இந்தியாவில் சிவனுக்குரிய தலங்கள் பல இருந்தாலும்.மிகவும் புகழ்மிக்க ஆலயமாக விளங்குகிறது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். பஞ்சபூத சிவாலங்களில் அக்னி தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது
இத்தலத்தின் இறைவனை அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர் என்றும், அம்பாளை உண்ணாமலையம்மன், அபித குஜாம்பாள் என்றும் அழைக்கின்றனர். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவண்ணாமலை கோவில் பல கட்டிட சிறப்புகளைக் கொண்டுள்ளது. திருவண்ணாமலைக்கு 'நவதுவார பதி' என்ற பெயரும் உண்டு. இதற்கு 'ஒன்பது நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்பது பொருள். கோவிலில் 4 பெரிய கோபுரங்கள், கட்டை கோபுரங்கள் எனப்படும் 5 சிறிய கோபுரங்கள் என ஒன்பது கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்த சிறப்புக்க கோபுரங்களை பற்றி இங்கு பார்ப் போம்.
ராஜகோபுரம்
கோவிலின் பிரதான ராஜகோபுரம் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற மன்னனான கிருஷ்ண தேவராயர், இந்த கோபுரத்தைக் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்த காரணத்தால், இந்த கோபுரத்திற்கு 'ராயர் கோபுரம் என்ற பெயரும் உண்டு. தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தை விட அதிக உயரத்தில் கட்ட நினைத்த கிருஷ்ணதேவராயர். அதற்கான பணியை 1550-ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் கோபுரம் கட்டும் பணிக்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார்.
பாதியில் நின்ற இப்பணியை தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கர் கட்டி முடித்தார். கிருஷ்ணதேவராயர் ஆசைப்படியே தஞ்சை பெரிய கோவில் கருவறை கோபுரத்தை விட, ஒரு அடி அதிகமாக 217 அடி உயரத்தில்,11 நிலைகளுடன் இந்த ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் 2-வது மிக உயரமான கோபுரமாக திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரம் உள்ளது.
பேய்க்கோபுரம்
போய்க்கோபுரம், கிழக்கு ராஜகோபுரத்திற்கு நேர் பின்பகுதியில் மேற்கு திசையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரம் 160 அடி உயரத்துடன் மலையைப் பார்த்தபடி அமைந்துள்ளது. கிழக்கு ராஜகோபுரப் பணியின் போதே கிருஷ்ணதேவராயர் இக் கோபுரத்துக்கான பணியையும் தொடங்கினார். ஆனால், இக்கோபுரத்தின் பணிகளையும் முழுமையாக முடித்தது செவ்வப்பநாயக்கர்தான்.
இக்கோபுரத்தின் பெயர் 'மேற்கு கோபுரம்' என்பதாகும். பேச்சு வழக்கில் 'மேக் கோபுரம்' என்று வழங்கப்பட்டு, பிறகு அது 'பேக்கோபுரம்' என்றாகி, தற்போது திரிந்து 'பேய்க்கோபுரம்' என்றாகிவிட்டது. 9 நிலைகொண்ட இந்த ராஜகோபுரத்தில் மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், முனிவர்கள் உள்ளிட்ட பல்வேறு தெய்வ சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
திருமஞ்சன கோபுரம்
இக்கோபுரம் தெற்கு திசையில் அமைந்துள்ளது. சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வதற்கான புனித நீரை, யானை மீது வைத்து இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவது வழக்கம். எனவேதான் இதற்கு 'திருமஞ்சன கோபுரம்' என்று பெயர். 157 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் எந்த நூற்றாண்டில், யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் இது கிழக்கு ராஜ கோபுரத்திற்கும் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்திருக்கின்றன.
ஆனி மாதம் நடைபெறும் 'ஆனி திருமஞ்சனம்', மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ராதரிசனம் ஆகிய இரண்டு - விழாக்களின் போதும். இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்துச் செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியா கத்தான் நடராஜர் உள்ளே அழைத்து வரப் படுவார்.
அம்மணி அம்மாள் கோபுரம்
வடக்கு ராஜகோபுரத்திற்கு 'அம்மணி அம்மாள் கோபுரம்' என்று பெயர். திருவண்ணாமலை அருகே உள்ள சென்னசமுத்திரத்தைச் சேர்ந்த அருள்மொழி என்ற இயற் பெயர் கொண்ட அம்மணி அம்மாள் அண்ணாமலையார் மீது அதிக பக்தி கொண்டவர்.
பாதியில் கட்டப்பட்டிருந்த வடக்கு கோபுரத்தைக் கண்டு மன வருந்திய அம்மணி அம்மாள், அந்த கோபுரத்தை முழுமையாக ' கட்டி முடிக்க நினைத்தார். இதற்காக செல்வந்தர்கள் பலரிடம் சென்று நன்கொடை பெற்று பொருள் ஈட்டினார். பணம் இல்லாத சமயத்தில், ராஜகோபுரம் கட்டும் - பணியாளர்களுக்கு, திருநீறு அடங்கிய முடிச்சை ஊதியமாக வழங்கினார். " தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்த போது, அந்த முடிச்சில் அவர்களுக்கான சரியான ஊதியம் இருக்கும். இப்படி பெண் சித்தரால் கட்டப்பட்ட இந்த கோபுரம், 171 அடி உயரம் கொண்டது. 17-ம் நூற்றாண்டில் இறந்த அம்மணி அம்மாளின் ஜீவசமாதி, ஈசானிய லிங்கத்தின் எதிரில் இருக்கிறது.
கட்டை கோபுரங்கள்
திருவண்ணாமலையில் நான்கு வீதிகளிலும் அமைந்த ராஜகோபுரங்களுக்கு அடுத்ததாக உள்ளே அமைந்திருக்கும் 5 சிறிய கோபுரங்களும் கூட மிகவும் சிறப்பு வாய்ந்தவைதான்.
வல்லாள மகாராஜா கோபுரம்
கிழக்கு ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும் இந்த கோபுரம் காணப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில் வீர வல்லாள மகாராஜாவால் இக்கோபுரம் கட்டப்பட்டதால் இந்த கோபுரத்திற்கு 'வீர வல்லாள திருவாசல்' என்றும் பெயர். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கைகூப்பிய நிலையில் இருக்கும். சிவன், பார்வதி, விநாயகர், கல்லால மரத்தின் கீழ் அமைந்திருக்கும் தட்சிணாமூர்த்தி, சமணரை கழுவேற்றும் சிற்பங்கள் உள்ளன. இந்த மகாராஜாவுக்கு பிள்ளை இல்லாததால், சிவபெருமானே. மகனாக இருந்து வல்லாள மகாராஜாவின் இறுதிச்சடங்களை செய்ததாக சொல்லப்படுகிறது.
தெற்கு கட்டை கோபுரம்
திருமஞ்சன கோபுரத்திற்குள் நுழைந்ததும் உள்ளே அமைந்த 5 நிலைகளுடன் கூடிய சிறிய கோபுரம் இது. 70 அடி உயரம் கொண்டது. இக்கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் பல்வேறு சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
மேற்கு கட்டை கோபுரம்
பேய்க்கோபுரத்தின் வாயிலாக ஆலயத்திற்குள் நுழையும் போது வரும் சிறிய கோபுரம் இது. இதுவும் 5 நிலைகளுடன் 70 அடி உயரத்தில் அமைந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தில் அஷ்டதிக்கு காவல் தெய்வங்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
வடக்கு கட்டை கோபுரம்
அம்மணி அம்மாள் கோபுரத்தை அடுத்து ஆலயத்திற்குள் அமைந்த சிறிய கோபுரம் இது, 45 அடி உயரத்தில் அமைந்த இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் மற்றும் நடன பெண்மணிகளின் சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.
கிளி கோபுரம்
வல்லாள மகாராஜா கோபுரத்தைத் தாண்டியதும் இருக்கும் கோபுரம் இது. 81 அடி உயரம், 5 நிலைகளுடன் அமைந்த கோபுரத்தை 1053-ம் ஆண்டு ராஜேந்திரச் சோழன் கட்டியுள்ளார். திரு வண்ணாமலை ஆலயத்தில் உள்ள கோபு ரங்களில் இது மிகவும் பழமையானது. இந்த கோபுரத்தின் உச்சியின் கிளி சிற் பம் அமைந்துள்ளது.
ஒரு முறை மன்னனின் உயிரைக் காக்கும் பொருட்டு, தேவலோக மலரை பறித்து வர வேண்டிய சூழல் அருணகிரிநாதருக்கு ஏற்பட்டது. அவர் தன்னுடைய உயிரை, கூடுவிட்டு கூடு பாயும் வித்தை மூலமாக கிளிக்குள் செலுத்தி, தேவலோ கம் சென்றார். அவரது உடல் கோபுரத்தின் உச்சியில் இருந்தது. இதை அறிந்த அருணகிரிநாதரின் போட்டியாளர் சம்பந் தாண்டான், அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர், கிளி உருவிலேயே இருக்க வேண்டியதாயிற்று, அவர் கிளி உருவத்தில் இந்த கோபுரத்தில் இருந்து நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். இதனால் தான் இந்த கோபுரத்திற்கு 'கிளி கோபுரம்' என்று பெயர்
Keywords
திருவண்ணாமலை கோபுரங்கள்
அண்ணாமலையார் கோபுரங்கள்
சிறப்பு வாய்ந்த அண்ணாமலையார் கோவில்கள்
அண்ணாமலையார் வரலாறு
திருவண்ணாமலை தரிசனம்
அண்ணாமலையார் கோயில் ரகசியங்கள்
திருவண்ணாமலை காண வேண்டிய இடங்கள்
Arunachaleswarar Temple History
Thiruvannamalai Temple Gopuram Special
Karthigai Deepam Thiruvannamalai
அண்ணாமலையார் ஜோதிர்லிங்கம்
Thiruvannamalai Spiritual Tourism


0 கருத்துகள்