Ad Code

Ticker

6/recent/ticker-posts

தன்னம்பிக்கை

ஒரு மனிதனுக்கு தன் மீதும் தன் திறமையின் மீதும் உள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை ஆகும்.தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும் என்கின்றார் சுவாமி விவேகானந்தர்.தன்னம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே வாழ்வில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளித்து உன்னத்தை அடைய முடியும். மனித சமுதாய வரலாற்றை புரட்டிப்பார்த்தால் மாபெரும் சாதனைகள் தன்னம்பிக்கையின் அடிப்படையில் தான் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன. தன்னம்பிக்கையும் தளரா முயற்சிமே மேரி கியூரி அம்மையாருக்கு இரண்டு நோபல் பரிசுகளை பெற்று தந்தது என்றால் மிகையாகாது."நீ எதை நினைக்கிறாயோ! அதை அடைவாய் என்று இன்றைய மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.நம் வாழ்வில் மகத்தான சாதனையை அடைய தன்னம்பிக்கை என்றும் அவசியம். மனிதன் தன் வாழ்வில் ஆர்வம் கொள்ளவும் மனம் தளராது முயற்சிகள் மேற்கொள்ளவும் தன்னம்பிக்கை உதவுகின்றது.வாழ்க்கை வாழ்வதற்கே என்பது சான்றோர் கூற்று. அதிலும் இன்பமாக வாழ வேண்டும் என்பது அனைவரின் எண்ணம். இன்பமாக வாழ தன்னம்பிக்கை மட்டுமே ஊன்றுகோலாக திகழ்கின்றது. தடைகளை மீறி வெற்றிகளை அடைய முடிகின்றது. வாழ்க்கை என்னும் வேக ஓட்டத்தில் அதற்கேற்ப ஓடினால் நாம் எதை விரும்புகிறோமோ அதனை அடையலாம்.மேலும் எதை அடைய விரும்புகிறோமோ அதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.சாதனைகள் புரிய சோர்வும் சோம்பலும் கூடாது. கடின முயற்சியும் உழைப்பும் தேவை. எந்த செயலையும் மிக தெளிந்த சிந்தனையுடனும், மிக நேர்த்தியாகவும், விரைவாகவும், எளிதாகவும் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

"நாள்தோறும் நாலு சொட்டுத் தன்னம்பிக்கை அருந்து. நீ நன்னம்பிக்கை முனை வரை நடந்தே போகலாம்". இது கவிஞர் சிதம்பரநாதன் தன்னம்பிக்கை சூத்திரம் இதனையே வள்ளுவரும்
"எண்ணி எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்".
என்று கூறுகின்றார். அதாவது செயலை செய்ய நினைத்தவர் தன்னம்பிக்கை உடையவராக இருந்தால் நிச்சயம் அவர் நினைத்தவாறே அவர் நினைத்தவற்றை அடைவர் என்று கூறுகின்றார். இத்தகைய தன்னம்பிக்கை நற்செயல் புரிவதற்கு துணையாய் இருக்க வேண்டும். சமுதாயம் பயன்பெறும் பணிகளை செய்யத் தூண்டுகோலாய் இருக்க வேண்டும்.தன்னலமற்ற தன்னம்பிக்கை வேண்டும். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்ற தன்னம்பிக்கையை இன்றைய இந்தியாவை வலிமைமிக்க பாரதமாக உருவாக்கலாம் என்பது திருவள்ளுவரின் தன்னம்பிக்கை சூத்திரம். நீர் உயர உயர தாமரையும் உயர்கின்றது. அதுபோல தன்னம்பிக்கை உயர உயர மனிதன் உயர்கின்றான். அவனுக்கு உள்ள தன்னம்பிக்கையின் அளவைப் பொருத்து அவனது வளர்ச்சி ஏற்படுகின்றது என்பதே வள்ளுவரின் கூற்றாகும்.
"யானையின் பலம் தும்பிக்கையில்  மனிதனின் பலம் நம்பிக்கையில்" இந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால் பல சாதனைகளை செய்ய இயலும். உலகில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஏற்பட அந்தந்த பல விஞ்ஞானிகளிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையே காரணம் என்றால் மிகையாகாது.

மாவீரன் நெப்போலியன் "என்னால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாது என்னால் முடியும்". என்று கூறுவாராம். எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய இயலும் என்று நம் திறமையை வளர்த்துக் கொண்டு அதன் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். வெற்றி உங்கள் இல்லம் தேடிவந்து வாயிற்கதவு தட்டும். இமயத்தின் சிகரம் எவரெஸ்ட்.அதன் மீது தன் பாதங்களை பதிக்க நினைத்த எட்மண்ட் ஹில்லாரி தோல்வியுற்றார். ஆனால் மனம் தளரவில்லை. தன் அறையில் எவரெஸ்ட் சிகரத்தின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டு அவர் "எவரெஸ்ட் சிகரமே! நீ இனி வளர இயலாது" எனக் கூறி தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சித்தார் உலக வரலாற்றில் இடம் பிடித்தார்.
இளைஞனே!
இமயம் உயரம் இல்லை!
நிமிர்ந்து நில்!
நீயே உயரம்!
என்ற இப்புதுக் கவிதை தன்னம்பிக்கை ஊற்றெடுக்க அளவை என்பதில் ஐயமில்லை.ஒரு காட்டில் முயல்குட்டி ஒன்று இறை உண்டபின் விளையாடிக் கொண்டிருந்தது.அவ்வழியே பசியோடு ஒரு வேட்டை நாய் வந்து கொண்டிருந்தது. அதன் கண்களில் இறை தேடும் கூர்மை இருந்தது. அப்போது அதன் கண்ணில் விளையாடிக் கொண்டிருந்த முயல் குட்டி தென்பட்டது. உடனே சந்தோஷித்து முயல் குட்டியை நோக்கி ஓட ஆரம்பித்தது. தன்னை நோக்கி வேட்டை நாயின் உள்நோக்கம் உணர்ந்து முயல்குட்டி மின்னல் வேகமாக ஓடி வேட்டை நாயிடம் இருந்து தப்பித்துக் கொண்டது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த வேடன் தோற்று வந்த நாயிடம் ஓட்டத்தில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள நீ ஒரு சிறு முயல் குட்டியிடம் தோற்று விட்டாயே என்று பரிகசித்தான். அதற்கு அந்த நாய், முயல் தன் உயிர் காக்க ஓடுகிறது. நானும் உணவுக்காக ஓடினேன். உணவுத் தேவையை விட உயிர்காப்பது உயர்ந்தது என்பதால் முயல் என்னைவிட எளியவனாக இருந்தாலும் உயிர்காக்க ஓடிய ஓட்டம் வல்லவனான என்னையும் மிஞ்சி வைத்துவிட்டது என்று பதிலளித்தது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் இலட்சியம் உயர்வாக இருந்தால் அது தரும் தன்னம்பிக்கை, வல்லவர்களையும் ஜெயிக்க வைத்து விடும். தன்னம்பிக்கை உள்ளவன் எதையும் சாதிப்பான். எனவே தன்னம்பிக்கை எனும் விதையை நெஞ்சில் விதைத்துக் கொண்டால் நாமும் உயரலாம், நாடும் வீடும் நலம்பெறும்.


கருத்துரையிடுக

1 கருத்துகள்