Ad Code

Ticker

6/recent/ticker-posts

வாராதோர் நமக்கு யார்?” – வாழ்க்கை உண்மை விளக்கும் ஆழமான தத்துவ கட்டுரை | Tamil Motivational Thought

 



"  வாராதோர் நமக்கு யார்?' " 


முன்பெல்லாம் தலைவன் (சேர்ப்பன்) தலைவியைச்  சந்திக்காத நாளே இல்லை. ஆனால்,  இப்போதோ அவன் தலைவியைச் சந்திக்க வருவதே இல்லை. அதை  எண்ணி என் தலைவி காதலோடு கண்ணீர் வடிக்கிறாள். பாணனே! நான் என்ன செய்வேன்?. நீ அவன் ஊருக்குச்  சென்று  தலைவியின்  நிலையைப் பற்றி    யாரும் அறியாத வகையில் தலைவனிடம்  சொன்னால்தான் என்ன? என்று   பாணனிடம்  கூறுகிறாள் தோழி.


"கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,

நெடுநீர் இரும்கழிக் கடுமீன் கலிப்பினும்,

வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,

மாண்இழை நெடும்தேர் பாணி நிற்ப,

பகலும் நம்வயின் அகலான் ஆகிப்,

பயின்று வரும்மன்னே பனிநீர்ச் சேர்ப்பன்!

இனியே, மணப்பு அரும்காமம் தணப்ப, நீந்தி 

"வாராதோர் நமக்கு யாஅர்" என்னாது,

மல்லல் மூதூர் மறையினை சென்று,

சொல்லின் எவனோ? பாண! “எல்லி

மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்

துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்” எனக்

கண்நிறை நீர்கொடு கரக்கும்

ஒண்நுதல் அரிவை, யான்என் செய்கோ? எனவே." 


( கருவூர் பூதஞ்சாத்தனார், 

அகநானூறு - 50 )


"கடலலை ஓய்ந்தாலும், மீன்பிடிக்கத் தோணியில் யாரும் செல்லாமல் இருந்தாலும், கழிமுகத் துறைகளில் பெரிய பெரிய மீன் புரண்டாலும், நாள்தோறும் தலைவன் வருவதைப் பார்த்துக் கொடிய வாயையுடைய பெண்கள்  சாடைமாடையாகப் பேசினாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தலைவி  இருக்குமிடத்துக்குத் தலைவன்  வருவான். அணிகலன் பூட்டிய அழகான தேரில் ஆரவாரத்தோடு வருவான். பகலிலும் நம்மை விட்டுப் பிரியமாட்டான். நம்முடன்  விளையாடுவான். குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன், இப்படியெல்லாம் தலைவியோடு மகிழ்ந்திருந்தான். ஆனால், 

இப்பொழுதோ, தலைவியோடு  ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருக்கிறது.  தலைவனுக்கு இப்போது  என்னவாயிற்று?


தலைவனோடு  காதல்  வெள்ளத்தில்  சேர்ந்திருக்க வேண்டியவள், இங்குக் கவலைக் கடலில் தனியாக நீந்திக் கொண்டிருக்கிறாள். ‘வராதவர் நமக்கு யார்?’ என்று இவள் எண்ணவில்லை. பாணனே! நீயும் ‘வராதவர் நமக்கு யார்?’ என்று எண்ணக்கூடாது. அவனது வளம் மிக்க ஊருக்குச் செல்ல வேண்டும். பழமையான அந்த மூதூருக்குச் செல்ல வேண்டும். உன் அடையாளம் தெரியாமல் உன்னை மறைத்துக்கொண்டு செல்ல வேண்டும். சென்று இவள் நிலைமையைச் சொல்லிவிட்டு வரவேண்டும். பாணனே! அப்படிச் சொல்லிவிட்டு நீ வந்தால்தான் என்ன? வீட்டுமனையில் வளர்ந்திருக்கும் பனைமரத்தில் வாழும் வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகளில், ஏதேனும் ஒரு துணைப்பறவை  பிரிந்தாலும் மற்றொன்று தூங்காமல் இருக்கும்’ என்று சொல்லிக்கொண்டு இவள் கண் கொள்ளாத நீரை வடிக்கிறாள். இவளது ஒளி பொருந்திய நெற்றியை நான் பார்க்க வேண்டுமே. அதற்கு நான் என்ன செய்வேன்? "  என்று  பாணனிடம்  கூறுகிறாள் தோழி.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)



கருத்துரையிடுக

0 கருத்துகள்