Ad Code

Ticker

6/recent/ticker-posts

அமைதி எங்கே

சஞ்சலமற்ற உளப்பாங்கே அமைதி எனப்படுகிறது. தெளிவான சிந்தனைக்கு அமைதி அடிப்படை ஆதாரமாக அமைகிறது. அமைதி இல்லாதவர் எண்ணத்திலும், செயலிலும் தெளிவு இருப்பதில்லை. குழப்பங்களே விஞ்சி நிற்கும். ஒரு பிம்பத்தை அதன் வடிவாகவே பிரிதிபலிக்கும்  திறன் ஆரவாரமில்லாத அமைதியான நீர்நிலைக்கு உண்டு. ஆனால் அதே நீர்நிலை புறக் காரணிகளால் பாதிக்கப்பட்டு அலை மோதும் போது அதனால் பிம்பத்தை தெளிவாக பிரதிபலிக்க செய்ய முடிவதில்லை. நீர்நிலைகள், பிம்பம் நிலவி வரும் சூழல்  ஆகியவைகள் ஒரே மாதிரியாக இருந்த போதிலும் பிற காரணங்களால் தெளிவு என்ற நிலை பாதிக்கப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டை நாம் மனிதரோடும் ஒப்பிடலாம்.  தெளிவான சிந்தனையாளன் எப்பொழுது பிற காரணங்களால் பாதிப்படைகிறானோ அப்பொழுது அவன் அமைதியை இழந்தவனாகிறான். அமைதியில்லாச்  சிந்தனை. தெளிவிற்கு வழிவகுப்பதில்லை.ஆக அமைதி என்ற ஒன்று மிகவும் இன்றியமையாததாகும். புராண காலங்களிலிருந்து மன அமைதிக்கான வழி முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகமும் தியானமும் மன அமைதியைத் தரவல்லது என்பது எல்லா காலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையாகும். கோபத்தைத் தணிப்பதாலும்.  நாம் இருக்கின்ற சூழ்நிலையை சீர்தூக்கி பார்ப்பதாலும் மன அமைதியைப் பெறலாம்.

அமைதி எங்கே? என்று தேடி அலைவதால் அமைதி கிடைத்துவிடாது.அமைதி எப்போதும் நம்முள்ளே நம்முடன் இருப்பதாகவும். அது வெளிபொருளல்ல. வெளிச் சூழலிலிருந்து தருவிக்க கூடிய பொருளும் அல்ல. எவன் ஒருவன் தன் ஆஸ்திகளை துறந்து 'நான்'' எனது' என்ற அகங்காரங்களை விட்டொழிக்கிறானோ அவனே அமைதியை அடைவான். ஒரு குரு அமைதியான சூழ்நிலையில் தம் மாணாக்கர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது புதிதாக கல்வி கற்க வந்த மாணக்கர் எழுந்து. "குருவே!எனக்கு அமைதி வேண்டும். அதை அடையும் வழி எனக்கு கற்றுத் தாருங்கள். இதற்காக நான் உங்களை யாசிக்கிறேன்" என்று தான் அமைதியற்ற நிலையிலிருப்பதை குருவிடம் தெரிவித்தார். அதற்கு அந்த குரு தம் மாணாக்கரை ஒருமுறை ஆனந்த நோக்கிவிட்டு இதில் ஒன்றும் சிரமம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உன் வேண்டுதலைத் திரும்ப ஒருமுறை கூறு எனக் கேட்டார். அம்மாணக்கர் மீண்டும் ஒரு முறை 'எனக்கு அமைதி வேண்டும்' என்றார்.

உடனே குருவானவர் உன் வேண்டுதலில் உள்ள இரு வார்த்தைகள் அதாவது 'எனக்கு' மற்றும் 'வேண்டும்' என்ற வார்த்தைகளை அழித்துவிட்டு பார். நீ வேண்டும் அமைதி உன் வார்த்தையிலேயே உள்ளது என்றார். இக்கதையிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் 'எனக்கு' என்பது சுயநலம் 'வேண்டும்' என்பது தேவையின் நிர்ப்பந்தம். சுயநலத்தை நம் அனைத்து செயல்களிலும் விஞ்சி நிற்க விடக்கூடாது. சுயநலத்தோடு பொதுநலம் போற்றப்படவேண்டும். தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பொழுது அதிக தேவைக்கான தேடல் குறைகிறது. ஆகவே 'நான்' என்ற அகந்தையை அறவே ஒழித்தும் தேவையை குறைத்துக் கொண்டும் வாழும் மனித வாழ்வு அமைதியான வாழ்வேயாகும். அமைதியை தேடித்தான் கௌதம புத்தர் காடு, மலையெல்லாம்  சுற்றி திரிந்தார். இறுதியாக போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். இவ்வுலக துன்பங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்த அவர் மக்களுக்கு உபதேசிக்க தொடங்கினார். துன்பம் தொலைந்தால் அமைதி குடியேறும். புத்தர் தாம் கண்டறிந்த உண்மைகளாக.
"ஆசையே துன்பத்திற்கு காரணம் ஆசையே நீக்கினால் துன்பமின்றி மன அமைதியுடன் வாழலாம்" என்று கூறினார்.பகவான் ஸ்ரீ அரவிந்தர்  மௌனத்தின் மூலம் அமைதி கண்டார். மௌனம் ஒரு மாபெரும் சக்தி என்பதை உணர்ந்தார். உலக மக்களிடம் மௌனத்தின் பெருமையை அறிய செய்தார். அந்த மனோரம்யமான அமைதி சூழலில் உள்ளத்தின் ஆனந்தத்தையும் எல்லையில்லா இனிமையும் காண செய்தார். மௌனம் ஒரு மாபெரும் தத்துவம்.அதை அனைவராலும் எல்லா சூழ்நிலையிலும் பின்பற்றுவது கடினம். அதில் வெற்றி கண்டவர் பகவான் ஸ்ரீ அரவிந்தரே ஆவர். அமைதியும் மௌனத்தையும் கடைப்பிடித்த அவர் தியானத்தின் உச்சியைத் தொட்டார்.  பேரானந்தம் அடைந்தார். தியானத்தின் வலிமையை உணர்ந்தார்.
                 

கருத்துரையிடுக

0 கருத்துகள்