Ad Code

Ticker

6/recent/ticker-posts

நான் ஏன் பிறந்தேன்? வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன?

 தமிழ் அறிவோம்!


நான் ஏன் பிறந்தேன்?


வணிகன் ஒருவன், பொருள்களையெல்லாம் சந்தையில் விற்றுப் பெரும்பணத்துடன்  ஊர் திரும்பினான். வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டான். பின்னர், வீட்டிற்குச்  சென்றான். பணத்தைப் பெட்டியில் வைக்க எண்ணினான். ஆனால், பணப்பையைக் காணவில்லை. தான் ஓய்வெடுத்த இடத்தில் தொலைத்துவிட்டதாகக் கருதினான். உடனடியாக அந்த இடத்தை நோக்கிச் சென்றான். ஆனால், அங்குப் பணப்பை இல்லை. அந்த வணிகன் விட்டுச்சென்ற பணப்பையை ஆசிரியர் ஒருவர் கண்டெடுத்தார். அதைத் தம் வீட்டிற்குக் கொண்டு சென்றார். வீட்டு வாசலின் முன்பு, ஒரு பலகையைக் கட்டி அதில் "பணப்பையைத் தொலைத்தவர்கள் இங்கு வந்து பெற்றுக் கொள்ளலாம்" என எழுதி வைத்தார். 

நான் ஏன் பிறந்தேன்? வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன?


செய்தியறிந்த வணிகன், அந்த வீட்டுக்குச் சென்றான். ஆசிரியரின் நல்ல பண்பைப் பாராட்டி, அந்தப் பணத்தில் பாதியைக் கொடுக்க முன்வந்தான். ஆனால், அந்த ஆசிரியர் அதை வாங்க மறுத்துவிட்டார்.  உடனே அந்த வணிகன், "என் மனநிறைவுக்காக வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்"  

என்று கூறி, அப்பணத்தை அவர் வீட்டிலேயே வைத்துவிட்டு உடனே விரைந்து சென்றான். ஆனால், "திருடன், திருடன்! அவனைப் பிடியுங்கள்!" என்று கத்திக்கொண்டே அந்த ஆசிரியர் ஓடிவந்தார். அங்கிருந்தவர்கள் அந்த வணிகனைப் பிடித்துக் கொண்டார்கள். "அவன் என்ன திருடினான்?" என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அந்த ஆசிரியர், "என்னுடைய நேர்மையும், இதுவரை நான் காப்பாற்றி வந்த நன்மதிப்பையும் திருடிக் கொண்டான்" என்று நடந்ததை விவரமாகக் கூறினார்.


வணிகனின் பணப்பையை ஆசிரியர் திரும்பத் தந்தார். ஆனால், வணிகன் அவர் மனநிறைவுக்காகப் பணத்தை வைத்துவிட்டு ஓடினான். ஆசிரியர் அதை "நேர்மை திருட்டு" என்று கத்தினார். பணம் இழந்தால் திரும்பத் தேடுகிறோம். புகழ் போனால் தவிக்கிறோம். ஆனால் நேர்மை, அறம் இவை போனால் யார் கவலைப்படுகிறோம்? ஆசிரியருக்குப் பணம் பெரிதல்ல. "நேர்மை" எனும் செல்வமே பெரிது. அதைத் திருடியதால் தான் அவர் "திருடன், திருடன்!" என்று கத்தினார். புலனுக்கு அடிமையாகி, பொய் பேசி, அறம் மறந்து வாழும் வாழ்க்கை "பிறவாத வாழ்க்கை". பிறந்ததற்கான பொருளே இல்லாத வாழ்க்கை ஆகும். 

 

"நான் ஏன் பிறந்தேன்?" இந்த வினாவுக்கு விடை சொல்லும் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். பணம் சேர்க்காமல் போனாலும் பரவாயில்லை. நேர்மையை, அறத்தை, அன்பை இழந்துவிடக் கூடாது. ஏனெனில், பணம் திருடு போனால் மட்டும் கத்துபவர்கள் இங்கு மிகுதி. ஆனால், தன் நேர்மை திருடு போனதற்காகக் கத்தும் மனிதர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் நாமும் ஒருவராக இருப்போம். 


"பொல்லா தவன்நெறி நில்லா தவன்ஐம் புலன்கள்தமை  

வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய் அடியவர்பால்  

செல்லா தவன்உண்மை சொல்லா தவன்நின் திருவடிக்கன்பு  

இல்லா தவன்மண்ணில் ஏன்பிறந் தேன்கச்சி ஏகம்பனே?"


(பட்டினத்தார் பாடல்கள் - 220) 

 

"தீய செயல்களைச் செய்பவன். அறநெறியில் நடக்காதவன். கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய ஐந்து புலன்களின் ஆசைக்கு அடிமையானவன். நற்பண்புகளைத் தரும் கல்வி மற்றும் ஞானத்தைக் கற்காதவன். இறைவனின் உண்மையான அடியவர்களைச் சந்தித்து அவர்களின் அருள்வழியை நாடாதவன். எப்போதும் பொய்யையே பேசுபவன். இறைவனின் திருவடிகளில் அன்பு இல்லாதவன். இந்தக் குறைகள் அனைத்தும் என்னிடம் இருக்கும் போது, நான் ஏன் இந்த மண்ணில் பிறந்தேன்?"  என்று காஞ்சிபுரம் ஏகம்பநாதரிடம் (கச்சியேகம்பனே) மனம் உருகிக் கேட்கிறார் பட்டினத்தார்.


இவண் 

ஆ.தி.பகலன்,  

நெறியாளர்,  

சதுரைத் திருக்குறள் பேரவை,  

சதுரங்கப்பட்டினம்,  

செங்கல்பட்டு மாவட்டம்.  

(அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்