" தக்கார் கைப்பட்டக்கால் "
அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. ஒருமுறை குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் சமையல்காரர் ஒருவர் அப்துல் கலாம் அவர்களிடம் சென்று, "ஐயா! இனி நான் சமையல் வேலைக்கு வரமாட்டேன். இனி நீங்கள் வேறு யாரையாவது வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் " என்றார். பதறிப்போன அப்துல் கலாம், " ஏன உங்களுக்கு என்ன ஆயிற்று? இங்கு யாராவது உங்களை துன்புறுத்தினார்களா? உங்களுக்கு ஊதியம் ஒழுங்காக வழங்கவில்லையா ? அல்லது ஊதியம் குறைவாக உள்ளதா? வேறு என்ன காரணம்? இங்கு உங்களுக்குப் போதிய வசதி செய்து கொடுக்கப்படவில்லையா ? என்று அடுக்கடுக்காக வினா எழுப்பினார் அப்துல் கலாம் . அதற்கு அந்த சமையல்காரர் , " அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்குக் கை நிறைய அல்ல, பை நிறைய ஊதியம் கொடுக்கிறார்கள். நல்ல உணவு கொடுக்கிறார்கள். எனக்கு எல்லா வசதியும் சிறப்பாகச் செய்து கொடுக்கிறார்கள். எனக்கு எந்த குறையும் இல்லை" என்றார். " பின்பு எதற்காக நீங்கள் வேலையை விட்டு செல்கிறீர்கள்? என்று கேட்டார் அப்துல் கலாம் .
அதற்கு அந்த சமையல்காரர், " ஐயா !நீங்கள் காலையில் உண்பது ஒரு அப்பம் ஒரு குவளை பால் மட்டுமே. நண்பகல் உணவாகக் கொஞ்சம் தயிர் சோறு எடுத்துக் கொள்கிறீர்கள். இரவு கொஞ்சம் ரசம் சோறு உண்கிறீர்கள். இதைத் தவிர வேறு எதையும் நீங்கள் உண்பதில்லை. இதையெல்லாம் சமைப்பதற்கு எதற்கு ஒரு சமையல்காரன் ? எனக்கு எதற்கு வீண் சம்பளம்? எந்த வேலையும் செய்யாமல் அளவுக்கு மீறி சம்பளம் வாங்கினால் நான் உண்ணும் உணவு எப்படி எனக்கு செரிக்கும்? அதனால்தான் இந்த வேலையே எனக்கு வேண்டாம் என்றேன் " என்றார். " கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் " என்பார்கள். அதுபோலத்தான் அப்துல் கலாம் எப்படி நேர்மையாக இருந்தாரோ அவரைப்போலவே அவர் வீட்டு சமையல்காரரும் நேர்மையாக இருந்தார். நல்லவர்களோடு சேர்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் . நல்லவர்கள் கைப்பட்டால் உப்புக் கல்லும் வைரக்கல்லாய் மாறும்.
"உறக்கும் துணையதுஓர் ஆலம்வித்து ஈண்டி,
இறப்ப நிழல்பயந் தாஅங்கு, - அறப்பயனும்,
தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால்,
வான்சிறிதாப் போர்த்து விடும். "
( நாலடியார் - 38)
ஓர் ஆலம் விதை சிறிதுதான். ஆனால் அந்த விதை நல்லவர் ஒருவரின் கையில் கிடைத்தால், அது செடியாகத் தழைத்து மரமாக வளர்ந்து அனைவருக்கும் பலகாலம் நிழல் கொடுப்பதுபோல், அறச்செயல்கள் சிறிய செயல்கள் ஆனாலும், தகுந்த நல்லவர்க்குச் சென்று சேரும்பொழுது, அதனால் அடையும் பயன்களின் அளவு, இவ்வுலகின் வானத்தையே மிகச் சிறியதாக்கி விடும்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)
Key words
தக்கார் கைப்பட்டக்கால், தக்கார் தகவிலர், குறள் 114, குறள் விளக்கம், தமிழ் குறள்
0 கருத்துகள்