்தப்படுவதும், பெண் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் மூர்க்கர்களையும் நாம் காண்கிறோம். இளைஞர்கள் இத்தகைய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அரசின் மூலம் நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும். பெண் விடுதலைக்காக குரல் கொடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இளைஞர்கள் நன்னெறியில் சென்றால் இந்தியா முன்னேறுவதை யாரும் தடை செய்ய இயலாது. விவேகானந்தர் கூட
"நூறு இளைஞர்களை தாருங்கள்
வலிமையான பாரதத்தை
உருவாக்கித் தருகிறேன்"
என்று கூறினார். அந்த அளவுக்கு இளைஞரிடம் நம் நாட்டின் பொறுப்புகள் உள்ளது.
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்ததுவே"
என்கிறார்..... அதற்கேற்ப குடும்ப பொறுப்பும் பெற்றோரைப் பேணும் பொறுப்பும் இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது.

ஆனால் இன்று பல இளைஞர்கள் தாம் எதற்கு வாழ்கிறோம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். மனித உயிர்களின் மதிப்பு தெரியாமல் வாழ்கிறார்கள். கூடா நட்பின் காரணமாக இளம் வயதிலேயே கெட்டு சீரழிகிறார்கள். இத்தகையோரை பிறரையும் நன்றாக வாழ விடுவதில்லை. அவர்களுக்கும் தம்மைப் போன்ற தீய பழக்கவழக்கங்களை கற்றுத் தருகிறார்கள். இத்தகையோரை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். கூடா நட்பின் காரணமாக புகைப்பது, மது அருந்துவதும், போதை பொருட்களுக்கு அடிமையாவது,  போன்ற செயல்களுக்கு அடிமையாகின்றனர்.
"நாடென்ன செய்தது என்று கேளாதே
நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று கேள்"என்கிறார் அறிஞர் அண்ணா இப்படி இளைஞர்களில் பெரும்பாலோர் தீய வழிகளில் சென்றால் இந்தியா எப்படி முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும். குடித்துக், குடித்து சீரழிந்து பின்னர் அனைத்தையும் இழந்து தெருவிற்கு வந்தால் யாருக்கு நன்மை? புகைப்பதன்  காரணமாக புற்றுநோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இவர்கள் விடும் புகையால் அருகில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர். குடித்து மடிவதற்காக மானுட வாழ்க்கை? மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தம் குடும்பம், சமுதாயம் மற்றும் நாட்டின் மீது பற்று வைக்க வேண்டும். குடியினால் ரோமானிய சாம்ராஜ்யமே அழிந்து போனது. போதையினால் கலையும், கலாச்சாரமும், நாகரீகமும், பண்பாடும் ஒருங்கே பெற்ற சீனா பலரிடம் அடிமைப்பட்டது.பல குடும்பங்கள் நிர்கதியாய் நின்றன. குடும்பத்தில் ஒருவன் மது அருந்துவதால் அக்குடும்பமே அழிகிறது. மனைவியும் குழந்தைகளும் ஆதரவு இல்லாமல் தவிக்கின்றனர். நம் கனவு இந்தியா நனவாக மாணவர்கள் பொறுப்பை உணர வேண்டும். எதிர்காலச் சிற்பிகளான நீங்கள்தான் புதிய இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு உள்ளவர்கள். எனவே அரசியல் சமூக நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கவேண்டும். வருங்காலத்தில் ஆட்சி பணிகளிலும். சமூகப் பணிகளிலும் பொது வாழ்விலும் அரசியலிலும் ஈடுபட்டு நாட்டை வளமாக மாற்ற வேண்டியது இளைஞர்களுடைய கடமை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்