வந்தவாசிப் போரின் பின்னணி
வந்தவாசிப் போரின் பின்னணியையும் அந்தப் போரில் என்ன நடந்தது என்பதையும் 'வந்தவாசி 250' நூலில் பேராசிரியர் என். ராஜேந்திரன் எழுதிய கட்டுரை விரிவாக விளக்குகிறது.
இந்தியாவில் வணிகம் செய்ய பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், போர்ச்சுகல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்தாலும் 18ஆம் நூற்றாண்டு நெருங்கிய போது, தென்னிந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுமே வலிமை வாய்ந்தவையாக இருந்தன. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையும் பிரெஞ்சுக்காரர்களுக்கு பாண்டிச்சேரியும் தலைமையகமாக இருந்தன.
இந்தத் தருணத்தில் ஆங்கில பிரெஞ்சு வணிகக் குழுக்களிடம் கடுமையான மோதல் நிலவி வந்தது. முதலாவது கர்நாடகப் போர் வெடித்த போது (1746-1748), தூப்ளே தலைமையிலான பிரெஞ்சுப் படைகள் சென்னையைக் கைப்பற்றின. ஆங்கிலேயருக்கு உதவ முன்வந்த ஆற்காடு நவாபின் படைகளும் தோற்கடிக்கப்பட்டன.
இரண்டாவது கர்நாடகப் போரில் (174-54) சாந்தா சாகிபிற்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் களமிறங்கின. இந்தப் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் ராபர்ட் கிளைவ் தலைமையில் முகமது அலிக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இந்தப் போரில் ராபர்ட் கிளைவின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன. இரு தரப்பின் நிலையும் சமமாக இருந்த நிலையில்தான் மூன்றாவது கர்நாடகப்
போர் துவங்கியது.
இந்த மூன்றாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சுப் படைகளுக்கு தாமஸ் ஆர்தர் டி லாலியும் (Thomas Arthur de Lally) ஆங்கிலப் படைகளுக்கு கர்னல் அயர் கூட்டும் (Colonel Eyre Coote) தலைமை தாங்கினர். முதலில், தாமஸ் ஆர்தர் டி லாலி தஞ்சையைத் தாக்கினார். இந்தப் போரில், தஞ்சைப் படையில் இருந்த சிலர், பிரெஞ்சுப் படைகளுடன் சேர முன்வந்தனர். ஆனால், அவர்கள் திடீரென டி லாலியைத் தாக்கத் துவங்கினர். அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய டி லாலி, அந்தப் போரிலிருந்து பின்வாங்கினார்.
இதற்குப் பிறகு 1759ஆம் ஆண்டு டிசம்பரில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் தலைமையகமான சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை அவர் முற்றுகையிட்டார். தனக்கு ஆதரவாக, பிரெஞ்சு கடற்படை வருமென எதிர்பார்த்திருந்தார் லாலி. ஆனால், அந்தப் படைகள் வந்து சேர்வதற்குள் ஆங்கிலப் படைகள் சென்னையை வந்தடைந்தன. இதனால் அங்கிருந்தும் பிரெஞ்சுப் படை பின்வாங்க வேண்டியதாயிற்று.
இந்தத் தருணத்தில் வந்தவாசிக் கோட்டை பிரெஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. சென்னைக் கோட்டை முற்றுகையை பிரெஞ்சுக்காரர்கள் தளர்த்தியிருந்த நிலையில், ஆங்கிலத் தளபதியான அயர்கூட், வந்தவாசிக் கோட்டையைக் கைப்பற்றினார். அங்கே சிறு படையை நிறுத்திவிட்டு, ஆற்காட்டை முற்றுகையிடச் சென்றார். இதனால், வந்தவாசிக் கோட்டையை மீண்டும் கைப்பற்ற விரும்பிய டி லாலி வந்தவாசியை முற்றுகையிட்டார். அந்தத் தருணத்தில் வந்தவாசிக் கோட்டையில் ஆங்கில படைத் தளபதி கேப்டன் ஷெர்லாக் 800 வீரர்களுடன் கோட்டையில் இருந்தார்.
அதேநேரம், அயர்கூட்டும் இந்தத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு வந்தவாசியை நோக்கிப் புறப்பட்டார். 1760ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி அயர்கூட், வந்தவாசியை வந்தடைந்தார். அவர் தனது படைகளை மூன்றாகப் பிரித்து நிறுத்தினார். ஆனால், டி லாலி தனது படைகளை ஒரு அணியாக நிறுத்திப் போரிட்டார்.
ஜனவரி 22ஆம் தேதி யுத்தம் துவங்கியது. மோதல் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது, ஒரு துப்பாக்கிக் குண்டு பிரெஞ்சுப் படைகளின் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தாக்கியது. இது வெடித்துச் சிதறியதில் 80க்கும் மேற்பட்ட பிரெஞ்சு வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் அயர்கூட்.
தொடர்ந்து கடுமையாகத் தாக்கிய அயர்கூட்டின் படைகள், டி லாலியின் படைகளைச் சிதறடித்தன. லாலி எஞ்சியிருந்த வீரர்களுடன் பாண்டிச்சேரிக்கே திரும்பிச் சென்றார். பாண்டிச்சேரி ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டது.
பாரீஸ் உடன்படிக்கையால் திரும்பிப் பெறப்பட்ட புதுச்சேரி
ஓராண்டு கழித்து 1761 ஜனவரி 15ஆம் தேதி லாலி சரணடைந்தார். அவர் இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் பாரீஸில் தனக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுவதை அறிந்த லாலி, தான் தவறு செய்யவில்லை என நிரூபிக்க விரும்பினார். இதையடுத்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வில்லியம் பிட்டின் அனுமதி பெற்று பிரான்சிற்கு சென்று விசாரணையை எதிர்கொண்டார் அவர். ஆனால், இந்தியாவில் பிரெஞ்சுப் படைகளின் தோல்விக்கு லாலியே காரணம் எனக் கூறப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வந்தவாசிப் போருக்குப் பிறகு, பிரெஞ்சுக்காரர்களால் வலுவாக இந்தியாவில் தலையெடுக்க முடியவேயில்லை. பாரீஸ் உடன்படிக்கையின்படி பிரான்சிற்கு புதுச்சேரி, சந்திரநாகூர், ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகள் மட்டும் விட்டுக்கொடுக்கப்பட்டன. இந்தப் பகுதிகளை மட்டும் ஆட்சி செய்வதோடு பிரான்ஸ் திருப்தியடைய வேண்டியதாயிற்று.
வந்தவாசிப் போரில் இரு தரப்பிலும் ஈடுபட்ட வீரர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், அது ஒரு மிக முக்கியமான யுத்தமாக அமைந்தது. இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு இந்த யுத்தம் மரண அடியாக அமைந்தது. மார்டின், டூப்ளே, டூமா போன்றோர் கட்டியெழுப்பிய மகத்தான கட்டடத்தை இந்த யுத்தம் மண்ணோடு சாய்த்தது. லாலியின் கனவைத் தகர்த்தது. பாண்டிச்சேரியின் கதையை முடிந்தது என " History of the French in India என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜி.பி. மல்லீசன்.
வந்தவாசிக் கோட்டையின் கதை
இவ்வளவு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக இருந்தாலும், இந்தக் கோட்டை குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. இந்தக் கோட்டை மராட்டியரால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறது ப. சிவனடி தொகுத்த இந்திய சரித்திரக் களஞ்சியம்.
இந்தக் கோட்டை நீள் சதுர வடிவில் இந்திய கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டிருந்தது. கோட்டையைச் சுற்றி பெரும் பகுதிக்கு அகழியும் இருந்தது. கோட்டைச் சுவற்றில் ஆங்காங்கே காவல் கோபுரங்களும் இருந்தன. இந்தக் கோட்டையின் சுற்றளவு சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் இருக்கலாம்.
மராட்டியர்களுக்குப் பிறகு, ஆற்காடு நவாபான தோஸ்த் அலியின் மருமகன் முகமது தக்கி கான் என்பவருக்கு வந்தவாசியை முகலாயப் பேரரசர் அளித்தார். 1744ல் வாலஜாக்கள் ஆற்காடு நவாபுகளான பிறகு, முகமது தக்கி கான் ஜாகிர்தார் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். பின்னர், பிரெஞ்சுக்காரர்கள் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வந்தவாசிக் கோட்டையை 1759ல் கைப்பற்ற மேஜர் பிரென்டன் தலைமையிலான ஆங்கிலப் படை முயன்றது. ஆனால், அதில் வெற்றிகிடைக்கவில்லை. இதற்குப் பிறகு, 1759 நவம்பரில் கர்னல் அயர்கூட் ஆங்கிலப் படைக்குத் தலைமையேற்றவுடன் நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு ஆங்கிலேயர்களால் கோட்டை கைப்பற்றப்பட்டது. இப்படி வீழ்ந்த கோட்டையை மீட்கத்தான் தாமஸ் ஆர்தர் டி லாலி முயன்று தோல்வியைச் சந்தித்தார்.
வந்தவாசிப் போருக்குப் பிறகு, வந்தவாசிக் கோட்டைக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. மெல்லமெல்ல கோட்டையும் சிதைந்துபோக ஆரம்பித்தது.
Source
நன்றி
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்
Key words
வந்தவாசிப் போர், வந்தவாசிப் போரின் பின்னணி, இந்திய வரலாறு, Carnatic Wars, South Indian History, வந்தவாசி யுத்தம், வரலாற்று முக்கியத்துவம், 18ஆம் நூற்றாண்டு போர்கள், போரின் விளைவுகள், Mughal vs British wars
0 கருத்துகள்