Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஊரறியா மூரியோ – பழமொழி நானூறு விரிவான பொருள் | Arayanar Pazhamozhi 91 Explanation in Tamil

 ஊரறியா மூரியோ – பழமொழி நானூறு 91 பொருள், விளக்கம் மற்றும் நெறி போதனை




ஒருநாள் சிங்கமொன்று காட்டிலுள்ள  மற்ற விலங்குகளை எல்லாம் ஓரிடத்தில் ஒன்றாக வரச் சொன்னது. இனி நாம்  ஒற்றுமையாய் வாழ்வோம். நமக்குள் எந்தச் சண்டையும் வரக்கூடாது.  அதற்காக நானொரு திட்டம் வைத்திருக்கிறேன். அவரவர் வேட்டையாடி கொண்டுவரும் இறைச்சிகளைச் சமமாகப் பங்கிட்டு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்போம் "  என்றது. எல்லா விலக்குகளும் அதற்கு ஒப்புக் கொண்டது. மற்ற விலங்குகள் வேட்டையாடிக் கொண்டுவரும் இறைச்சிகளை எல்லாம் சமமாகப் பங்கு போட வைத்து உண்டது சிங்கம்.  ஒருநாள் சிங்கத்தின் வேட்டையில் கொழுத்த கலைமான் ஒன்று கிடைத்தது. அதைப் பங்கிட்டுக் கொள்ள எல்லா விலங்குகளையும் அழைத்தது. 


அந்தக் கலைமானை நான்கு பங்காகப் போட்டது.  அதில் முதல் பங்கை எடுத்து, " நான்தான் வேட்டையாடினேன். ஆகையால்,  இந்தப் பங்கு எனக்கு உரியது " என்று சொல்லி அந்தப் பங்கை எடுத்துக்கொண்டது சிங்கம்.  இரண்டாவது பங்கை எடுத்து "நான்தான் இந்தக் காட்டுக்கு அரசன். அதனால், இது அரசனுக்கு உரிய பங்கு " என்று சொல்லி அந்தப் பங்கையும் எடுத்துக் கொண்டது.  மூன்றாவது பங்கை எடுத்து,  "நான்தான் இந்தக் காட்டிலேயே வலிமையான விலங்கு. அதனால், இந்தப் பங்கு எனக்குத்தான்"  என்று சொல்லி மூன்றாவது பங்கையும் எடுத்துக் கொண்டது.  கடைசியாக நான்காவது பங்கை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு,  "உங்களுக்குத் துணிவிருந்தால் இதன் மீது கை வையுங்கள் பார்க்கலாம் "  என்றது சிங்கம்.  சிங்கத்தின் மீதுள்ள அச்சத்தால்  எந்த விலங்கும் அதன் அருகில் வரவில்லை. அதனால், அந்தப் பங்கையும் சிங்கமே எடுத்துக்கொண்டது. இது ஒவ்வொரு நாளும் நிகழ்ந்தது. எந்தக் காலத்திலும் சிங்கத்தின் குணம் மாறாது. சிங்கம் சிங்கம்தான். என்னதான் படமெடுத்து அழகாக ஆடினாலும் பாம்பு பாம்புதான்.  அதன்   பல்லில் நஞ்சுதான் இருக்கும். அது என்றுமே கற்கண்டாக மாறிவிடாது.  அதுபோலத்தான் என்னதான் இனிக்க மணக்க பேசினாலும் தீயவர்களின் உள்ளத்தில் எப்போதுமே தீய எண்ணமே இருக்கும்.  அது ஒரு நாளும் மாறாது. அவரவர் செய்யும் செயலை வைத்தே அவர் யாரென்பதை அறிந்து கொள்ளலாம் .


"கூரறிவி னார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது

காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப்

பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ?

ஊரறியா மூரியோ இல்'. " 


( முன்றுறை அரையனார், பழமொழி நானூறு - 91) 


ஊரில் வாழ்பவர்களால் அறியப்படாத பொலிகாளை எங்குமே இல்லை . அதுபோல கூர்மையான  அறிவுடையார் வாயால் சொல்லும் நற்குணம் உடைய சொற்களை மனத்துள் கொள்ளாது, தம்மிடமுள்ள சிற்றறிவையே தம் வாழ்விற்குப் பற்றுக்கோடாகக் கொண்டு தீய செயல்களைச் செய்தொழுகுவோரின்  பெயரை அறியாத அறிவிலிகள் நாட்டிலே யாருள்ளனர்? . பூக்கடைக்கும், சாக்கடைக்கும் முகவரி தேவையில்லை. அதன் மணமே அவற்றின் இடத்தை  அடையாளம் காட்டும். அதுபோலத்தான் அவரவர் செய்யும் செயலை வைத்தே யார் நல்லோர்?  யார் தீயோர்? என்பதை அறிந்து கொள்ளலாம்.


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்,

செங்கல்பட்டு மாவட்டம்.

( அலைப்பேசி - 9965414583)

கருத்துரையிடுக

0 கருத்துகள்