Ad Code

Ticker

6/recent/ticker-posts

கங்கைகொண்டசோழபுரம் சுற்றுலா


முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது இம்மூன்றும், கங்கை நதிகரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய வீரத்தின் நினைவுச்சின்னங்களாக இன்றும் விளங்குகின்றன. அவன் தனது தலைநகரத்தை தஞ்சாவூரிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட இங்கு மாற்றினான். அவனது காலத்திலிருந்து, கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. அவர் இங்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கற்கோவில், இடைக்கால சோழர் காலத்திய அழகான சிற்பங்கள் நிறைந்த களஞ்சியமாகும். இந்த நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது
இராஜேந்திர சோழனின் கங்கை பயணம் அவனது ஆட்சியின் 11 வது ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏசாலம் செப்புத்தகடுகள் மூலம் கி.பி 1036 இல் முதலாம் இராஜேந்திர சோழனால் கங்கைகொண்டசோழீச்சரம் கோவில் கட்டப்பட்டதாக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகிறது. முதலாம் இராஜேந்திர சோழன் அவனது ஆட்சியின் 24 ஆம் ஆண்டில் இந்த கோவிலுக்கு கிராமங்களைத் தானமாகக் கொடுத்த விபரம், கி.பி 1068 இல் ஆட்சி செய்த வீரராஜேந்திர சோழனின் குறிப்புகளில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. இன்றளவும் வாழும் வரலாறாக உள்ள இக்கற்கோவில், முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து எடுத்து வந்த பல சிற்பங்கள், போர் நினைவுப் பரிசாக இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சந்தேஷ்வர அனுக்கிரக மூர்த்தி மற்றும் சரஸ்வதி ஆகியவை இக்கோவிலுள்ள அழகிய சிற்பங்கள் ஆகும். தற்போது இக்கோவில் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சமீபத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களுள் ஒன்றாக இதனை அறிவித்துள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் 

 கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும். இக்கோவிலின் வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன. அவை முறையே "வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும். வடகைலாய கோவிலில் பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் இருந்து 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்து உள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள். கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். பெரிய நாயகி அம்மன் பெயருக்கு ஏற்றார் போல் 9.5 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறாள். இங்கு உள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் இன்னும் ஒரு சுவாரஸ்யமான இடம் என்னவென்றால், அங்கு ஒரு சிங்கம் இருக்கிறது, சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும் அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம் ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.பிச்சாவரம், சிதம்பரம் ஆகியவை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள். இந்த வரலாற்று தளத்தைப் பார்வையிடுவது பண்டைய இந்தியா மற்றும் சோழ வம்சத்தின் உச்சத்தில் இருந்த அதன் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி ஆராய உதவும்.

விமான நிலையம்:

 115 கி.மீ தூரத்தில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி ஆகும்.

 தொடர்வண்டி: 

 கும்பகோணத்தில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து கங்கை கோண்டா சோழபுரம் 34 கி.மீ தூரத்தில் உள்ளது. 

 பேருந்து: 

 கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுரை, ஜெயம்கொண்டம் மற்றும் அரியலூர் போன்ற நகரங்களிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்தை அடைய பேருந்துகள் உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்