Ad Code

Ticker

6/recent/ticker-posts

திருமண வரம் தரும் திருவிடைக்கழி முருகன்

 


முருகளின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர கந்தனின் காலடிப்பட்ட தலங்கள் மூன்று மட்டுமே. அதில் ஒன்றுதான் பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த "திருவிடைக்கழி"பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு பழனி மலையேறிய பெருமானுக்கு அவரது பக்தர்கள் குன்றுதோறும் கோவில்களை கட்டி வழிபட்டனர் குன்றுகள் இல்லாத இடங்களிலும் கூட முருகப்பெருமானுக்கு சிறப்புமிக்க பல ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் திருவிடைக்கழி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி திருக் கோலில்


முருகப்பெருமான், தான்செய்த பாவத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, இக்கோவிலில் சிவபூஜை செய்து வழிபட்ட போது, அவருடன் தெய்வானை, அன்னை ஆதிபராசக்தி, தேவர்கள் இங்கு வந்து பரமனை நோக்கி தவம் புரிந்தனர். ஈசனும் மனம் மகிழ்ந்து அருள சிவனின் திருவடி வணங்கி பின் விடைபெற்று திருப்பரங்குன்றம் சென்றனர். விடைபெற்றானதால் 'திருவிடைக்கழி' என பெயர் பெற்றது.


தல வரலாறு


திருச்செந்தூரில் சூரபத்மன், தாருகாசூரன் ஆகியோரை சம்ஹாரம் செய்தபின் முருகப்பெருமான் திருச்செந்தூரில் தங்கி இருந்தார். தேவர்களின் சேனாதிபதியான முருகனுக்கு தெய்வானையை மணமுடித்துக் கொடுக்க ஏற்பாடு நடந்தது. அப்போது சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசூரன், தன் உருவை சுறா மீனாக மாற்றிக் கொண்டு, தற்போது மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியில் உள்ள கீழ்ச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுந்தி வந்தான்.


இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளான தேவர்கள், இரண்யாசூரனையும் அழித்தால்தான் அரக்கர்கள் கொடுமையில் இருந்து விடுபட முடியும் என முருகப்பெருமானிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்தர்களை காக்கும் பொருட்டு முருகன், கீழ்ச்சமுத்திரம் வந்தார். ஆனால் கடலில் ஏராளமான சுறா மீன்கள் தென்பட்டன.


இரண்யாசூரன் எந்த சுரா மீன் உருவில் மறைந்துள்ளான் என்பது தெரியாமல் முருகன் தயங்கி நின்றார். அவர் தயங்கி நின்ற இடமே 'தயக்கம்பாடி' எனப்பெயர் பெற்று, பின்னர் மருவி 'தரங்கம்பாடி என்றானது.அந்த சமயம் தாங்கம்பாடியில் எழுந்தருளியிருந்த ஞான சக்தி திருக்காமேஸ்வரி, அரக்கனைக் கொல்ல முருகனுக்கு வஜ்ரவேல் கொடுத்தார். அவாது ஆசியுடன் முருகப்பெருமான் மாயையால் மறைந்து இருந்த இரண்யாசூரனை சம்ஹாரம் செய்தார்.


ஐந்நூறு விநாயகர்


சிவ பக்தனாகிய இரண்யாசூரனை சம்ஹாரம் செய்ததால் முருகனுக்கு பாவ தோஷம் ஏற்பட்டது. அது நீங்குவதற்காக திருவிடைக்கழி சென்று சரவண பொய்கையில் நீராடி சிவ பூஜை செய்யும்படி முருகனுக்கு ஞான சக்தி அம்மையார் உபதேசம் செய்தார். அதன்படி முருகன் கடலாழியாற்றின் வடகரை வழியாக, பிடவூர் என்ற இடத்தில் சென்ற போது, இத்தலத்தில் இருந்த விநாயகரை முருகன் வழிபட தவறிவிட்டார். தன்னை நினைவில் கொள்ளாமல் சென்ற குமரனை, இத்தலத்திற்கு வரச்செய்ய, கடலாழியாற்றில் பெரும் வெள்ளம் வரும்படி செய்தார், விநாயக பெருமான்.


இதனால் மறு கரைக்கு செல்ல முடியாமல் முருகப் பெருமான் தவித்தார், பின்னர் தன் சகோதரர் விநாயகரை நினைத்து 500 பாடல்களை பாடினார், இதனால் மனம் மகிழ்ந்து தன் துதிக்கையால் குமானை தூக்கி தென்கரையில் விட்டார் விநாயகர். இதனால் இத்திருத்தல கோவிலுக்கு நேர் எதிரே மேற்கு நிலையில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு "ஐந்நூறு விநாயகர்" என பெயர் ஏற்பட்டது.


குரா மரத்தடியில் சிவ பூஜை'


தென்கரைக்கு வந்த முருகன் நான்கு திசையின் எல்லைகளிலும் அய்யனாரை காவல் வைத்தார், பின்னர் இத்தலத்தில் இருந்த திருக்குராமரத்தின் நிழலடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குரா மலரால் பூஜை செய்து வழிபட்டார். சிவபெருமானும் தன்னை வழி பட்ட குமரனின் பாவதோஷத்தை நீக்கி அருள் ஆசி வழங்கினார். அப்போது முருகன், "என் பாவத்தை நீக்கி அருள் வழங்கியதை போல் சகல தோஷத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு வந்து வணங்கும் பட்சத்தில், அவர்கள் பாவங்களை நீக்கி அருள வேண்டும்" என்று சிவனிடம் வேண்டினார்.


அதற்கு சிவன் "அப்படியே ஆகட்டும்" என்று வரமளித்தார். பின்னர் பாவ தோஷம் நீங்கிய முருகப்பெருமான், தன் தந்தையை வணங்கி விடை பெற்று திருப்பரங்குன்றம் சென்றார். அங்கு தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். குமரன் பூசித்த சிவ லிங்கம், முருகனின் முன்னால் ஸ்படிக லிங்கமாக உள்ளது. இத்திருத்தலத்தில் தல விருட்சமாகிய திருக்குராமரத்திற்கு எதிரே, மேற்கு திசையில் திருக்காமேஸ்வரர் சன்னிதி உள்ளது. இதுதான் ஆதித் திருக்கோவிலாக விளங்கியது. தன்னை நினைத்து குரா மரத்தடியில் அமர்ந்து பூஜித்து வந்த சுப்பிரமணிய சுவாமியை மூலவராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருளுமாறு கூறினார் சிவன்.


ஆலய அமைப்பு


கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் எழு நிலைகளுடன் காட்சி தருகிறது. உள்ளே சென்றால் கொடிமரமும், பலி பீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. தலவிருட்சம் 'குராமரம்' தழைத்துக் காட்சி தருகிறது. குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணா மூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்த லத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.


உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிர மணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியோரை வணங்கலாம். கருவறையில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமியும், அவருக்கு பின்புறம் வடமேற்கு மூலையில் ஸ்ரீ பாபவிநாசப்பெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார். இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார்.


சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத் தக்கது.


இத்திருத்தலத்தில் தெய்வானை தென்திசை நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கிறார். அந்த அன்னை குமரன் நிற்கின்ற திசையை நோக்கி திருமுகம் திருப்பிய நிலையில் எழுந்தருளியுள்ளார். "முருகன் எப்போது சிவபூஜை முடித்து தன்னை கரம் பிடிப்பார்" என்று அவர் நினைக்கும் மனநிலையை இது தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.


இத்தல முருகனை வழிபட்டாலே ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள மாங்கல்ய தோஷம், நாக தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் விலகி நிறைவான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.


தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.


கோவில் அமைவிடம்


சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடையூருக்கு தென் மேற்காக 6 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.


Source 

தினத்தந்தி -அருள்தரும் ஆன்மீகம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்