Ad Code

Ticker

6/recent/ticker-posts

தவ வலிமையை அதிகப்படுத்தும் தர்ப்பைப் புல் | Darbha Grass Benefits in Tamil | Natural Power Booster



 சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக கருதப்படும் தர்ப்பைப் புல் மிகவும் புனிதமானது. பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரால் தியானம் செய்வதற்கு சிறந்த ஆசனமாக பரிந்துரைக்கப்பட்ட தர்ப்பைப் புல், புத்தர் ஞானஒளி பெறுவதற்காகவும் ஆசனமாக பயன்படுத்தப்பட்டது. ரிக் வேதத்தில் மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தர்ப்பைப் புல் குறிப்பிடப்படுகிறது.


சுப காரியங்களின் போது மோதிர விரலில் தர்ப்பைப் புல் அணிந்து கொள்வதால் இறை ஆற்றல் கிடைக்கிறது. மோதிர விரல் வழியாக சக்திகள் ஊடுருவி வலது மூளைக்கு சென்று தூண்டிவிடப்பட்டு எண்ண ஓட்டத்தை தெளிவ டையச் செய்யும் என்கிறார்கள். தர்ப்பைப் புல்லை வைத்துகொண்டு ஜெபித்தால் அதன் ஆற்றலை உணரலாம். தியான நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தவும், மனது அலைபாய்வதைத் தடுக்கவும், இறைவனுக்கும் நமக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கவும் இந்த தர்ப்பை பயன்படுகிறது.


தர்ப்பைப் புல் எதிர்மறை ஆற்றலை அழிக்கும் வல்லமை கொண்டது. நஞ்சையும், அமுதமாக மாற்றக்கூடியது. தேவர்களாலும், முனிவர்களாலும், ரிஷிகளாலும் பயன் படுத்தப்பட்டது. தர்ப்பைப் புல் இருக்கும் இடத்தில் பாம்பு வராது என்பார்கள். விஷ சக்திகளுக்கு விரோதியான தர்ப்பைப் புல் புனித இடங்களில் மட்டுமே வளரக்கூடியது.


ஹோமம், மந்திரங்கள் ஒலிக்கும் இடத்தில் இந்த தர்ப்பைப் புல்லுக்கு முதலிடம் உண்டு. ஹோம குண்டங்களிலும், யாக சாலைகளில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுக்கும் மந்திர ஒலியை கடத்தி சக்தியை அளிக்கவும். குண்டங்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தர்ப்பைப் புல்லை நான்கு பக்கமும் வைக்கிறார்கள்.


தர்ப்பைப் புல் காற்றுப்படும் இடங்கள் தூய்மையாகும் என்பதால் கிரகண காலங்களில் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள் நஞ்சாக மாறக்கூடாது என்பதற்காக அதில் இந்த தர்ப்பைப் புல்லை போட்டுவைக்கும் பழக்கம் உள்ளது. முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போதும், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும், கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படும் தர்ப்பைப் புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. '


அக்னிகற்பம்" என்று அழைக்கப்படும் தர்ப்பைப் புல்லில்அதிகமான தாமிரச்சத்து உள்ளதால் நமது உடலில் கிருமித் தொற்றை உட்புகாமல் பாதுகாக்கிறது.தர்ப்பைப் புல் தண்ணீருக்குள் பல நாட்கள் இருந்தாலும் அழுகாது, தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாத சக்தி கொண்டது. சுப காரியங்களுக்கு தர்ப்பைப் புல்லை கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்கள். பஞ்சலோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பைப் புல்லிலும் இருப்பதால் கோவில் கும்பாபிஷேகங்களின் போது தங்கம், வெள்ளி கம்பிகளுக்கு இடையில் அருளைக் கடத் துவதற்காக தர்ப்பைப் புல்லை பயன்படுத்துகிறார்கள்.


ராமபிரானின் இரண்டாவது மகனின் குசா என்ற பெயரே தர்ப்பைப் புல்லின் மற்றொரு பெயராக உள்ளது. இதனை புறநானூற்று பாடல்கள் மூலமாக அறிய முடிகிறது. கோவிலில் உள்ள விக்ரகங்களையும், பாத்திரங்களையும் தர்ப்பைப் புல்லின் சாம்பலினால்தான் துலக்கி புனிதப்படுத்துகிறார்கள். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தின் தலவிருட்சமே தர்ப்பை தான் என்பது குறிப்பிடத்தக்கது.


அசுப காரியங்களுக்கு ஒரு தர்ப்பையாலும், சுப காரியங்களுக்கு இரண்டு தர்ப்பைகளாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்ப்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்ப்பைகளாலும் மோதிரம் போட வேண்டும். கொடி மரத்தின் முன்பாக நமஸ்காரம் செய்கிறபோது கொடிமரத்தில் சுற்றி இருக்கும் தர்ப்பைப் புல் பிரபஞ்ச சக்தியை ஈர்த்து வைத்திருக்கும். அது, வீழ்ந்து வணங்கும் பக்தர் களின் முதுகெலும்பு வழியாக உடலில் பரவும் என்பதாலேயே கொடிவர நமஸ்காரம் தோன்றியது.


தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்து, அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும். அவரது ஒரு மேல் கையில் ருத்திராட்ச மாலையையும், பாம்பையும் பிடித்திருப்பார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பையும், கீழ் இடது கையில் தர்ப்பைப் புல்லையும், ஓலைச் சுவடியையும் வைத்திருப்பார். இதிலிருந்து தர்ப்பைப் புல்லின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.


இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அதே அளவு ஒருவர் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கும் சக்தி உண்டு.

 -ம.வசந்தி, திண்டிவனம், தினத்தந்தி அருள் தரும் ஆன்மீகம் 


Key words 

தர்ப்பைப் புல், தவ வலிமை, உடல் வலிமை, Darbha grass benefits,Siddha medicine, Ayurveda herbs, natural stamina booster,health tips tamil, traditional medicine tamil, vitality increase





கருத்துரையிடுக

0 கருத்துகள்