" அருவர் அருவரென அஞ்சி "
நம் இந்தியத் திருநாட்டை எத்தனையோ பேரரசுகள் ஆட்சி செய்தனர். ஆனாலும் அவர்களால் தொட்டுப் பார்க்க முடியாத நிலப்பரப்பு ஒன்று உண்டென்றால் அது மூவேந்தர்கள் ஆண்ட தமிழ்நாடு மட்டுமே. தமிழர்களின் நிலத்தை மட்டுமல்ல, தமிழர்களின் நிழலைக் கூடத் தொட்டுப் பார்க்க அவர்கள் அஞ்சினர். வடநாட்டாரும், வந்தேறிகளும் நெருங்க முடியாத இடமாக இருந்தது நம் தமிழ்நாடு. அதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் வீரம்தான். தமிழர்கள் வாளெடுத்து நிற்கும் போதெல்லாம் பகைவர்கள் வாயடைத்து நின்றார்கள். தமிழர்களின் வீரத்தை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நூல்தான் கலிங்கத்துப்பரணி. தமிழர்களின் வீரத்தையும், போர் முறைகளையும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது இந்நூல். சோழர்கள் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது கலிங்க நாட்டார் மனங்கலங்கினார்கள். ஐயோ ! அருவர் (தமிழர்) படையெடுத்து வந்து விட்டனரே " என்று அலறினர்.
"எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
அதுகொல் என அலறா இரிந்தனர்
அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே
மழைகள் அதிர்வன போல் உடன்றன
வளவன் விடுபடை வேழம் என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
முதுகு செயும்உப காரம் என்பரே "
(செயங்கொண்டார், கலிங்கத்துப்பரணி )
"சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா ? என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர். அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்துகொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைச் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.
கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர். சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிசிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கன் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர் " என்று கலிங்க வீரர்கள் பட்ட பாட்டைக் கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. கலிங்கத்தில் நிகழ்ந்த கடும்போரைப் பற்றி தண்டியலங்காரம் மேற்கோள் பாடலொன்று கூறுவதையும் இங்குக் காண்போம்.
"ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர்
அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து
தீத்தீத்தி என்றயர்வார் சென்னி படைவீரர்
போர்க்கலிங்கம் மீதெழுந்த போது."
(தண்டியலங்காரம் மேற்கோள் பாடல்- 160 )
சோழர் (சென்னி) படை கலிங்கத்தைத் தாக்கிப் போரிட்டன. அப்போது சோழ வீரர்களான தமிழர்களைக் ( அருவர்) கண்டு அஞ்சிய வடநாட்டார் " இனி நாம் இல்லாமல் போய்விடுவோம், இது நமக்குத் தீது" என்று அலறி அடித்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஓடினர்.
" அக்காலத் தமிழர்களோ
வடநாட்டாரை ஓடவிட்டு அழகு பார்த்தனர்.
இக்காலத் தமிழர்களோ
வடநாட்டாரை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்! "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
Key words
அருவர் அருவரென அஞ்சி,அருவர் அருவரென அஞ்சி விளக்கம்,Thirukkural explanation in Tamil,Thirukkural moral values,10th Tamil Thirukkural meaning,Tamil moral education,Tirukkural with explanation,Tamil literature education,SSLC Tamil important questions,Tamil exam notes

0 கருத்துகள்