" வானவன் வைத்த காதல் "
சீதையைத் தேடிக் கடல்மீது பறந்து செல்கிறான் அனுமன். அப்போது திடீரென்று மைநாகம் என்ற மலை கடலின் நடுவே உயர்ந்து எழுந்தது. அது எப்படி எழுந்தது தெரியுமா ? ஒரு நொடியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றது. ஒரு கண்ணாடியின் மேல் உழுந்தை (உளுந்து) உருட்டிவிட்டால் அது எவ்வளவு விரைவாக உருண்டு ஓடுமோ அவ்வளவு நேரத்தில் அது வேகமாக வளர்ந்து நின்றது. "என்ன இது? " என்று வியப்பில் அயர்ந்து நின்றான் அனுமன். நாம் ஓர் இலக்கை நோக்கிச் செல்லும்போது இடர்பாடுகள் வருவது இயல்பு தானே? அப்படித்தான் அனுமனும் ஓர் இடர்பாட்டை எதிர்கொண்டான்.
"எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்
கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், 'இது என்கொல்?' எனா அயிர்த்தான் "
( கம்பர், கம்பராமாயணம் - 4791)
விண்ணும் மண்ணும் ஒன்றாகும்படி கடல் நடுவே எழுந்து ஓங்கி நின்றது மைநாக மலை. அதாவது அதைத் தாண்டி குதித்துப் போக முடியாத அளவுக்கு விண்வரை உயர்ந்து நின்றது. ஒளி வீசும் கண்ணாடியின் மேல் உழுந்து ( உளுந்து) உருண்டு ஓடும் கால அளவில் மேலும் மேலும் வளர்ந்து அதன் சிகரங்கள் உயர்ந்து வளர்ந்து நின்றது. தன் முன்னே திடீரென்று எழுந்து நின்ற மைநாக மலையின் குன்றங்களை வியப்புடன் பார்த்தான் அனுமன். புலன் இன்பங்களில் அழுந்தாத மனம் கொண்ட அனுமன்
இது என்ன? என்று மயங்கி நின்றான்.
‘என்மீது சிறிது நேரம் தங்கி இளைப்பாறுங்கள். பசியாற உணவு உண்ணுங்கள். அருள் கூர்ந்து என் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பின் செல்லுங்கள்" என்று அனுமனிடம் வேண்டியது மைநாக மலை. தன்னுடைய வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கும் அனுமன், மைநாக மலையின் விருந்தோம்பலை மறுக்கிறான். அதற்கான காரணத்தை அனுமன் கூறக் கேட்போம்.
"வருந்தேன்; அது என் துணை வானவன் வைத்த காதல்;
அருந்தேன் இனியாதும், என்ஆசை நிரப்பிஅல்லால்,
பெருந்தேன் பிழிசாலும் நின்அன்பு பிணித்தபோதே,
இருந்தேன்! நுகர்ந்தேன்! இதன்மேல் இனி ஈவதுஎன்னோ? "
(கம்பர், கம்பராமாயணம் - 4799)
"மைநாக மலையே!
இந்தப் பெரிய கடலைக் கடந்து செல்வதால் எனக்குக் களைப்பு எதுவும் இல்லை. அதற்குக் காரணம், என் தலைவன் இராமன் என்மீது வைத்திருக்கும் அளவற்ற பேரன்பே ஆகும். எனக்குக் களைப்பே இல்லாதபோது நான் எதையும் உண்டு பசியாறவேண்டிய தேவையும் இல்லை. இராமன் எனக்குக் கொடுத்திருக்கும் வேலையை முழுமையாக முடிக்க வேண்டும், சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிய வேண்டும், அந்த விருப்பம் நிறைவேறினால்தான் என்னுடைய வயிறும், மனமும் நிறையும். அதற்காக முனைப்போடு சென்றுகொண்டிருந்த என்னை, உன்னுடைய அன்புதான் கட்டிப்போட்டு நிறுத்திவிட்டது. பிழிந்த தேனைப்போல் இனிமையான உனது இந்த அன்பைவிடச் சிறந்த விருந்து உண்டோ? உன் அன்பை ஏற்றுக்கொண்ட அந்தப் பொழுதிலேயே நான் உன் வீட்டில் தங்கி உணவு உண்டவன் ஆனேன். இதற்குமேல் நீ எனக்குக் கொடுப்பதற்கு உரிய பொருள் என்ன இருக்கிறது? " என்று மைநாக மலையிடம் கூறினான் அனுமன்.
தாம் கொண்ட குறிக்கோளை உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணுபவர்கள் அனுமனைப் போல, உண்ணுவதும் இல்லை. உறங்குவதும் இல்லை. உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் நகரும்போது துன்பங்கள் பல வரலாம். அவற்றைப் பெருந்துன்பமாக எண்ணாமல் புறந்தள்ளுங்கள். இன்பங்கள் பல வரலாம். அவற்றைச் சிற்றின்பமாக எண்ணிப் புறந்தள்ளுங்கள் . அதாவது, துன்பங்களைக் கண்டு களைப்படையவும் கூடாது. இன்பங்களைக் கண்டு களிப்படையவும் கூடாது. உங்கள் இலக்கை நீங்கள் அடையும் வரை இதயத்தை ( வேறு சிந்தனைகள் நுழையாமலிருக்க) மூடி வையுங்கள். இமைகளை மட்டும் ( விழிப்போடு இருக்க) திறந்து வையுங்கள்.
" கவலைகளை விலக்கு.
கைக்கெட்டும் உன் இலக்கு! "
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)

0 கருத்துகள்