கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல அற்புதங்களையும், சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளன. இங்குள்ள தெய்வத்தை கிராம தெய்வங்கள், கிராம காவல் தெய்வங்கள் என்று மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த சிறப்புவாய்ந்த கிராமப்புற கோவில்களில் ஒன்றுதான் சிலம்பியம்மன் கோவில், கடலூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிலம்பிமங்கலம் என்ற கிராமம். இங்கு அடர்ந்த முந்திரிக் காடுகளுக்கு மத்தியில் பெரிய மணல் திட்டில் நம்மை பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்கு கையில் சிலம்போடு கிராம தெய்வமாய் சிலம்பியம்மன், இடப்புறம் மூன்று அம்மன்கள், வலப்புறம் மூன்று அம்மன்கள் என அற்புதமாய் காட்சி தருகிறாள்.
தல வரலாறு
இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடைய மிக தொன்மை வாய்ந்த ஆலயம். ஒரு சமயம் தில்லையில் நடராஜருக்கும், தில்லை காளியம்மனுக்கும் நடனப் போட்டி நடந்தது. அதில் தில்லைக் காளி 16 திருக்கரங்களோடு மிக ஆக்ரோஷமாக ஈசனோடு போட்டி போட்டு ஆடினாள். அப்பொழுது தில்லைக் காளியின் கையில் இருந்த சிலம்பு, நடனத்தின் வேகம் தாங்க முடியாமல் வேகமாய் சீறிப் பாய்ந்தது.
அந்த சிலம்பு விழுந்த இடம்தான் சிலம்பிமங்கலம். சிலம்பு விழுந்த இடத்தில் சிலம்பு உடைந்து ஏழு முத்துக்கள் சிதறின. அந்த ஏழு முத்துக்களும் ஏழு அம்மனாக மாறின. நடுவில் கையில் சிலம்போடு சிலம்பியம்மனாக வலப்புறமாக பிரம்மி, வைஷ்ணவி, ருத்ராணி, இடப்புறமாக கவுமாரி, வராகி, இந்திராணி என்று ஏழு அம்மனாக அடர்ந்த காட்டுக்குள்ளே மணல் திட்டில் சிலைகளாக இருந்துள்ளது. இதையடுத்து ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அம்மன், தான் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அந்த பக்தர் இந்த விஷயத்தை ஊர் மக்களிடம் கூற, ஊர் மக்கள் ஒன்று திரண்டு அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேலே ஏழு அம்மன்களும் அமர்ந்த கோலத்தில் இருந்தனர். அன்னையின் கையில் சிலம்போடு இருந்ததால், 'மங்கலம்' என்று இருந்த ஊரின் பெயரை 'சிலம்பிமங்கலம்' என்று மாற்றி அமைத்தனர்.
உடனே அந்த அம்மனுக்கு ஒரு ஆலயம் எழுப்ப முடிவு செய்து, அம்மன் கிடைத்த இடத்திலேயே ஆலயத்தை நிறுவ பள்ளம் தோண்டினர். அப்போது அங்கு மிகப்பெரிய அற்புதங்கள் காட்சி தந்தன. விநாயகர், நந்தி, ஆஞ்சநேயர், அங்காளம்மன், எருமை வாகனத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, மணி மேகலை, பாவாடைராயன், நாக்காளி, கருமாரியம்மன். சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, சாமுண்டீஸ்வரி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் பூமிக்கு அடியில் இருப்பதைப் பார்த்த பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். உடனடியாக அந்த அனைத்து சுவாமி சிலைகளையும் எடுத்து சிலம்பியம்மன் கோவிலை சுற்றி பிரகாரங்களில் பிரதிஷ்டை செய்தனர்.
கோவில் அமைப்பு
சுமார் பத்தடி உயரம் உள்ள மணல் திட்டில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. அந்த ஆலமரத்துக்கு கீழே தான் இந்த ஆலயம் உள்ளது. கோவில் வரவேற்பு வளைவில் சிலம்பியம்மன் காட்சி தருகிறாள். அவளை வணங்கி விட்டு கோவிலுக்குச் சென்றால் மகா மண்டபம், அதன் மேற்கூரையின் நடுவில் சிலம்பியம்மன் உட்பட எழு அம்மன்களையும் நாம் தரிசிக்கலாம். உள்ளே சென்றால் திரிசூலம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவற்றை காணலாம். கோவிலில் அர்த்த மண்டபம் கிடையாது. கருவறையில் சிலம்பியம்மன் உட்பட ஏழு அம்மன்கள் மிக அற்புதமாய் காட்சி தருவார்கள்.
தில்லையில் தில்லைக்காளி இருக்கும் இடத்தை சுற்றிலும் உரல், உலக்கைகள் எப்படி பயன்படுத்து வது இல்லையோ, அதேபோல் இந்த கிராமத்திலும் வீடுகளில் உரல், உலக்கைகள் பயன்படுத்துவது கிடையாது.இந்த ஆலயத்தில் சிலம்பியம்மனை குல தெய்வமாகவும், ஊர் காவல் தெய்வமாகவும் வணங்கி வருகின்றனர். இந்த ஊரில் முந்திரி தான் பிரதான விவசாயம் என்பதால், முந்திரி பயிரிடும் விவசாயிகள் அமோக விளைச்சல் அடைய வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் இங்கு இன்று வரை முந்திரி அமோக விளைச்சலை அள்ளித் தருகிறதாம்.எனவே பக்தர்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதுக்காக சிலம்பி யம்மனுக்கு முந்திரியால் மாலை அணிவித்து வணங்கி வருகின்றனர்.இந்த ஆலயத்தை குடை போல் காத்து நிற்கும் பழமை வாய்ந்த ஆதி ஆலமரம் உள்ளது.
திருமணமாகாத கன்னிப் பெண்கள், திருமணத் தடை உள்ள பெண்கள், "ஓம் சக்தி பராசக்தி" என்று உச்சரித்தபடியே 7 முறை சுற்றி வந்தால் மனதுக்குப் பிடித்த மணமகன் அமைவார், தடைப்பட்டு நிற்கும் திருமணமும் நடைபெறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.கோவிலில் வைகாசி மாதம் முதல் தேதி முதல் பத்து நாள் உற்சவம் நடைபெறுகிறது. இந்த பத்து நாள் உற்ச வத்தின் போது, முதல் நாள் காப்பு கட்டும் அன்றுமுதல் பத்தாம் நாள் காப்பு அவிழ்க்கும் நாள்வரை இந்த ஊரில் வசிக்கும் யாரும் வெளியூர் செல்லக் கூடாது. அதேபோல் வெளியூரில் வசிக்கும் இந்த ஊர்க்காரர்கள் இந்த ஊருக்கு வந்துவிட வேண்டும்.
பத்து நாள் உற்சவத்தின் போதும் சிலம்பியம்மன் மட்டுமே உற்சவராக ஊருக்குள் வீதி உலா வருவார். இந்த பத்து நாள் உற்சவத்தின் போது, பக்தர்கள் தாங்கள் வேண்டிக் கொண்ட காரியங்கள் நிறைவேறுவதற்காக பலவிதமான பிரார்த்தனைகள் செய்கிறார்கள். குறிப்பாக மாவிளக்கு ஏற்றுவது, தீச்சட்டி ஏந்துவது, அங்கப்பிரதட்சணம் செய்வது என பலவிதமான பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று இங்கு வெகுவிமரிசையாக விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தை பொறுத்தவரை இங்கு அருள் பாலிக்கும் அனைத்து சுவாமி சிலைகளும் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டவை என்பது இக்கோவிலுக்கு மிகப்பெரிய சிறப்பம்சமாகும். ஒரு சிலை கூட வெளியில் இருந்து வந்தவை அல்ல. எல்லாம் இந்த புண்ணிய பூமியிலேயே கிடைக்கப்பெற்ற சிலைகள் என்று இந்த ஊர் மக்கள் பெருமையுடன், பக்தியுடன் கூறுகின்றனர்.சிலம்பி அம்மனை தில்லைக் காளியின் மறு உருவமாகவே பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தவறு செய்தவர்கள். அடுத்தவருக்கு துரோகம் செய்தவர்கள் யாரும் இக்கோவிலுக்கு வர முடியாது. அப்படி மீறி நுழைந்தால் ஏதோ ஒரு சக்தி அவர்களை தடுத்து விடும் என்கிறார்கள்.
அமைவிடம்
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் சிலம்பிமங்கலம் கிராமம் உள்ளது. இங்கிருந்து கோவில் இருக்கும் மணல் திட்டுக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் போகலாம்.
-பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.
தினத்தந்தி- அருள்தரும் ஆன்மீகம்
Key words
திருமணத் தடை நீக்கும் கோவில்கள்,சிலம்பியம்மன் கோவில் சிறப்பு,Silambimangalam Silambiyamman Temple,marriage delay pariharam temple,tamilnadu temple for marriage obstacle,திருமண தோஷ பரிகாரம்,கோவில் வழிபாடு திருமணத்தடை,silambiyamman temple timings and puja
0 கருத்துகள்